பாகம் 45
காரை விட்டு கீழே இறங்கி, பிரகாஷ் மற்றும் சுதாவுடன் ரிசார்ட்டின் உள்ளே நுழைந்தாள் வர்ஷினி, அந்த ஒரு குறிப்பிட்ட நபரை தேடியபடி. அவனோ வந்தவர்களை உச்சரிப்பதிலும், தேவையான ஏற்பாடுகளை செய்வதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தான். அந்த மிகப் பெரிய கூடத்தின் உள்ளே நுழைந்த அவள், ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மேஜையுடன் கூடிய நாற்காலியில் போய் அமர்ந்தாள். அவள் தனியாக அமர்ந்திருந்ததை பார்த்த அனு, அவளிடம் ஓடிச் சென்றாள்.
"என்ன வர்ஷினி, இங்க தனியா உக்காந்திருக்க?"
"சும்மா தான்"
"இன்னிக்கு நீயும் ஒரு ஹீரோயின்... அதை மறந்துடாத"
"அவங்க எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணட்டும். நான் அப்புறம் வரேன்"
அனுவும் அவளுடன் அமர்ந்து கொண்டாள், அவளை தனியாக விட மனமில்லாமல்.
அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளின் பிரம்மாண்டம் வர்ஷினியை ஒன்றும் செய்யவில்லை. ஏனென்றால், அவள் இது போன்ற பல நிகழ்ச்சிகளை கண்டிருக்கிறாள். ஆனால், பிரகாஷும் சுதாவும் வாயை பிளந்தார்கள். அரசியல் தலைவரின் பார்ட்டி என்றால் சும்மாவா...! அந்தக் கூடம் வண்ணமயமாய் மின்னியது. அதன் அழகை ரசிக்காதவர்களே இல்லை, ஒருத்தியை தவிர... வர்ஷினி! தன் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாய் மாற்றிவிட்ட அந்த ஒருவனைத் தவிர வேறு எதன் மீதும் அவள் கவனம் செல்லவில்லை.
இரண்டு பெரிய சைஸ் கேக்குகள் அந்தக் கூடத்தின் நடுவில் வைக்கப்பட்டிருந்தன. நிமலுடன் அங்கு வந்த ராஜா, அனைவரையும் அருகில் வருமாறு அழைத்தான்.
தன் வாழ்வின் மிக முக்கியமான நபரை தேடினான் நிமல். அவள் அனுவுடன் ஒரு மூலையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவளை அழைத்து வருமாறு ஆகாஷுக்கு சைகை செய்தான். அங்கு செல்ல எத்தனித்த ஆகாஷை தடுத்தான் ராஜா. நிமலின் கையைப் பற்றி, வர்ஷினியிடம் இழுத்துச் சென்று, அவள் அருகில் நிற்க செய்தான். அங்கிருந்த அனைவரின் கண்களும் அவர்கள் மீது தான் இருந்தது. அங்கு தயாராக காத்திருந்த இன்னிசை குழுவை நோக்கி, ஆரம்பிக்குமாறு சைகை செய்தான் ராஜா.
தன் கையை வர்ஷினியை நோக்கி தயக்கத்துடன் நீட்டினான் நிமல். விண்ணை முட்டிய கைத்தட்டல் ஒலிக்கு நடுவில், தன் கையை அவன் கை மீது வைத்தாள் வர்ஷினி. அவர்களுடைய நடைக்கு ஏற்றவாறு, மென்மையாய் இசைக்க துவங்கினார்கள் மெல்லிசைக் குழுவினர். அங்கு கூடியிருந்த மக்கள், இருபுறமும் நின்று, அவர்களை கைதட்டி வரவேற்றார்கள்.
நிமலை நன்றாக பார்க்க கூடிய இடத்தில் சுதாவின் பக்கத்தில் நின்று கொண்டாள் வர்ஷினி. அவள் அழகில் ஒட்டுமொத்தமாய் மயங்கி போனான் நிமல். அவன் தன் கண்களை அவள் மீதிருந்து அகற்றவில்லை என்று கூற தேவையில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு, தன் இதயத்தில் இதமாய் ஏதோ உணர்ந்தாள் வர்ஷினி. பிரகாஷும், சுதாவும் கேக்கை வெட்ட தயாராக இருந்தார்கள்.
