உள்ளடக்கத்துக்குச் செல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்பாஃப் டு பிளெசீ
பயிற்றுநர்சஞ்சய் பாங்கர்
உரிமையாளர்யுனைடட் ஸ்பிரிட்ஸ் லிமிடட்[1]
அணித் தகவல்
நகரம்பெங்களூர், கர்நாடகா, இந்தியா
உருவாக்கம்2008
உள்ளக அரங்கம்எம். சின்னசுவாமி அரங்கம்
(கொள்ளளவு: 40,000)
அதிகாரபூர்வ இணையதளம்:royalchallengers.com

இ20ப

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சுருக்கமாக ஆர்சிபி என்று அழைக்கப்படுகிறது) என்பது கர்நாடகாவின் பெங்களூர் நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். இது 2008ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் பிரபல மதுபான வகையான ராயல் சேலஞ்ச் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த அணிக்குப் பெயரிடப்பட்டது. இதன் உள்ளக அரங்கமாக எம். சின்னசுவாமி அரங்கம் உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை எந்தவொரு ஐபிஎல் தொடரிலும் வென்றதில்லை. எனினும் மூன்று தொடர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

உரிமைக்குழு வரலாறு

[தொகு]

செப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது போட்டித் தொடரை நிறுவியது. அது 2008ஆம் ஆண்டில் தொடங்கப்படுவதாக அறிவித்தது, இந்தத் தொடருக்காக பெங்களூர் உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் 20 பிப்ரவரி 2008 அன்று மும்பையில் ஏலம் விடப்பட்டன. பெங்களூர் அணியின் உரிமையை விஜய் மல்லையா வாங்கினார், அதற்காக அவர் 111.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தினார். இது மும்பை அணிக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செலுத்திய 111.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அடுத்தபடியாக ஒரு அணியின் இரண்டாவது அதிகபட்ச ஏல விலையாக இருந்தது.

அணியின் வரலாறு

[தொகு]

2008-2010

[தொகு]

2008ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குழுநிலைச் சுற்றின் 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்றது, இதனால் எட்டு அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. அணியில் டிராவிட் மட்டுமே அத்தொடரில் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்திருந்தார்,

2009ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவராக கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டார். அந்த அணி தொடரின் முதல் ஆறு ஆட்டங்களில் இரண்டை மட்டுமே வென்றது. இருப்பினும், பீட்டர்சன் தனது நாட்டு அணிக்காக கடமையாற்றச் சென்றதால் தலைவர் பொறுப்பை கும்ப்ளே ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு அணியின் நிலை மேம்பட்டது, மீதமிருந்த எட்டு குழுநிலைப் போட்டிகளில் ஆறில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. பிறகு அரையிறுதிப் போட்டியில் சூப்பர் கிங்ஸை 5 இழப்புகளால் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் முடிவில் ஆறு ஓட்டங்களால் தோல்வியுற்றது.

2010 ஆம் ஆண்டில், கும்ப்ளேவின் தலைமையில் தொடர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14 போட்டிகளில் இருந்து 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றது. இதனுடன் மற்ற 3 அணிகளும் அதே 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இதனால் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை விட அதிக நிகர ஓட்ட விகிதம் பெற்றிருந்த சேலஞ்சர்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதில் பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 35 ஓட்டங்களால் தோல்வியுற்றது. பிறகு மூன்றாம் இடத்துக்கான தகுதிச்சுற்றில் டெல்லி அணியை 9 இழப்புகளால் வீழ்த்தியதன் மூலம் 2010 சாம்பியன்ஸ் லீக் இ20ப தொடருக்குத் தகுதிபெற்றது. அந்தத் தொடருடன் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே ஓய்வு பெற்றார்.

