சுடும் நிலவு சுடாத சூரியன் – 21
"ஸோ, நாம சத்தியமங்கலத்துக்குப் போறோமா?" என கேட்ட அகிலனிடம், "போறோம் இல்லை, போறேன்" என்றான் மித்ரன்.
"நாங்க நேர்த்திக் கடன் செலுத்த போறோம். நீயும் அங்கே வந்தா, அவன் சந்தேகப்படுவான்" என்றான் மித்ரன்
"யாரு என் மச்சானா?" என கேட்ட அகிலனை, அடிக்க பக்கத்தில் ஏதாவது இருக்கிறதா என பார்த்தான்.
"அவன் ஒரு பேச்சுக்கு, அமிதாவை பார்த்து ஸிஸ்டர் என்று ஒரு தடவை சொன்னா, அதையே சாக்கா வைச்சுட்டு என்னை வெறுப்பேத்திட்டு இருக்கே?" என எரிச்சலுடன் சொன்னான்.
"உனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான். சித்தார்த், அமிதாவோட டிரஸ் பொட்டிக்கு வந்து பார்த்து இருக்கான். அவ செய்யற டிஸைனை, எப்படி பிராண்டா மாத்தறது என்று சொல்லியிருக்கான். அதுவுமில்லாம, அவங்க அத்தை அமெரிக்காவில் நடத்தற டிரஸ் லைனில், இவ டிசைனையும் சேர்க்க, அவங்க அத்தைக்கிட்ட பேசியிருக்கான்" என சொன்னவனை நம்ப முடியாமல் பார்த்தான் மித்ரன்.
"அவன் செய்யறது உனக்கே ஓவரா தெரியலை. இதுவும் ஒரு வகையில் லஞ்சம் கொடுக்கிற மாதிரி தான்" என சொன்னவனை முறைத்தான் அகிலன்.
தான் பேசியது சற்றே எல்லை மீறி விட்டதை உணர்ந்த மித்ரன், "அகில், வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு அப்படி தெரியும் என்று சொன்னேன்" என சமாளிக்க முயன்றான்.
"அது பார்க்கிறவங்களோட பிரச்சனை" என நொடியில் தன்னை சமன் செய்து சிரித்த அகிலன், "மித்ரன், அவன் தெரிஞ்சு செய்யறானோ, தெரியாம செய்யறானோ, அவன் நம்மகிட்ட நெருங்கி வந்தாலும், நாம் அவங்கிட்ட நெருங்கி போனாலும், அவனுக்குத் தான் பிரச்சனை" என்றான்.
"அவன் என்னையும், அமிதாவையும் சத்தியமங்கலத்துக்குக் கூப்பிட்டிருக்கான்" என சொன்னான் அகிலன்.
"உங்களை எதுக்குக் கூப்பிட்டிருக்கான்?" என ஆச்சர்யமாக கேட்டான் மித்ரன்.
"அங்கே அவன் ஒரு வாரம் இருக்க போறான் போலிருக்கு. நாதன் ஸாரும், தாத்தாவும் அவங்கூட அங்கே இருக்க போறாங்களாம். அங்கே இருக்கிற வனவிலங்கு சரணாலயம், ஃபாரஸ்ட் ரிஸர்வ் சுத்தி பார்க்க போறானாம். தனியா சுத்த போரடிக்கும் என்று என்னையும், அமிதாவையும் கூப்பிட்டான்" என்றான் அகிலன்.
"அமிதாவும் சென்னை பொண்ணு, அந்த ஊரையெல்லாம் பார்க்க இது ஒரு சான்ஸ் என்பதால் சரியென்று சொல்லிட்டா" என்றான் அகிலன்.
"அமிதாவுக்கு, சித்தார்த்தும், ஸம்யுவை கடத்தினவனும் ஒரே ஆள் தான் என்று நாம சந்தேகப்படறோம் என்று தெரியுமா?" என கேட்டான்.
"இல்லை தெரியாது. தெரிஞ்சா அவ நார்மலா இருக்க மாட்டா. அவ நார்மலா, அவன் கிட்ட பழகினா தான் நமக்கு வசதி" என அகிலன் சொன்ன போது, சரியென்று தலையசைத்தான் மித்ரன்.
"நீ எப்போ கிளம்பறே?" என கேட்டான் மித்ரன்.