ராஜா தன் கையை வர்ஷினியை நோக்கி நீட்டிய போது, அவள் குழப்பமானாள். அவனைப் பார்த்து தன் விழிகளை விரித்த அவளை, கையை பற்றுமாறு சைகை செய்தான் ராஜா. அவள் தன் கையை கொடுக்க அவளை நிமலிடம் இழுத்துச் சென்று, தான் பற்றியிருந்த அவள் கரத்தை நிமலிடம் கொடுத்தான். அவர்களை சுற்றி இருந்த மக்கள் ஆர்ப்பரித்தார்கள்.
கேக்கை வெட்ட, தம்பதிகளிடம் கத்தியை கொடுத்தாள் அனு. பிரகாஷும், சுதாவும் கேக்கை வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டார்கள்.
நிமல் மற்றும் வர்ஷினியை நோக்கி கேக்கை வெட்டுமாறு பணித்தான் ராஜா. கத்தியை கையில் எடுத்து, நிமலை பார்த்தாள் வர்ஷினி. அவன் மென்மையாய் அவள் கரம் பற்றி அவளுடன் சேர்ந்து கேக்கை வெட்டினான். ஒரு சிறிய துண்டு கேக்கை எடுத்து அதை அவளை நோக்கி நீட்டினான். அதை கொஞ்சமாய் சாப்பிட்டு விட்டு மீதியை அவனுக்கு ஊட்டிவிட்டாள் வர்ஷினி. அது நிமல் எதிர்பாராதது.
பாடல்களும் ஆடல்களும் ஆரம்பமானது. பிரகாஷும் சுதாவும் கூட பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினார்கள். தனியாய் நின்று கொண்டிருந்த வர்ஷினியின் மீதே நிமலின் கவனம் இருந்தது. அவளை நோக்கி சென்ற அனு, திடுக்கிட்டு நின்றாள், திடீரென்று ஆகாஷ் அவள் முன் வந்து நின்றதால்.
"ஹாய், வாயேன் டான்ஸ் ஆடலாம்..." என்றான்.
"எனக்கு டான்ஸ் ஆட தெரியாது"
"நான் உனக்கு சொல்லி தரேன்"
"எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல"
"நீ கமிட்டடா?"
"என்னது?" என்று முகம் சுருக்கினாள்.
"ஐ மீன்... நீ காதலிக்கிறியான்னு கேட்டேன்"
"ஆமாம்"
"நெஜமாவா?"
"என்னுடைய பிஹெச்டி படிப்பை நான் ரொம்ப காதலிக்கிறேன்"
"ஓ... நான் நெனச்சேன்..."
"நீ என்ன நினைச்சிருப்பேன்னு எனக்கு தெரியும். காதல், பாய்ஃபிரண்ட், கல்யாணம், இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிறைய உருப்படியான விஷயங்கள் உலகத்துல இருக்கு"
"நீ சரியான போர்..."
"தேங்க்ஸ்"
அவர்கள் வர்ஷினி தனியாய் நிற்பதை பார்த்து, அவளிடம் சென்றார்கள்.
"ஏன் நீங்க தனியா நிக்கிறீங்க? நீங்க நிமல் கூட இருக்க வேண்டியது தானே?" என்றான் ஆகாஷ்.
அப்போது அவர்கள், நிமலை ராஜா எங்கோ அழைத்துச் செல்வதை பார்த்தார்கள்.
"இந்த ராஜாவை என்ன செஞ்சா தகும்? போன ஜென்மத்துல இவனுங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா இருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்." என்றாள் அனு.
களுக் என்று சிரித்தாள் வர்ஷினி.
"நிமலுக்கு கல்யாணம் ஆனதையே ராஜா மறந்து போயிடறான்..." என்றான் ஆகாஷ்.
"வா போகலாம்" என்று வர்ஷினியை, நிமலை நோக்கி இழுத்துச் சென்றாள் அனு.
......
நிமலின் கையில் ஒரு கண்ணாடி டம்ளரை கொடுத்தான் ராஜா.
"நான் குடிக்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா?" என்றான் நிமல் அமைதியாக.
