பாகம் 23
காதல் என்பது ஒரு பரவசநிலை. அது தன்னையே மறக்கச் செய்கிறது... வாழ்வில் முன்பு எப்போதும் செய்யாத பலவற்றை செய்ய வைக்கிறது... யாரும் அறியாத ஒரு உலகத்தில் நம்மை சஞ்சரிக்க வைக்கிறது... சிரிக்க வைக்கிறது... அழவைக்கிறது... வெட்கப்பட வைக்கிறது...!
சாதாரண மனிதர்களின் நிலையே அப்படி என்றால், முன்பு எப்பொழுதும் அன்பை கண்டிராத வர்ஷினியின் நிலை பற்றி கூறவும் தான் வேண்டுமா? அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கவனிக்க, அவளுடைய பெற்றவர்களுக்கு வேண்டுமானால் நேரமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவள் முகத்தில் திடீர், திடீரென தவழ்ந்த புன்னகை ஒருவனை வெகுவாய் குழப்பியது.
அந்த ஒருவன் வேறுயாருமல்ல வர்ஷினியின் தம்பி ரிஷி தான். அவர்களின் வீட்டில், வர்ஷினியின் மீது அக்கறை கொண்டுள்ள ஒரே ஜீவன்... வர்ஷினினிக்கு, கார்த்திக்கை துளியும் பிடிக்கவில்லை என்பது அவனுக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது, அவளை புன்னகை வைப்பது எது? ஒருவேளை அவள், அந்த முட்டாளை விரும்பத் தொடங்கி விட்டாளோ? அவள் மீது பரிதாபப்பட்டான் ரிஷி. தான் கூர்ந்து கவனிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கவனிக்கவேயில்லை வர்ஷினி.
தனது அபக்கஸ் வகுப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ரிஷி, வர்ஷினி அவனது அறையில் அமர்ந்து, அவனுடைய ப்ராஜெக்ட் வேலையை செய்து கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தான். ஏனென்றால், இந்த முறை அவன் அவளிடம் உதவி கேட்கவேயில்லை.
"என்னக்கா செஞ்சுகிட்டு இருக்க?"
"உன்னுடைய ப்ராஜெக்ட் வொர்க்"
"ஆனா, நான் உங்கிட்ட கேட்கவே இல்லயே"
"நீ எங்கிட்ட கேட்கல.. ஆனா, நீ கேப்பேன்னு எனக்கு தெரியும்"
"என்னக்கா விஷயம் நீ ரொம்ப எக்ஸைட்டடா இருக்க...?"
வர்ஷினி எச்சரிக்கை அடைந்தாள்.
"எனக்கு எக்ஸாம் நெருங்கிகிட்டு இருக்கு. கொஞ்சம் பதட்டமா இருந்தது. கொஞ்சம் மைண்டை டைவர்ட் பண்ணலாம்னு இங்க வந்தேன்"
"நீ ஏன் கா கவலைப் படுறே? நீ தான் நல்லா படிச்சிடுவியே... உங்க கிளாஸ்லயும் நீ தானே டாப்பர்...!"
"இது ஃபைனல் செமஸ்டர்... இதை நல்லபடியா முடிச்சா தான், டிஸ்டிங்ஷன் கிடைக்கும். அதனால தான்"
"சரி. அப்போ இன்னைக்கு இங்கேயே இரு. நம்ம ரெண்டு பேரும் ப்ளே ஸ்டேஷன் விளையாடலாம்"
"ஓகே" சந்தோஷமாய் தலையசைத்தாள் வர்ஷினி.
"நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா?" என்று தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.
"கேளு கா"
"நாளைக்கு என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறியா?"
"நெனச்சேன்..." என்று சிரித்தான்.
"ப்ளீஸ் கூட்டிக்கிட்டு போயேன்..."
"சரி, கூட்டிகிட்டு போறேன். நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா கா?"
"எது வேணாலும் கேக்கலாம்..."
"உன்னை நம்ம அம்மா அப்பா ரொம்ப டார்ச்சர் பண்றாங்க... உன்கிட்ட ரொம்ப பார்ஷியலா நடந்துக்கிறாங்க. நீ அவங்ககிட்ட ரொம்ப கஷ்டப்படுற. அப்படி இருந்தாலும் நீ எப்படிக்கா கடவுளை நம்புற? நீ வணங்குகிற அம்மன், உன்னுடைய வேண்டுதலை எல்லாம் அமைதியா கேட்டுகிட்டு, உன்னுடைய கண்ணீரை பார்த்துகிட்டு, உனக்கு எந்த விதத்துலயும் உதவாம, அமைதியா உட்கார்ந்து இருக்காங்க... அப்புறம் எதுக்கு கா நீ கோயிலுக்கு போற?"
