உள்ளடக்கத்துக்குச் செல்

முல்லைப் பெரியாறு அணைப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளத்திற்கு எதிராகத் தமிழகப் பேருந்தில் ஒட்டப்பட்டுள்ள பிரசுரம்

முல்லைப் பெரியாறு அணைப் போராட்டம் என்பது முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு அதற்கு மாற்றாகப் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் போக்கைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல இடங்களிலும் நடக்கும் போராட்டங்களையும் தமிழ்நாட்டின் எதிர்ப்புப் போக்கைக் கண்டித்து கேரளத்தின் எல்லை ஓரங்களில் நடக்கும் போராட்டங்களையும் குறிக்கும்.

பின்னணியும் கட்டுமானமும்

[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் எனும் ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்ப் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவி வரும் முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.


ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய அரசுக்கும், திருவாங்கூர் சமஸ்தான மன்னர் விசாகம் திருநாள் ஆகியோர்க்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகளுக்கு அணையைக் கட்டிப் பராமரித்துக் கொள்வதுடன் அந்த அணையிலிருந்து கிடைக்கும் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் ஆங்கிலேய அரசுக்கு அளிக்கப்பட்டது. இதன்படி ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டுமானக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நோய் பரவலால் தொழிலாளர்கள் 483 பேர் உயிரிழந்த நிலையில் இந்த அணைக் கட்டுமானச் செலவுக்கு அதிகப்படியாக நிதி ஒதுக்கித்தர ஆங்கிலேய அரசு மறுத்தது. இந்நிலையில் ஆங்கிலேய அரசின் கட்டுமானப் பொறியாளராக இருந்த இராணுவப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுவிக் இந்த அணையை ஆங்கிலேய அரசின் உதவியின்றி கட்ட முடிவு செய்தார். இதற்காக அவரது மனைவியின் நகைகள் அனைத்தையும் விற்றதுடன், இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்த அவரது சொத்துக்களையும் விற்றுப் பணத்தைச் சேர்த்துக் கொண்டு திரும்பினார். அவரது சொந்தப் பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

ஒப்பந்தம்

[தொகு]

இந்த அணை ஆங்கிலேய அரசுக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய சுதந்திரத்துக்குப் பின்பு தமிழ்நாடு அரசுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையிலான ஒப்பந்தமாக உள்ளது. இந்த அணை நில அதிர்வால் பாதிப்படைந்துள்ளதாக மலையாள மனோரமா எனும் இதழ் 1979 ஆம் ஆண்டு வெளியிட்ட செய்தியால் அணையின் முழு நீர்த்தேக்க அளவான 152 அடியிலிருந்து குறைக்கப்பட்டது. இதனால் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்திய பின்னர் தான் 152 அடிக்கு நீர்த்தேக்க அளவை உயர்த்த வேண்டும் என தெரிவித்தது. இதற்காக தமிழ்நாடு அரசு அணையைப் பலப்படுத்தும் வேலைகளைச் செய்து முடித்தது.

கருத்து வேறுபாடு

[தொகு]

கேரள அரசு நீர்த்தேக்க அளவை 136 அடிக்கு மேல் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த அணை குறித்து இரு மாநில அரசுகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகளும், இதைத் தொடர்ந்து இரு மாநிலங்களுக்குமிடையிலான மக்களுக்குமிடையில் போராட்டங்கள் தொடங்கின.

பொருளாதாரம்

[தொகு]

கேரள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்,ரப்பர் தொழிலுக்கு தேவையான இரும்பு வார்ப்படங்கள்,மற்றும் மின் சாதன பொருட்களுக்கு தமிழகத்தையே சார்ந்துள்ளனர்.

நீர்பிடிப்புபகுதி

[தொகு]

அணையில் 155 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும்போது நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர்
நீர்உயரம் 136 அடியாக இருக்கும்போது நீர்ப்பரப்பு 4,678 ஏக்கர்.
3,913 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த பல ஆண்டுகளாக நீரில் மூழ்காமல் இருக்கிறது
136 அடிக்கு மேலாக தண்ணீரைத் தேக்கினால் இந்த ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட விடுதிகள் தண்ணீரில் மூழ்கும்.
கேரள பகுதி நீர் தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டதாகவோ, முல்லைப்பெரியாறு அணையில் நீர் இருந்தும் கேரள பகுதி தேவைக்கு நீர் கிடைக்கவில்லை என்றோ செய்திகள் இல்லை. மாறாக அதிக அளவு நீர் வீணாக கடலில் கலந்த சூழ்நிலை ஏற்பட்டதுண்டு.