2016ஆம் ஆண்டு ஒரு ஐபிஎல் பருவத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் (973) என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்

2011-2017

[தொகு]

2011ஆம் ஆண்டு ஐபிஎல்லின் நான்காம் பருவத்தில் பெங்களூர் அணியை வெட்டோரி வழிநடத்தினார். முதலில் வெற்றியுடன் தொடங்கிய அணி பிறகு மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்வி கண்டது. இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் டிர்க் நானெஸ் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார், இவருக்கு பதிலாக மேற்கிந்திய தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அணியில் சேர்க்கப்பட்டார். அதற்குப்பிறகு பெங்களூர் அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்றது. மேலும் தங்களது கடைசி குழுநிலைப் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை 8 இழப்புகளால் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. மும்பையில் நடந்த முதல் தகுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் 6 இழப்புகளால் தோல்வியுற்றது. பிறகு 2வது தகுதிச் சுற்றில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி 58 ஓட்டங்களால் தோல்வியுற்றது. கிறிஸ் கெய்ல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெங்களூர் அணி 7 போட்டிகளில் தொடர்ந்து வென்றதன் மூலம் தொடர்ந்து அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற புதிய ஐபிஎல் சாதனையை படைத்தது.

2012ஆம் ஆண்டு வெட்டோரி தலைமையில் ஆர்சிபி அணி தொடர்ந்தது. தொடரின் நடுவில் டேனியல் வெட்டோரி அணியில் இருந்து விலகினார். எனவே அணித்தலைவராக விராட் கோலி நியமிக்கப்பட்டார். 8 வெற்றிகள், 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தைப் பிடித்த ஆர்சிபி அணி தகுதிச்சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. எனினும் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக கிறிஸ் கெயில் இருந்தார்.

2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி அணி தகுதிச்சுற்றுக்கு முன்னேறவில்லை. 2015ஆம் ஆண்டு குழுநிலைச் சுற்றின் 14 போட்டிகளில் 7இல் வென்று புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடம் பிடித்ததது. பிறகு வெளியேற்றும் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. எனினும் தகுதிச்சுற்றில் சென்னை அணியிடம் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

2016ஆம் ஆண்டு தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. எனினும் ஐதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 8 ஓட்டங்களால் தோல்வியுற்றது. இவ்வாறு ஆர்சிபி இறுதிப்போட்டியில் தோற்பது மூன்றாவது முறையாகும்.

2017ஆம் ஆண்டு தொடரில் ஆர்சிபி அணி 14 போட்டிகளில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

2018-2019

[தொகு]

2018 மற்றும் 2019 ஆண்டு தொடர்களில் ஆர்சிபி தகுதிச்சுற்று வாய்ப் மட்டபை இழந்தது. இவ்வாறு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 12 பருவங்களில் இதுவரை கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் ஒன்றாக ஆர்சிபி உள்ளது.

அணியின் அடையாளம்

[தொகு]
2016 முதல் 2019 வரை ஆர்சிபியின் சின்னம்

விஜய் மல்லையா நம்பர். 1 மெக்டவல்’ஸ் அல்லது ராயல் சேலஞ்ச் ஆகிய தனது மிக அதிகமாக விற்பனையாகும் மது வகைகள் இரண்டில் ஒன்றுடன் தனது அணியின் பெயர் தொடர்புபட்டதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.[2] இரண்டாவது வகை தெரிவு செய்யப்பட்டதால் இந்த பெயர் கிட்டியது. கர்நாடக அரசுக் கொடியின்[3] நிறங்களாக உள்ள சிவப்பு மற்றும் தங்க மஞ்சள் ஆகிய நிறங்கள் தான் இந்த அணியின் ஆடை நிறங்களாக உள்ளன. சின்னத்தில் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்” என்கிற வார்த்தைகளுடன் RC ஆங்கில எழுத்துக்களுடனான முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது.

2020இல் மகுடத்துடன் கூடிய பெரிய சிங்க அடையாளத்துடன் சின்னம் வெளியிடப்பட்டது. அதில் RC முத்திரை நீக்கப்பட்டிருந்தது.