"ஏன்னா, பக்திங்குறது கொடுத்து வாங்குறது இல்ல... நமக்கு வேண்டியதை எல்லாம் கடவுள்கிட்ட கேட்கிறோம். கடவுள் நம்மகிட்டயிருந்து எதிர்பார்க்கிறது என்ன தெரியுமா?"
தெரியாது என்று தலையசைத்தான்.
"நம்பிக்கை. பக்திங்குறது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. அவங்க அமைதியா இருக்குறதால அவங்க எனக்கு ஹெல்ப் பண்ணலன்னு அர்த்தம் இல்ல. எல்லாத்துக்கும் ஒரு சரியான நேரம் வரணும். அந்த நேரம் வரும் போது எல்லாம் சரியா நடக்கும்"
"உன்னுடைய வாழ்க்கைல, அந்த சரியான நேரம் எப்ப வர போகுதோ தெரியல"
மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் வர்ஷினி. அவளுடைய வாழ்வில், அந்த *சரியான நேரம்* ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது அல்லவா!!! அவள் புன்னகையை கவனிக்க தவறவில்லை ரிஷி. ஆனால், அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
....
குமணன் உள்ளே நுழைவதை பார்த்து, எழுந்து நின்றார் கல்பனா. தன் கையிலிருந்த கோப்பை மேஜையின் மீது வைத்தார் குமணன்.
"எனக்கு காபி கொண்டு வா"
"ரொம்ப டயர்டா இருக்கீங்களே..."
"ஆமாம் பேக்-டு-பேக் மீட்டிங்ஸ் இருந்தது... ரொம்ப டயர்டா இருக்கு"
"அப்படின்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க"
"இல்ல. இந்த ஃபைலை நான் இன்னைக்கு ராத்திரியே சைன் பண்ணி ஆகணும். நாளைக்கு கொடுக்க வேண்டியிருக்கு... "
கல்பனாவிற்கு சட்டென்று பொறி தட்டியது. அவருக்கு தெரியும், எல்லா கோப்புகளையும் ஆற அமர படித்த பின்பே கையெழுத்திடும் பழக்கமுடையவர் குமணன். கல்பனா எச்சரிக்கை அடைந்தார். குமணனுக்கு காபி கொண்டு வர சமையலறையை நோக்கி சென்றார். அவர் காபியுடன் திரும்பி வந்த பொழுது, அவர் எதிர்பார்த்தபடியே அந்த கோப்பை குமணன் படித்துக் கொண்டிருந்தார். அதைப் படித்து முடிக்க, அவர் நாற்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.
"வந்து சாப்பிடுங்க"
"நான் ஸைன் பண்ணிட்டு வரேன்"
"புது கான்ட்ராக்ட் சைன் பண்ணும் போது, நல்ல நேரம் பார்த்து செய்யக் கூடாதா? நாளைக்கு காலையில அருமையான அமிர்தயோகம் இருக்கு. நீங்க எடுக்கிற காரியம் நல்லபடியா நடக்கும். காலையில ஸைன் பண்ணுங்களேன்... "
பெருமூச்சு விட்டார் குமணன்.
"சரி... அப்போ நான் காலையில ஸைன் பண்றேன். சாப்பிட போலாம்."
நிம்மதிப் பெருமூச்சு விட்டார் கல்பனா.
அவர்கள் உணவு மேஜைக்கு வந்தார்கள்.
"உன்னுடைய அபக்கஸ் கிளாஸ் எப்படி போய்கிட்டு இருக்கு?" என்றார் கல்பனா ரிஷியிடம்.
"குட் கோயிங் மா..."
சாப்பிட்டு விட்டு,
"நாளைக்கு நான் கோவிலுக்கு போறேன்" என்றான்.
"கோவிலுக்கு எதுக்கு?"
"என்னுடைய ஃபிரண்ட்ஸ் எல்லாம் வராங்க. அதனால நானும் போறேன்"
"சரி, போய்ட்டு வா"
"அக்காவையும் கூட்டிகிட்டு போறேன்"
"நீ உன் ஃபிரெண்ட்ஸ் கூட தானே போற? அவளை எதுக்கு கூட்டிட்டு போற...?"
"ஏன்னா, என் ஃபிரெண்ட்ஸ் யாருக்கும் அக்கா இல்ல..."
மேலும் அவர்களுடன் பேச்சுவார்த்தையை வளர்க்காமல் அங்கிருந்து சென்றான் ரிஷி.