"அமிதா, நாளைக்கு அதாவது திங்கட்கிழமை சித்தார்த்தோட அவன் காரிலேயே போறாள்" என்றான்.
"நீ போகலையா?" என கேட்டான்.
"இல்லை, எனக்கு செவ்வாய்கிழமை வேற ஒரு கேஸில், கோர்ட் ஹியரிங் இருக்கு. நான் அதற்குப் பிறகு தான் போகனும்" என சொன்ன அகிலன், "நீங்க எப்போ போறீங்க?" என கேட்டான்.
"நாங்க புதன் கிழமை கிளம்பறோம். வெள்ளிகிழமை கோயிலுக்குப் போயிட்டு சனிக்கிழமை திருமபறோம். நீயும் எங்க கூட வாயேன்" என்றான்.
"நான் செவ்வாய்கிழமை கன்ஃப்ர்ம் பண்றேன்" என சொன்ன அகிலன், "நீங்க எங்கே தங்க போறீங்க?" என கேட்டான்.
"வெற்றிவேல் தாத்தா வீட்டில் தான்" என மித்ரன் சொன்னதும் அதிர்ச்சியாக பார்த்தான் அகிலன்.
"வேற வழியில்லை. கல்யாணத்துக்கு முன்னாடி சசி வீட்டில் தங்க முடியாது போலிருக்கு. அம்மாவுக்கு ஹோட்டல் பிடிக்கலை. அதனால் அப்பா, தாத்தாகிட்ட அவங்க வீட்டை தங்கறதுக்குக் கேட்டார் போலிருக்கு, அவரும் சந்தோஷமா, நாங்களும் போறோம், நீங்களும் வாங்க, எல்லோரும் ரொம்ப நாள் கழிச்சு ஒன்றாக இருக்கலாம் என்று சொன்னாராம்" என சொன்னான் மித்ரன்.
"உங்க பேரண்ட்ஸுக்கு, சித்தார்த்தை நாம் சந்தேகப்படறது தெரியுமா?" என கேட்டான் அகிலன்.
"இல்லை தெரியாது. ஸம்யுவிற்கும், நாங்க அங்கே போகும் போது, சித்தார்த் அதே வீட்டில் தான் இருக்க போறான் என்பதும் தெரியாது. அப்பா கிட்ட சொல்ல வேண்டாம் என்று சொல்லிட்டேன்" என யோசனையுடன் சொன்னான் மித்ரன்.
"இது ரிஸ்க்கான விஷயமா உனக்கு தோணலை?" என கேட்டான் அகிலன்.
"கேட் அண்ட் மவுஸ் கேம் தான். சித்தார்த் அடுத்த ஞாயிறு சத்தியில் இருந்து வந்து, திங்கட்கிழமை ராத்திரி அமெரிக்கா கிளம்பறான். நடுவில் நமக்கு இருக்கிறது இந்த ஒரு வாரம் தான். வேற வழியே இல்லை, நாம் ரிஸ்க் எடுத்து தான் ஆகனும். இந்த ஒரு வாரத்துக்குள்ளே நம்ம வேலையை முடிச்சாகனும், இல்லைனா, திங்கட்கிழமை அவன் பறந்துடுவான். அதற்கு பிறகு நாம நினைச்சாலும் அவனை ஈஸியா எதுவும் பண்ண முடியாது" என மித்ரன் சொன்னதும், அகிலன் தீவிரமாக யோசிக்கலானான்.
ஸம்யுக்தாவிற்கு பயணத்தில் எட்டு மணி நேர சென்றதே தெரியவில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு குடும்பமாக வெளியே வந்திருந்தனர். அகிலன் அவர்களுடன் வந்ததில், வழி நெடுகிலும் அவனது பேச்சில், அவள் சிரித்துக் கொண்டே வந்தாள். கடத்தலுக்குப் பிறகு ஒரு வித மன இறுக்கத்திலும், சொல்ல தெரியாத குழப்பத்திலும் இருந்தவள், தன் தயக்கத்தை மீறி இயல்பாக பேச தொடங்கினாள்.
வழியில் மதிய உணவுக்காக கிருஷண்கிரியில் நிறுத்தியதை தவிர, வேறு எங்கும் நில்லாமல் வந்திருந்தனர்.