"எனக்கு தெரியாதா? இது ஜஸ்ட் மாக்டைல்... எனக்காக இதையாவது குடி"
முகத்தை சுளித்தபடி அதை குடித்தான் நிமல்.
"என்ன கண்றாவி டேஸ்ட்டு டா இது?"
"இந்த ட்ரிங்க், ஃபர்ஸ்ட் டைம் குடிக்கும் போது அப்படித் தான் இருக்கு... இன்னொரு கிளாஸ் குடி, நல்லா இருக்கும்"
அவனிடம் இன்னும் ஒரு டம்ளர் மாக்டைல் கொடுத்தான்.
"எனக்கு வேணாம்..."
"நீ எதுவுமே சாப்பிடல... இதயாவது குடி"
கண்ணை மூடிக் கொண்டு அதையும் குடித்து வைத்தான் நிமல்.
"அவ்வளவு தான்..." என்றான் ராஜா.
சில நொடிகளிலேயே, தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தும் சுழல்வது போல் இருந்தது நிமலுக்கு.
"மச்சி, எனக்கு என்னமோ ஆகுது"
"இன்னும் கொஞ்ச நேரத்துல உண்மையிலேயே உனக்கு என்னமோ ஆகத் தான் போகுது" என்றான் ராஜா.
"என்ன அது?"
"நீ குடிச்சது மாக்டைல் இல்ல... காக்டைல்"
"என்னடா சொல்ற? எதுக்குடா என்னை குடிக்க வச்ச?"
அங்கு ஏற்கனவே, அனுவுடனும் ஆகாஷுடனும் வந்து விட்டிருந்தாள் வர்ஷினி. ராஜா, நிமலிடம் ஏதோ கூற, அது வர்ஷினியின் மூச்சையே நிறுத்தியது.
"நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் உன்னை குடிக்க வச்சேன். அந்த ரூம்ல ஒரு பொண்ணு உனக்காக காத்திருக்கா. போய் அவ கூட ஜாலியா இரு" என்று ராஜா கூறியதை கேட்டு வர்ஷினிக்கு குப்பென்று வேர்த்தது. நிமல் என்ன கூற போகிறானோ...
"முட்டாளா டா நீ...? நீ என்ன சொல்றேன்னு உனக்கு தெரியுதா...? பைத்தியக்காரா..." என்றான் பல்லைக் கடித்தபடி... நிற்க முடியாத நிமல்.
அவன் தோளை இறுகப் பற்றினான் ராஜா.
"நல்லா தெரிஞ்சு தான் சொல்றேன். நான் சொல்றத கேளு. நீ வர்ஷினிக்காக காத்திருந்தது போதும். அவ மனசை மாத்திக்க மாட்டா. உன்னை புரிஞ்சிக்காத ஒரு பெண்ணுக்காக உன்னுடைய வாழ்க்கைக் கெடுத்துக்காத"
"நீ சொல்ற பொண்ணு என்னோட வைஃப்... அவ என்னுடைய வைஃப் மட்டும் இல்ல... அவ தான் என்னுடைய லைஃப். அவ தாண்டா எனக்கு எல்லாமே... என்னை பத்தி நீ என்ன டா நினைச்சுகிட்டு இருக்க? என் மனசுல அவளை எந்த இடத்துல வச்சிருக்கேன்னு உனக்கு தெரியுமா?"
"அதனால் என்ன பிரயோஜனம்? அவளுக்காக காத்திருக்கிறதுல ஏதாவது பிரயோஜனம் இருக்கா?"
"நான் அவளுக்காக காத்திருக்கேன்... அதுவே பிரயோஜனமான விஷயம் தான்... அவ நிச்சயம் என்கிட்ட வருவா"
"எப்போ?"
"அவ ஏற்கனவே என் கூட தான் டா இருக்கா. என் மேல கோவமா இருந்தா கூட என்னை விட்டுட்டு அவ போகவே இல்ல... ஏன்னா, என்னை விட்டு அவளால போக முடியாது... எனக்கு தெரியும்... அதைப் பத்தி நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்ல... புரிஞ்சுதா உனக்கு"
அவன் கையை தட்டி விட்டு, அந்தக் கூடத்தை விட்டு வெளியேறி பின்புறம் சென்றான். ராஜா அவனை தடுக்கவில்லை. அவன் பேசியதை கேட்டு, கண்ணீர் வடித்தாள் வர்ஷினி என்று கூறத் தேவையில்லை அல்லவா...?