கருப்பொருள் பாடல்

[தொகு]

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முதல் கருப்பொருள் பாடலாக குணால் கஞ்சவாலா மற்றும் சுனிதி சவுகான் பாடிய ஜீதேங்கே ஹம் ஷான் ஸே எனும் பாடல் தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் டிவி9 உதவியுடன் சிவப்பு & மஞ்சள் அணிக்கு ஆதரவாய் தொகுக்கப்பட்ட தக்காத் கீதே என்கிற பாடலும் அதிகாரப்பூர்வமற்ற ரசிகர்பட்டாளம் கருப்பொருள் பாடலாக இருக்கிறது. ஆயினும், அணிப் பாடல் 2009 ஆம் ஆண்டில் ரீடிஃப்யூஸன் ஒய்&ஆர் பெங்களூர் மூலம் உருவாக்கப்பட்டது. இது கேம் ஃபார் மோர் என்று நஅழைக்கப்படுகிறது. இந்த இசை காணொளியை சஞ்சய் ஷெட்டி மற்றும் விஷால் இயக்கியுள்ளனர்; இசைத் தொகுப்பினை அமித் திரிவேதி (தேவ்.டி மற்றும் அமீர் புகழ்) செய்துள்ளார்; பாடல் வரிகளை அன்ஷூபாபா எழுதியுள்ளார்.

வீரர்கள் பட்டியல்

[தொகு]
  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு குறிப்பு
தலைவர்
பாஃப் டு பிளெசீ  தென்னாப்பிரிக்கா 13 சூலை 1984 (1984-07-13) (அகவை 40) வலது-கை வலது-கை நேர்-திருப்பம் 2022 வெளிநாடு
மட்டையாளர்கள்
18 விராட் கோலி  இந்தியா 5 நவம்பர் 1988 (1988-11-05) (அகவை 36) வலது-கை மிதவேகம் 2008
ஃபின் ஏலன்  நியூசிலாந்து 22 ஏப்ரல் 1999 (1999-04-22) (அகவை 25) வலது-கை வலது-கை எதிர்-திருப்பம் 2021 வெளிநாடு
பன்முக வீரர்கள்
32 கிளென் மேக்ஸ்வெல்  ஆத்திரேலியா 14 அக்டோபர் 1988 (1988-10-14) (அகவை 36) வலது-கை வலது-கை எதிர்-திருப்பம் 2021 வெளிநாடு
9 ஹர்ஷல் படேல்  இந்தியா 23 நவம்பர் 1990 (1990-11-23) (அகவை 34) வலது-கை வலது-கை வேகம்-மிதவேகம் 2021
49 வனிந்து அசரங்கா  இலங்கை 29 சூலை 1997 (1997-07-29) (அகவை 27) வலது-கை வலது-கை நேர்-திருப்பம் 2021 வெளிநாடு
21 ஷாபாஸ் அகமது  இந்தியா 12 திசம்பர் 1994 (1994-12-12) (அகவை 29) இடது-கை இடது-கை மந்த வழமைச் சுழல் 2020
டேவிட் வில்லி  இங்கிலாந்து 28 பெப்ரவரி 1990 (1990-02-28) (அகவை 34) இடது-கை இடது-கை வேகம் - மிதவேகம் 2022 வெளிநாடு
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்  கயானா 15 ஆகத்து 1998 (1998-08-15) (அகவை 26) இடது-கை வலது-கை வேகம்- மிதவேகம் 2022 வெளிநாடு
மஹிபால் லோம்ரோர்  இந்தியா 16 நவம்பர் 1999 (1999-11-16) (அகவை 25) இடது-கை இடது-கை மந்த வழமைச் சுழல் 2022
சுயஷ் பிரபுதேசாய்  இந்தியா 6 திசம்பர் 1997 (1997-12-06) (அகவை 26) வலது-கை வலது-கை மிதவேகம் 2021
அனீஷ்வர் கவுதம்  இந்தியா 16 சனவரி 2003 (2003-01-16) (அகவை 21) இடது-கை இடது-கை மந்த வழமைச் சுழல் 2022
இலக்குக் கவனிப்பாளர்கள்
19 தினேஷ் கார்த்திக்  இந்தியா 1 சூன் 1985 (1985-06-01) (அகவை 39) வலது-கை வலது-கை எதிர்-திருப்பம் 2022
அனுஜ் ராவத்  இந்தியா 17 அக்டோபர் 1999 (1999-10-17) (அகவை 25) இடது-கை 2022
லவ்னீத் சிசோடியா  இந்தியா 15 சனவரி 2000 (2000-01-15) (அகவை 24) இடது-கை இடது-கை மிதவேகம் 2022
சுழற்பந்து வீச்சாளர்கள்
கர்ண் சர்மா  இந்தியா 23 அக்டோபர் 1987 (1987-10-23) (அகவை 37) வலது-கை வலது-கை நேர்-திருப்பம் 2022
வேகப்பந்து வீச்சாளர்கள்
73 முகமது சிராஜ்  இந்தியா 13 மார்ச்சு 1994 (1994-03-13) (அகவை 30) வலது-கை வலது-கை வேகம்-மிதவேகம் 2018
ஜோஷ் ஹேசல்வுட்  ஆத்திரேலியா 8 சனவரி 1991 (1991-01-08) (அகவை 33) இடது-கை வலது-கை வேகம்-மிதவேகம் 2022 வெளிநாடு
ஜேசன் பேரன்தோர்ஃப்  ஆத்திரேலியா 20 ஏப்ரல் 1990 (1990-04-20) (அகவை 34) வலது-கை இடது-கை வேகம்-மிதவேகம் 2022 வெளிநாடு
சித்தார்த் கௌல்  இந்தியா 19 மே 1990 (1990-05-19) (அகவை 34) வலது-கை வலது-கை வேகம்-மிதவேகம் 2022
சமா மிலிந்த்  இந்தியா 4 செப்டம்பர் 1994 (1994-09-04) (அகவை 30) இடது-கை இடது-கை மிதவேகம் 2022
ஆகாஷ் தீப்  இந்தியா 15 திசம்பர் 1996 (1996-12-15) (அகவை 27) வலது-கை வலது-கை மிதவேகம் 2022
Source: RCB Players