ஒரு பெரிய வீட்டு வாசலில் வந்திறங்கியவுடன், நாதன் அங்கிள் வெளியே வந்து வரவேற்றார். தரை தளமும், மாடியில் ஒரு தளமும் இருந்த அந்த வீடு பரந்து விரிந்திருந்தது. வீட்டை சுற்றிலும் பெரிய மரங்களும், வீட்டு வாசலின் முன் பூ செடிகளும் நிறைந்திருந்தது. வீட்டின் எதிரே தெரிந்த கருமையான மலைதொடர் பார்ப்பதற்கு, விடுமுறை வாசஸ்தலம் போல இருந்தது.
மித்ரனுக்கு சின்ன வயதில் இங்கே வந்த்து ஞாபகம் இருக்க, ஸம்யுவிற்கு ஞாபகமே இல்லை. நாதன் இவர்களுக்கு கீழ் தளத்தில் இரு அறைகள் ஒதுக்கி கொடுத்தார். அகிலனுக்கு மேலே இருந்த தளத்தில் அவனது அறை இருப்பதாக சொன்னார்.
ஸம்யுவும், வினோதினியும் ஒரு அறையிலிருக்க, வசந்தனும், மித்ரனும் மறு அறையில் இருந்தனர். ஃபிரஷ்ஷாகி, வசதியான காட்டன் ஸல்வாருக்கு மாறிய ஸம்யு, வெளியே வந்தாள். மாலை நேர தேனீரும், தட்டையும் சாப்பிட்டு விட்டு, வசந்தனின் ஒன்று விட்ட பெரியப்பா வீட்டிற்கு சென்றனர். அங்கே பேசி கொண்டிருந்து விட்டு, இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பினர்.
இரவு உணவு சாப்பிட, அவளுக்குப் பசியில்லை என்றாலும், வினோதினியின் வற்புறுத்தலால் சாப்பிட சென்றாள். பயண களைப்பினால் உடல் சோர்ந்திருந்து, தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டு வந்தது. பெரிய சாப்பாட்டு மேஜையில் மித்ரனின் அருகே அமர்ந்திருக்க, அவனது அருகே சென்றமர்ந்தாள். வினோதினியும், வசந்தனும் யாருடனோ ஹாலில் பேசி கொண்டிருந்தனர்.
"எனக்கு நல்லா தூக்கம் வருதுண்ணா. நாம சாப்பிடலாமா?" என கேட்டாள் ஸம்யுக்தா.
"இரண்டு நிமிஷம் வெயிட் பண்ணு, அவங்களும் வரட்டும்" என்றாn.
சரியென்று தலையசைத்தவள், அதற்கு மேல் தெம்பில்லாமல், மேஜையில் தலை சாய்த்து படுத்துக் கொண்டவள், அப்படியே அசந்து தூங்கி விட்டாள்.
"ஸம்யு" எனற மித்ரனின் லேசாக அவளை தோளில் தட்ட, மசமசத்த கண்களுடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
வெற்றி வேல் தாத்தாவின் குரல் சத்தமாக கேட்டு, அனிச்சையாக திரும்பி பார்க்க, அவர் வசந்தனின் அருகே அமர்ந்திருந்தார். இது அவரது வீடு என்று அவளுக்குத் தெரியும், ஆனால் இந்த சமயத்தில் அவரும் சத்தியமங்கலத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இவர் இங்கிருந்தால், ஒரு வேளை.. என்று அவள் யோசித்த படியே பார்வையை திருப்ப, எதிரே சித்தார்த், அவனது செல்போனில் எதையோ பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவனை பார்த்ததும் மனதில் பலவித உணர்வுகள் தோன்றி மறைந்தன. பயம், கோபம், வெறுப்பு, அதிர்ச்சி என கலவையாய் உணர்வுகள் தோன்றினாலும், மனதின் ஒரத்தில் லேசான குறுகுறுப்பும் எட்டிப் பார்த்தது. மனதின் உணர்வுகள் முகத்தில் தெரிய தொடங்க, தலையை குனிந்து கொண்டாள்.
"ஹாய் ஸம்யு" என அவள் தோளை தட்டி பக்கத்தில் அமர்ந்த அமிதாவை பார்த்ததும் ஆச்சரியமடைந்தாள்.
"அண்ணி, நீங்க எங்கே இங்கே?" என சந்தோஷமாக கேட்டாள்.