"அவன் சொன்னதை கேட்டியா? இது தான் அவன் உன் மேல வச்சிருக்கிற காதல். தன்னுடைய சுய நினைவுல இல்லாதப்ப கூட, உன்னை தவிர வேற எதையும் அவனால் யோசிக்க முடியாது" என்றாள் அனு.
"குடிகாரன் உண்மையத் தான் பேசுவான். நீங்க தான் அவனுக்கு எல்லாமே. தயவு செய்து அவனை புரிஞ்சுக்கோங்க" என்றான் ஆகாஷ்.
"ராஜா" என்று கூப்பிட்டாள் அனு.
ராஜா அங்கு வந்து நிற்க, அவனை குழப்பத்துடன் பார்த்தாள் வர்ஷினி.
"என்னை தப்பா நினைச்சுக்காதே வர்ஷினி. அந்த ரூம்ல எந்த பொண்ணும் இல்ல. நீ நிமலை புரிஞ்சுக்கணும்னு தான் அப்படி சொன்னேன். இதெல்லாம் நாங்க பிளான் பண்ணி தான் செஞ்சோம். அதுக்காக தான் வேணும்னே அவனை குடிக்க வச்சேன்" என்ற அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் வர்ஷினி.
"இப்பவாவது நீ அவனை புரிஞ்சுக்கவேன்னு நம்புறேன்"
ஒரு நொடி கூட அவள் அங்கு நிற்கவில்லை. நிமல் சென்ற திசையில் ஓடினாள். அவன் ஒரு மரத்தின் மீது சாய்ந்து கொண்டு நின்றிருந்தான். சிறு நடை நடந்து, அவனை நோக்கி வந்தாள் வர்ஷினி.
குடித்திருந்த நிலையில் கூட, அவள் வந்ததை பார்க்காமலேயே, அவளுடைய இருப்பை உணர்ந்தான் நிமல். அவள் தன் அருகில் நிற்பதை பார்த்து, தன் கரத்தால் வாயை மூடிக்கொண்டான். தடுமாறி விழப் போனவனை, தோளைப் பற்றி நிறுத்தினாள் வர்ஷினி.
"வர்ஷு, ஐ அம் சாரி... நான் குடிச்சிருக்கேன். குடிச்சா உனக்கு பிடிக்காதுல்ல...? ஐ அம் சாரி..."
"எனக்கு தெரியும், வாங்க"
"வர்ஷு, உனக்கு ஒன்னு தெரியுமா...? நான் என்னையே வெறுக்கிறேன்... நான் ஒரு யூஸ்லெஸ்... உதவாக்கரை... எதையும் சரி செய்ய முடியாத உதவாக்கரை" என்று உளறினான்.
"நம்ம அப்பறமா பேசலாம். இப்போ வாங்க வீட்டுக்கு போலாம்..."
"இல்ல... அதுக்கப்புறம் நீ என்கிட்ட பேச மாட்ட... எனக்கு தெரியும்... நீ என் மேல கோவமா இருக்க..."
"நிமல், சொல்றத கேளுங்க"
"இல்ல... நான் இப்பவே பேசணும். என்னை நம்பு வர்ஷு... நான் உன்னை ஏமாத்தல... உன் ஃபீலிங்ஸோட நான் விளையாடல... உனக்கு வலிக்க கூடாதுன்னு தான், நான் உண்மையை மறைச்சேன். நீ ஒரு மோசக்காரனை கல்யாணம் பண்ணிக்க எப்படி நான் விடுவேன்? அதனால தான், நான் ரிஷியை பிடிச்சு வச்சுக்கிட்டு உன்னை கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. ஆனா, எனக்கு வேற வழி தெரியல... நான் எப்பவுமே உன்னை காயப்படுத்த நெனச்சது இல்ல. ஏன்னா நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்... நீ என்னோட வர்ஷு... யூ ஆர் மை வர்ஷு"
மீண்டும் விழப் போனவனை கெட்டியாய் பற்றிக் கொண்டாள் வர்ஷினி.