மிகவும் களைப்பாக இருந்ததால் சீக்கிரமே உறங்கிப் போனார் குமணன். அவர் உறங்கிவிட்டார் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, வெற்று பத்திரங்களை, அவர் மறுநாள் கையெழுத்திட இருந்த கோப்புகளின் நடுவில் சொறுகி வைத்தார் கல்பனா.
மறுநாள் காலை
கல்பனா கூறியபடி, அமிர்த யோகத்தில் அந்த கோப்பில் கையெழுத்திட்டார் குமணன். அவர் அலுவலகம் கிளம்பிச் செல்லும் முன், அவர் உள்ளே வைத்த பத்திரங்களை உருவி எடுத்துக் கொண்டார் கல்பனா, அவர் திட்டமிட்டது போலவே.
இனியவர்களின் இருப்பிடம்
கோவிலுக்கு செல்ல ஆர்வத்துடன் தயாரானான் நிமல். பார்வதி கிளம்புவதற்கு முன்பாகவே அவன் தயாராகிவிட்டான். பார்வதியைத் தேடி சமையலறைக்கு வந்தான்.
"அம்மா, சீக்கிரம் கிளம்புங்க. நமக்கு லேட் ஆகுது"
"டேய், இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல...?"
"மா, வர்ஷினியால ரொம்ப நேரம் கோவில்ல இருக்க முடியாது. அதனால தான் மா சொல்றேன்"
"மணி ஒன்பது தான் ஆகுது. நான் அவளை பத்து மணிக்கு தான் வர சொல்லியிருக்கேன். அதனால கவலைப்படாம இரு"
அப்பொழுது அவர்கள்,
"நான் ரெடி" என்ற விஸ்வநாதனின் குரலைக் கேட்டார்கள்.
பட்டு வேட்டி சட்டையில் வந்து நின்ற விஸ்வநாதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்தான் நிமல். அவர் கோவிலுக்கு வரப்போகிறார் என்பது அவனுக்கு தெரியாது அல்லவா? பார்வதியைப் பார்த்து ஜாடையல் கேட்டான் நிமல். அவர் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டார்.
"நீங்க எங்கயோ வெளியில கிளம்பிட்டீங்க போல இருக்கே..." என்றான் நிமல்.
"ஆமாம்... என் மகனுடைய எதிர்காலம் நல்லா இருக்கணும்னு கோவில்ல பூஜை பண்ண போறேன்" என்றார் புன்னகையுடன்.
"ஆனா, நீங்க கோவிலுக்கு வர விரும்ப மாட்டீங்களே" என்றான் பதட்டமாக.
"என் மகன்னு வரும் போது, நான் என்னுடைய சொந்த விருப்பு வெறுப்பை எல்லாம் பார்க்க மாட்டேன்"
"நீங்க எனக்காக அப்படி செய்ய வேண்டியது இல்லப்பா"
"ஏன்...? உன் சந்தோஷத்துல பங்கெடுக்குற தகுதி எனக்கு இல்லயா?"
வாயடைத்து நின்றான் நிமல்.
"என் மருமகள என்னை பார்க்க விட மாட்டியா?"
"அப்படி இல்ல பா..."
"உங்க அம்மாவை மாதிரியே, எனக்கும் உன்னுடைய வாழ்க்கையில அக்கறை இருக்கு, நிம்மு..."
"எனக்கு தெரியும் பா..."
"அப்போ என்னையும் உங்க டீம்ல சேர்த்துக்கோங்க"
"நாங்க தான் பா உங்க டீம்ல இருக்கோம். கம்ப்ளீட் பண்ண வேண்டிய ப்ரொசிஜர் எல்லாத்தையும் முடிச்சுட்டு, கடைசியா ஃபைலை உங்க டேபிளுக்கு கொண்டு வரலாம்னு நெனச்சேன். ஏன்னா, நீங்க தான் எங்களுக்கு பாஸ்."
"இங்க யாரும், யாருக்கும் பாஸ் இல்ல. அதைப் புரிஞ்சுக்கோ"
சரி என்று புன்னகைத்தான் நிமல்.
அவர்கள் கோவிலுக்கு கிளம்பினார்கள்.
கோவிலில்
எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டு வர்ஷினிகாக காத்திருந்தார் பார்வதி. அவள் சரியாக பத்து மணிக்கு கோவிலில் நுழைந்ததை பார்த்து அவர் முகம் மலர்ந்தது. நிமலை தேடியபடி, பார்வதியை பார்த்து புன்னகைத்தாள் வர்ஷினி.
"எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன், ஆன்ட்டி. நிமல் வரலயா?"
