வாடிப்பட்டி
தா. வாடிப்பட்டி | |
— தேர்வு நிலை பேரூராட்சி — | |
ஆள்கூறு | 10°05′02″N 77°57′59″E / 10.083909°N 77.966392°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
வட்டம் | வாடிப்பட்டி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 26,830 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30) |
இணையதளம் | www.townpanchayat.in/vadipatti |
தா. வாடிப்பட்டி அல்லது வாடிப்பட்டி (ஆங்கிலம்: T. Vadipatti or Vadipatti), இந்தியாவின் தமிழ் நாட்டில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலைப் பேரூராட்சி ஆகும். மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலை எண் 7-லும், மதுரையிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் உள்ளது. [4]
அமைவிடம்
[தொகு]மதுரை மாவட்டத்தில், (10°05′03″N 77°57′40″E / 10.0843°N 77.9610°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தா. வாடிப்பட்டி அமைந்துள்ளது.
"வாடிப்பட்டி" என்ற பெயர் வாயில் அல்லது வாசல் என்ற மூல வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது 'கதவு' அல்லது 'நுழைவாயில்'. இது மதுரையின் வரலாற்று எல்லைகளில் ஒன்றாகவும், நுழைவாயிலாகவும் இருந்தது, அதே போல் பாண்டியர்களின் முகாம் இடமாகவும் இருந்தது, இது குலசேகர பாண்டியன் காலத்திலிருந்து தெளிவாகிறது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் எருதுகட்டு விழா ஆகிய திருவிழாக்கள் இந்த நகரத்தில் புகழ்ப்பெற்று விளங்கியுள்ளது. மேலும், குலசேகர பாண்டியனின் அரண்மனை இந்நகரின் அருகே அமைந்திருந்தது.
இரண்டாகப் பிரிந்த வைகை ஆறு (முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய்) இந்த சிறிய நகரத்தின் தெற்கேயும், வடக்கே சிறுமலையும் பொன்மலையின் அடிவாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. வாடிப்பட்டிக்கு மதுரை விமான நிலையம் 40 கி.மீ. லும் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் [240 கி.மீ. (150 மை.)] ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது (சுமார் இரண்டரை மணி நேரம்). பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் அரண்மனை அமைந்திருந்த குலசேகரன் கோட்டை என்ற கிராமம் அருகில் உள்ளது; அவரால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இன்னும் உள்ளது.
வாடிப்பட்டி சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி மற்றும் தேனி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
அதன் நெல் வயல் மற்றும் வாழை வயல் உள்ளூர்வாசிகளுக்கு விவசாய ஆதாரங்கள். இந்த கிராமத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் வாரச்சந்தை நடைபெறுகிறது.
தாதம்பட்டி மற்றும் எல்.புதூர் முக்கிய பகுதிகளாக பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ளன. நீரேத்தான், தாதம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, குலசேகரன் கோட்டை, கச்சைகட்டி, செமினிப்பட்டி, குற்றாலப்பட்டி (குட்லாடம்பட்டி), விராலிப்பட்டி போன்ற சிறிய கிராமங்கள் இந்நகரத்தின் பகுதிகளாக மாறிவிட்டன. முல்லை பெரியாறு வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்ட கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு; முக்கியமாக நெல், வாழை மற்றும் தென்னை போன்ற பயிர்களுக்கு ஆதராமாக உள்ளது. ஆறு மற்றும் வளமான நிலம் மற்றும் நீர் காரணமாக விவசாய பகுதி ஆண்டு முழுவதும் பசுமையாக உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்மன் கோயில், ஆரோக்கிய அன்னை திருத்தலம், தொழுகை பள்ளி வாசல், வல்லப கணபதி கோயில், மேட்டுப்பெருமாள் கோயில் என்றழைக்கப்படும் புதடையான் கோயில், நவநீதப் பெருமாள் கோயில், பொன்னர் சங்கர் திருக்கோவில், முல்லைப் பெரியாறு கால்வாய்க் கரையில் ஆதி அய்யனார் கோயில், பாலதண்டாயுதபானி கோயில் உள்ளிட்ட பழமையான கோயில்கள் இங்கு அமைந்துள்ளன. வாடிப்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபானி முருகன் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வைகாசி விசாகத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிப்பட்டியிலுள்ள புகழ்மிக்கதான ஆரோக்கிய அன்னை திருத்தலம் இரண்டாம் வேளாங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறது.
வாடிப்பட்டி ஒரு தாலுகா தலைமையகம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. இங்கு ஹாக்கி விளையாட்டில் முத்து பதிக்கும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப் பள்ளி, கல்வியில் சிறந்து விளங்கும் தாய் நிறுவன பள்ளிகள் மற்றும் தாய் பெண்கள் கல்லூரி, ஃபுஸ்கோஸ் பள்ளி, வெங்கடாஜலபதி பள்ளி மற்றும் சார்லஸ் பள்ளி போன்ற பள்ளிகள் இந்நகரத்தின் கல்வி மற்றும் விளையாட்டின் ஊற்றாக உள்ளன. வாடிப்பட்டி ஏராளமான ஹாக்கி வீரர்களை உருவாக்கியுள்ளது; அவர்களில் சிலர் தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர், அத்துடன் பாதுகாப்பு, வங்கி மற்றும் தணிக்கை PSU ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பெயர்களை பெற்றுள்ளனர்.
வாடிப்பட்டி தொடர்வண்டி சந்திப்பானது சரக்கு ஏற்றும் மையமாக செயல்பட்டு வருகிறது. வாடிப்பட்டிக்கு மதுரை விமான நிலையம் 40 கி.மீ. லும் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் (240 கி.மீ. (150 மை.)) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது (சுமார் இரண்டரை மணி நேரம்).
TAFE, மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, திண்டுக்கல் சிப்காட் (வாடிப்பட்டிக்க்கு அருகில்), அலங்காநல்லூர் கரும்புத் தொழிற்சாலை, குளிர்பதனக் கிடங்கு, ரப்பர் உதிரி பாகங்கள், தின்பண்டங்கள் போன்ற பல்வேறு பெரிய நிறுவனங்களைக் கொண்டும் சிறு தொழில்களைக் கொண்டும் இந்நகரம் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 26,830 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 13,326 ஆண்கள், 13,504 பெண்கள் ஆவார்கள். வாடிப்பட்டியில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட கூடுதலானது. வாடிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 80.49% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.03%, பெண்களின் கல்வியறிவு 74.08% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% க்கு சமமானதே. வாடிப்பட்டி மக்கள் தொகையில் 2,785 (10.38%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு கூடுதலாக உள்ளது.
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.34% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 1.45%, இஸ்லாமியர்கள் 0.58% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். வாடிப்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 21.78%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். வாடிப்பட்டியில் 6,788 வீடுகள் உள்ளன.[5]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "வாடிப்பட்டி பேரூராட்சி". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
- ↑ Vadipatti Population Census 2011 பார்த்த நாள்: நவம்பர் 26, 2015
வெளி இணைப்பு
[தொகு]- வாடிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம் பரணிடப்பட்டது 2019-03-25 at the வந்தவழி இயந்திரம்
- விக்கி மேப்பியாவில் வாடிப்பட்டி அமைவிடம்