"நிமல், போதும் நிறுத்துங்க. நான் ராஜாவை கூப்பிடறேன்"
"நோ... வேண்டாம்..."
அவள் முகத்தை தன் கையில் ஏந்திக் கொண்டான்.
"நாளைக்கே நான் செத்துட்டா நீ என்ன செய்வ?"
வர்ஷினியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
"என்கிட்ட பேசாம இருந்ததுகாக நீ வருத்தப்படுவல்ல? நம்மளுடைய இனிமையான நாட்களை வீணாகிட்டோமேன்னு வருத்தப்படுவல்ல? ப்ளீஸ், என்கிட்ட பேசு வர்ஷு. ப்ளீஸ்..."
அவளை அணைத்துக்கொண்டு *ப்ளீஸ்* என்ற வார்த்தையை தொடர்ச்சியாய் உச்சரித்துக் கொண்டே இருந்தான் நிமல்.
இதன் பிறகு, அவனிடம் பேசாமல் இருக்க வர்ஷினிக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ன? நிச்சயம் இல்லை. இப்படிப்பட்ட கேள்விகளை நிமல் அவளிடம் கேட்பான் என்று அவள் நினைத்து பார்க்கவே இல்லை. சாவை பற்றி பேசுகிறான் என்றால், அவன் எவ்வளவு தூரம் காயப்பட்டிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கும் அளவிற்கு வர்ஷினி ஒன்றும் முட்டாள் அல்ல. அவளுடைய கரங்கள் அனிச்சையாய் அவனை சுற்றி வளைத்துக் கொண்டன. நிமல் தன்னுடைய சுயநினைவை முழுவதும் இழந்து விட்டதை அவள் உணர்ந்தாள். அவள் பிடியிலிருந்து அவன் சறுக்கிக் கொண்டு சென்றான்.
"ராஜா... ஆகாஷ்..." என்று கத்தினாள் வர்ஷினி.
தூரத்திலிருந்து அவர்களை கவனித்துக் கொண்டிருந்த ராஜாவும், ஆகாஷும் அவர்களை நோக்கி ஓடி வந்தார்கள். நிமலை காரை நோக்கி தூக்கி சென்றார்கள். பின் சீட்டில் அமர்ந்து, நிமலை தன் மடியில் வாங்கிக் கொண்டாள் வர்ஷினி. அங்கிருந்து இனியவர்களின் இருப்பிடம் நோக்கி வண்டியைச் செலுத்தினான் ஆகாஷ்.
வர்ஷினியின் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர், நிமலின் முகத்தில் விழுந்த வண்ணம் இருந்தது. ஆகாஷ் கூறியது உண்மை தான். குடிகாரன் உண்மையை தான் பேசுவான். நிமலும் தன் மனதை வதைத்துக் கொண்டிருந்த அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டான்.
அந்த நாள், அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக மாறியது. குழம்பிப் போயிருந்த, தெளிவற்ற மனதின் காரணமாய், அதற்கு முன் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை, அன்று புரிந்து கொண்டாள் வர்ஷினி.
அவள் வாழ்க்கையின் முதலாம் பாகம், ஈவிரக்கமற்ற பெற்றோர்களால் மிகவும் கொடுமையாய் இருந்தது. ஆனால், இரண்டாம் கட்டத்தில், அவள் ஏங்கிக் கொண்டிருந்த அன்பை, அவள் மீது வாரி இறைக்க கூடிய மனிதர்களை வழங்கி, கடவுள் அவளை ஆசீர்வதித்தார். அவள் ஏன் துன்பத்தை அனுபவித்தாள் என்று நாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சில கேள்விகளை நாம் கேட்காமல் இருப்பதே சிறப்பு. ஏனென்றால், அவற்றிற்கு பதிலே இல்லை. இல்லாவிட்டால், ஆண்டவனின் திட்டத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு நாம் திறமைசாலிகளாக இல்லாமலும் இருக்கலாம். ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். வாழ்க்கையின் பிரகாசமான பக்கத்தை காட்டிய நல்ல மனிதர்களை நிச்சயம் வர்ஷினி இழக்கப் போவதில்லை, எப்பொழுதும்...!
தொடரும்...