அவர் பின்னால் பார்க்கும்படி சைகை செய்ய, நிமலுடன் ஒருவர் நின்றிருந்ததை பார்த்து அவள் குழம்பினாள்.
"நான் விஸ்வநாதன்... நிமலுடைய அப்பா..." தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"வணக்கம், அங்கிள்"
"ஒரு விஷயத்தை நான் கிளியர் பண்ண விரும்புறேன். ஒருவேளை, இந்தப் பையன் என்னை பத்தி உன்கிட்ட வில்லன் மாதிரி சித்தரிச்சிருந்தா, அவனை நம்பாதே. அம்மாவுக்கும் பையனுக்கும் ஒன்னா சேர்ந்துகிறதே வேலை... என்னை எப்ப பாத்தாலும் அவங்க தனியா விட்டுடுவாங்க... அதை நீயும் செய்ய மாட்டேன்னு நம்பறேன்"
"அப்பா, போதும்பா..." என்றான் நிமல்.
"எப்படி புளுகுறார் பாரு... அவரைப் பத்தி உனக்கு தெரியாது. ஒருத்தருக்கு தெரியாம மத்தவங்ககிட்ட இருந்து சப்போர்ட்டை வாங்கிடுவார். ஆனா, ஒண்ணுமே தெரியாத மாதிரி, இப்படி தான் பேசுவாரு" என்றார் பார்வதி.
"நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட ஓபனா இருந்தா, நான் ஏன் அப்படி செய்யப் போறேன்...? ஆனா, இனிமே எனக்கு அந்த பிரச்சனை இருக்காது. எனக்கு என் மருமக துணையா இருப்பா" என்றார்.
அதைக் கேட்டு வர்ஷினியின் கண்கள் விரிவடைந்தது. அவள் திடுக்கிட்டுப் போனாள். அவள் நிமலை பார்க்க அவன் புன்னகை புரிந்தான்.
"என்னம்மா ஒன்னும் சொல்லாம அமைதியா நிக்கிற? நீ என்னுடைய டீம் தானே?" என்று விஸ்வநாதன் கேட்க, ஆமாம் என்று தலையசைத்தாள்.
"நீங்க ரொம்ப பறக்க வேண்டாம். என் மருமகளை எப்படி என் பக்கத்தில் வச்சுக்கணும்னு எனக்கு தெரியும்" என்றார் பார்வதி.
"அப்படியா...?"
அவர்களைப் பார்த்து தன் கண்களை சுழற்றினான் நிமல். அவனுக்கு தெரியாதா, அவனுடைய அப்பா அம்மாவை பற்றி...? வர்ஷினியையும் அவளுடைய வீட்டின் நிலைமையையும் பற்றி தெரிந்து கொண்டதால், அவர்கள் அவளுக்கு மறைமுகமான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவள் அவர்கள் வீட்டுக்கு மருமகளாக வரப்போவதை நினைத்து அவர்கள் மிகவும் சந்தோஷபடுகிறார்கள் என்பதை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது பண்டிதர் அவர்களை பூஜைக்கு அழைத்தார். விஸ்வநாதனும் பார்வதியும் அவரை நோக்கி செல்ல, நிமலின் சட்டையை பிடித்து இழுத்தாள் வர்ஷினி. அவளை நோக்கி திரும்பினான் நிமல்.
"என்ன?"
"என்ன நடக்குது இங்க?"
"பூஜை"
"நான் அதை கேக்கல. அவங்க என்னை மருமகள்னு கூப்பிடுறாங்க..."
"ஏன்னா, நீ அவங்க மருமக" என்று சிரித்தான்.
"அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது? உங்க வாய் சும்மாவே இருக்காதா...? எல்லாத்தையும் போய் சொல்லிட்டீங்களா?"
களுக்கென்று சிரித்தான் நிமல்.
"அம்மா ரொம்ப நாள் முன்னாடியே நம்மளை ஸ்மெல் பண்ணிட்டாங்க... அவங்களுக்கு தெரிஞ்சதை நிச்சயம் அப்பாகிட்ட சொல்லுவாங்க"
"அவங்க என்னை மருமகள்னு கூப்பிட்ட போது, என்னுடைய ஹார்ட் ஒரு நிமிஷம் நின்னுடுச்சு"
"அதே நேரம், உன்னுடைய ஹார்ட் சந்தோஷத்தில் துள்ளிக் குதிச்சிருக்கும் தானே?"
ஆமாம் என்று தலையசைத்தாள் புன்னகையுடன்.
"நிம்மு, சீக்கிரம் வா" என்றார் பார்வதி.
"வா, போகலாம்" என்று அவளை அழைத்து வந்தான் நிமல்.