நிர்வாகம்

[தொகு]
  • உரிமையாளர் - யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்
  • தலைவர் - பிரதமேஷ் மிஷ்ரா
  • அணி மேலாளர் - சவுமியாதீப் பைனே
  • துடுப்பாட்ட செயல்பாடுகள் இயக்குநர்- மைக் ஹெஸ்சன்
  • தலைமை பயிற்சியாளர் - சஞ்சய் பாங்கர்
  • மட்டையாட்டம் மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் - ஸ்ரீதரன் ஸ்ரீராம்
  • பந்துவீச்சு பயிற்சியாளர் - ஆடம் கிரிஃப்பித்
  • திறன்காணல் மற்றும் களத்தடுப்பாட்டத் தலைவர் - மலோலன் ரங்கராஜன்
  • தலைமை உடலியக்க மருத்துவர் - இவான் ஸ்பீச்லி
  • வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் - பாசு ஷங்கர்
  • அணி மருத்துவர் - Dr சார்லஸ் மின்ஸ்
  • உளவியலாளர் - Dr சைதன்யா ஸ்ரீதர்

பருவங்கள்

[தொகு]
ஆண்டு ஐபிஎல் சாம்பின்ஸ் லீக் இருபது20
2008 குழுநிலை (7th/8) இடைநிறுத்தம்
2009 இரண்டாமிடம் குழுநிலை
2010 தகுதிச்சுற்று (4th/8) அரையிறுதி
2011 இரண்டாமிடம் இரண்டாமிடம்
2012 குழுநிலை (5th/9) தகுதி பெறவில்லை
2013 குழுநிலை (5th/9) தகுதி பெறவில்லை
2014 குழுநிலை (7th/8) தகுதி பெறவில்லை
2015 தகுதிச்சுற்று (3rd/8) தொடரின் செயலிழப்பு
ஆண்டு ஐபிஎல்
2016 இரண்டாமிடம்
2017 குழுநிலை (8th/8)
2018 குழுநிலை (6th/8)
2019 குழுநிலை (8th/8)
2020 தகுதிச்சுற்று (4th/8)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12". Moneycontrol. https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html. பார்த்த நாள்: 15 August 2019. 
  2. Shruti Sabharwal (2008-01-25). "No. 1 McDowell's or Royal Challenge to be Bangalore IPL team sponsor". பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.
  3. இந்தியன் பிரீமியர் லீக் - மட்டைப்பந்து பொழுதுபோக்குடன் சந்திக்கிறது : மட்டைப்பந்து பத்திகள் : CricketZone. பரணிடப்பட்டது 2009-04-08 at the வந்தவழி இயந்திரம்Com பரணிடப்பட்டது 2009-04-08 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புகள்

[தொகு]