11
மக்களை நல்லவர்களாக்குவதற்கு அவர்கள் மனதிலே உள்ள மாசுகளைப் போக்கவேண்டும். மக்கள் மனதிலே பல காலமாக மூண்டு போய்க் கிடக்கும் மதவெறி, அதன் கிளைகளான பேத புத்தி, வகுப்புத் துவேஷம், கொடுமை ஆகியவைகளைக் களைந்தாக வேண்டும். மக்கள் மனதிலே குரோதத்தை, துவேஷத்தை, சுய நலத்தைத் தூவும் முறையிலே உள்ள போதனைகளை, ஏற்பாடுகளை, எண்ணங்களை அகற்றியாக வேண்டும் என்று அவர் எண்ணினார்,
இந்து மதத்திலே ஏறிப்போய் ஊறிப் போயிருந்த கேடுகளைத் தமது பரிசுத்தவாழ்க்கையாலும், தூய்மையான உபதேசத்தாலும், புதிய விளக்க உரைகளாலும் நீக்கும் காரியத்தில் ஈடுபடலானார். அன்பு நெறி தழைக்க வேண்டும் என்றார். அவர் இந்த மதம், அவன் அந்த மதம், என்று குரோதம் கொள்ளாதீர் என்றார். இது பெரியது; இன்னொன்று தாழ்ந்தது என்று எண்ணாதீர், என்றார். தீண்டாமை போகவேண்டும் என்றார். அமளிக்கிடையே நின்று படுகொலைகள் நடைபெற்ற இடத்திற்கெல்லாம் சென்று கூறிவந்தார்.
மிக மிக எளிய வாழ்க்கையில் இருந்துகொண்டு இன்சொல் பேசி, எந்த முறையையும் ஐதீகத்தையும் ஒரே அடியாக ஒழித்துவிடும் புரட்சித் திட்டமும் கூறாமல், மக்களை நல்லவர்களாக்குமளவுக்குப் பழைய முறைகளிலே உள்ள தூசு தட்டி, மாசு போக்கி, பயனுடைய மனித மேம்பாட்டுக்கு உதவக்கூடிய ஏற்பாட்டினைச் செய்ய வேண்டுமென்று பாடுபடலானார். இதற்கு இவரைக் கொலை செய்தான் மாபாவி. எண்ணும்போதே நெஞ்சு பதறுவது மட்டுமல்ல; இவருடைய இன்சொல் முறைக்கே மதவெறி இவரைப் பலி கேட்டது என்றால், நாட்டிலே தலைகீழ் மாற்றம், செங்கோல், ஜபமாலை, இரண்டும்