"நான் இந்த ஊரை பார்த்ததில்லை என்று சித்தார்த் கிட்ட சொன்னேன். அவன் வரும் போது என்னையும் கூப்பிட்டு வந்தான்" என்ற அமிதா சித்தார்த்தைப் பார்த்துச் சிரித்தாள்.
அவளைப் பார்த்து, "ஹாய்" என சம்பிரதயாமாக சொல்லிவிட்டு, சித்தார்த் தன் செல்போனில் ஆழ்ந்தான்.
அமிதாவின் அருகே அகிலன் அமர, இரவு உணவை சாப்பிட்டபடியே பேசினர்.
எல்லோரும் ஏதோ பேசி கொண்டிருக்க, ஸம்யுவிற்கு சாப்பிடவும் தோன்றவில்லை, பேசவும் தோன்றவில்லை. அமிதா கேட்ட, கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு சாப்பிட்டு எழுந்தாள்.
தன் அறைக்குச் சென்றூ படுக்கையில் படுத்தவள், நன்றாக தூங்கி விட்டாள். மறு நாள் காலை, அவள் எழுவதற்கு முன்பே வினோதினி குளித்து முடித்திருந்தார். சிறிது தொலைவில் உள்ள அவர்களது தூரத்துச் சொந்தகாரர்கள் வீட்டிற்கு வசந்தனுடன் செல்வதாக சொன்னார். ஸம்யு வீட்டிலே இருப்பதாக சொல்ல, அவர் கிள்ம்பி சென்றார்.
அவள் குளித்து விட்டு வெளியே வந்த போது, அமிதாவும், அகிலனும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்குக் காலை வணக்கம் சொல்லிவிட்டு, அவளும் காலை உணவை சாப்பிட்டு முடித்தாள்.
பெரிய வராண்டாவில் இருந்த சேரில் சென்றமர்ந்தவளின் அருகே அமிதா வந்து அமர்ந்தாள்.
"ஏன் ஸம்யு, ஒரு மாதிரி டல்லாயிருக்கே?" என கேட்டாள் அமிதா.
"தெரியலை அண்ணி, நேற்று எட்டு மணி நேரம் டிராவல் பண்ணதில் அலுப்பாயிருக்கு" என சலித்தபடி சொன்னாள்.
"இப்படியே உட்கார்ந்திருந்தா, இன்னும் போரடிக்கும், அலுப்பு தான் அதிகமாகும். பக்கத்தில் ஒரு புலிகள் சரணாலயம் இருக்கு, அதைப் பார்க்க போறோம். நீயும் எங்களோட வா ஸம்யு" என்றாள்.
"இல்லை அண்ணி, நீங்க இரண்டு பேரும் போயிட்டு வாங்க" என அவர்களுக்குத் தனிமை கொடுக்க நினைத்துச் சொன்னாள்.
"ஸம்யு, எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருஷம் ஆயிடிச்சு" என அமிதா சொல்லும் போது, "அமி டார்லிங், நமக்கு, மேரேஜ் முடிஞ்சு இரண்டு வருஷம் ஆயிடிச்சா? நம்பவே முடியலை. இரண்டு மாசம் மாதிரி வேகமாக ஓடி போச்சு" என்றான் அகிலன்.
"ஏன் ஓடி போகாது, வீட்டுக்கே வராம போலீஸ் ஸ்டேஷனையே கட்டிக்கிட்டு இருங்க, இரண்டு மாசம் என்ன? இரண்டு நாள் மாதிரி தெரியும்" என சொன்ன அமிதாவை, "இல்லை டார்லிங்.." என தொடங்கியவனை அமிதாவின் கோப பார்வை அமைதியாக்கியது.
"ஸம்யு, கிளம்பு, மித்ரனும் எங்க கூட வர்றான்" என சொன்னவுடன் வாசலில் நின்ற ஜீப்பின் பின் ஸீட்டில் அமிதாவுடன் ஏறி அமர்ந்தாள்.
எதிரே இருந்த ஸீட்டில் அகிலன் வந்து அமர்ந்தான். மித்ரன் தாமதமாக வந்து அகிலன் பக்கத்தில் அமர்ந்தான்.
வண்டியை ஸ்டார்ட் செயதவுடன், டிரைவரின் பக்கதில் தன் காமிராவுடன் அமர்ந்தான் சித்தார்த்.