அவர்கள் இருவரின் பெயரிலும் சிறப்பு பூஜையும், அர்ச்சனையும் செய்யப்பட்டது. பூஜை முடிந்து, இரண்டு மலர் மாலைகளுடன் வந்தார் குருக்கள். ஒரு மலையை நிமலின் கழுத்தில் அணிவித்துவிட்டு, மற்றொரு மாலையை பார்வதியிடம் கொடுத்து வர்ஷினிக்கு அணிவிக்கச் சொன்னார். அவள் கழுத்தில் அதை அணிவித்தார் பார்வதி.
மாலையும் கழுத்துமாய் அவர்கள் இருவரையும் பார்க்க, புதுமண தம்பதிகளை போலிருந்ததால், பார்வதி பூரித்துப் போனார். பார்வதியை விஸ்வநாதன் அருகில் நிற்க வைத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற குனிந்தாள் வர்ஷினி. நிமலின் தோளை அழுத்தி, அவனையும் அவளுடன் சேர்ந்து கொள்ளச் செய்தார் விஸ்வநாதன். சிரித்தபடி தானும் ஆசீர்வாதம் பெற்றான் நிமல். தன் கழுத்திலிருந்த மாலையை வர்ஷினி நீக்கும் முன், தனது கைப்பேசியில் அனைவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டான் நிமல்.
அவர்கள் கோவிலை விட்டு கிளம்பும் நேரம் வந்தது. வர்ஷினியின் கண்கள் குளமாயின. அவர்களை விட்டுச் செல்ல அவளுக்கு மனமே இல்லை. அவள் கண்ணீரை துடைத்துவிட்டார் விஸ்வநாதன். அவள் தோளைச் சுற்றி வளைத்துக்கொண்டு,
"இன்னும் கொஞ்ச நாள் தான். அதுக்கு அப்புறம், நீ எங்க கூட தான் இருக்கப் போற. உனக்கு எந்த பிரச்சினைனாலும், நாங்க இருக்கோம் அதை மறந்துடாத..." என்றார்.
சரி என்று தலை அசைத்தாள் வர்ஷினி. அவளை சமாதான படுத்திவிட்டு வா என்று நிமலுக்கு சைகை செய்தார் விஸ்வநாதன். அவன் சரி என்று தலையசைக்க அவர் பார்வதியுடன் அங்கிருந்து சென்றார்.
"அழாத... அப்பா சொன்னத நீ கேட்கலயா? நீ சீக்கிரம் எங்க கூட வந்துடபோற."
"அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன்"
"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை செய்ய நான் முயற்சிப்பேன் "
"எனக்கு தெரியும்... இல்லன்னா, உங்க அம்மா அப்பாகிட்ட இந்த விஷயத்தை பத்தி நீங்க பேசி இருக்க மாட்டீங்க. ( மெலிதாய் புன்முறுவலித்தான் நிமல் ) நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்"
"எனக்கு தெரியும்"
"என்னோட வாழ்க்கையில வந்ததுக்காக உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்"
"எல்லாத்துக்கும் எமோஷன் ஆகாதே... அதுக்கு பதிலா என்ஜாய் பண்ண ஆரம்பி"
"இது தான் என்னுடைய என்ஜாய் பண்ற முறை."
"ஃப்யூச்சர்ல நீ அப்படி சொல்ல மாட்ட... உண்மையாவே சந்தோஷமா என்ஜாய் பண்ணுவ"
"நான் கிளம்புறேன். ரிஷி வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான்"
"டேக் கேர்"
சரி என்று தலையசைத்துவிட்டு, அவர்களை நோக்கி கையை அசைத்தபடி அரை மனதாய் அங்கிருந்துச் சென்றாள் வர்ஷினி.
இப்படிப்பட்ட ஒரு குடும்பம் தனக்கு கிடைக்காதா என்று தான் அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட அன்பானவர்களை அவள் வாழ்வில் அவள் பார்த்ததே இல்லை. அவர்கள் அவளை பரவசத்தில் திளைக்க வைத்து விட்டார்கள். விஸ்வநாதன் கூறியதைப் போல், அவர்களுடன் அவள் சென்று சேரும் அந்த ஒரு நாளுக்காக தான் அவளும் காத்திருக்கிறாள். அதே எண்ண ஓட்டத்தில் அவள் இல்லம் நோக்கி சென்றாள்.
அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, அவளை கோவிலுக்கு அழைத்து வந்த அவளுடைய தம்பி, அங்கு நடந்த அனைத்தையும் பார்த்து விட்டான் என்று.
தொடரும்....