உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 26, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்மோனியம் விசைப்பலகை வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி. பிரெஞ்சு நாட்டவரான அலெக்சாண்டர் தெபைன் என்பவர் 1840 இல் இதனை உருவாக்கினார். இவை அமுக்கத் துருத்திவகை, உறிஞ்சு துருத்திவகை என இரு வகைப்படும். ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இரு வகைக்கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். ஆனால் வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படும் அமுக்க வகையைச் சார்ந்தவை. மேலைநாடுகளில் இக்கருவி புகழ் பெற்றிருந்த 1900 காலப் பகுதியில், பல்வேறு பாணிகளில் இவை உருவாக்கப்பட்டன. எளிமையான அலங்காரங்களற்ற பெட்டிகளுடன் கூடியவை முதல் பெரிய அளவிலான, அழகூட்டல்களுடன் கூடியவையுமான பெட்டிகளைக் கொண்டவை வரை உருவாகின. 1930களில் மின்னணு ஆர்கன்களின் அறிமுகத்துடன் மேலை நாடுகளில் இவற்றுக்கான வரவேற்பும் குறையத் தொடங்கியது. தற்காலத்தில் மேலை நாடுகளிலுள்ள இவை பெரும்பாலும் ஆர்வலர்களிடமே உள்ளன. எனினும், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் ஆர்மோனியம் இன்னும் பெருமளவு பயன்பாட்டில் உள்ளது. மேலும்...


ஷெர்லக் ஹோம்ஸ் இசுக்காட்லாந்திய எழுத்தாளர் ஆர்தர் கொனன் டாயிலால் உருவாக்கப்பட்ட ஒரு துப்பறியும் கதை மாந்தர். இலண்டன் நகரில் வாழ்ந்த ஓம்சு ஒரு தனியார் துப்பறிவாளர். தனது கூர்மையான தருக்க காரணமாய்தல், வேடமணியும் திறமை, தடயவியல் திறன் ஆகியவற்றைக் கொண்டு சிக்கலான குற்றங்களைப் புலனாய்வதில் வல்லவர். 1887-இல் வெளியான எ ஸ்டடி இன் ஸ்கார்லெட் புதினத்தில் முதலில் தோன்றிய ஓம்சு, மொத்தம் நான்கு புதினங்கள் மற்றும் 56 சிறுகதைகளில் தோன்றியுள்ளார். 1927 வரை ஓம்சு தோன்றிய சிறுகதைகளும் புதினங்களும் தொடர்களாக வெளிவந்தன. அவை 1880-1914 காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை சித்தரித்தன. ஓம்சு கதைகள் துப்பறிவுப் புனைவுப் பாணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பல முறை மறுபதிப்பு கண்ட இக்கதைகள் வெளியாகி ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும் வாசகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. கோனன் டோயில் எழுதிய நூல்களைத் தவிர பல எழுத்தாளர்களும் ஓம்சு கதைகளை எழுதியுள்ளனர். ஓம்சின் கதைகளைக் களமாகக் கொண்டு பல நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும்..