கடலுக்குச் சென்ற தண்ணீர்

[தொகு]

136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.[1]

முல்லைப் பெரியாறு அணை பற்றிய ஒப்பந்தங்களின் காலக்கோடு

[தொகு]

முல்லைப் பெரியாறு அணை பற்றிய ஒப்பந்தங்களின் சுருக்கமான காலக்கோடு இதோ:[2]

  • 1886, அக்டோபர் 29 - முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 999 ஆண்டுக்கு அணையில் 152 அடிக்குத் தண்ணீர் தேக்கி பயன்படுத்தலாம்.
  • 1941, மே 12 - முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினையில் கொல்கத்தா நீதிபதி நளினி ரஞ்சன் சட்டர்ஜி வழங்கிய தீர்ப்பு.
  • 1954, நவம்பர் 13 - பெரியாற்றில் மின்சக்தி உற்பத்தி செய்ய ஒப்பந்தம்.
  • 1970, மே 29 - முல்லைப் பெரியாறு ஒப்பந்தப்படி, தண்ணீர் தேங்கும் பகுதிக்காகத் தரப்படும் குத்தகைத் தொகை ரூ. 40 ஆயிரத்தை ரூ. 2.40 இலட்சமாக உயர்த்துதற்கான ஒப்பந்தம்.
  • 1979, நவம்பர் 25 - அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க ஒப்புக்கொண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம். அணையைப் பலப்படுத்தும் வரையில் தற்காலிக ஏற்பாடாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  • 2001 - அணையைப் பரிசோதனை செய்த மத்திய நீர்வள ஆணையம் அணையில் 145 அடி தண்ணீர் நிரப்பலாம் என்று உத்தரவிட்டது.
  • 2006, பெப்ருவரி 27 - உச்ச நீதி மன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து அதிகரித்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உத்தரவிட்டது.
  • 2006, மார்ச் 13 - கேரள சட்டசபையில் அணைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

நதிநீர் பயன்பாடு பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

[தொகு]

இந்திய நாடு மாநிலங்களின் கூட்டமைப்பாக உள்ளது. ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் பொறுப்புகளை ஒப்படைப்பதை அரசியல் சட்டம் 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளது[3]. அவை:

  • ஒன்றிய அரசு
  • மாநில அரசுகள்
  • பொது (concurrent)

என்பவை ஆகும்.

அரசியல் சட்டத்தின் 246ஆம் பிரிவு, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்துக் கவனிக்க வகை செய்கிறது.

நாட்டில் பெரும்பாலான நதிகள், பல்வேறு மாநிலங்களுக்குத் தொடர்புடையனவாக உள்ளன. அத்துடன் நதிநீர் பயன்பாடு, கட்டுப்பாடு, மேம்பாடு ஆகியவைதான் மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சினை ஏற்பட காரணமாக உள்ளன.

அரசியல் சட்டத்தில் தண்ணீர், மாநிலங்களின் பிரிவில் 17ஆம் இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பட்டியலில் 56ஆம் இடத்தில் இடம் பெற்றுள்ளது.

அதன்படி, நதிநீர் பங்கீடு, பாசனம், வாய்க்கால்கள், நீர்த்தேக்ககம், நீர் மின்சாரம் ஆகியவை மாநில அரசின் பொறுப்பில் வழ்ங்கப்பட்டுள்ளன.

ஆனால் இரு மாநிலங்களுக்கு நதி மற்றும் நதி படுகைகளின் கட்டுப்பாடு, மேம்பாடு ஆகியவற்ற மக்கள் நலன் கருதி நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று ஒன்றிய அரசின் பட்டியலில் 56ஆம் பிரிவில் இடம்பெற்றுள்ள சரத்து கூறுகிறது.

அரசியல் சட்டத்தின் 262ஆம் பிரிவுப்படி, இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண சட்டம் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அணை உடைந்தாலும் ஆபத்து இல்லை

[தொகு]

கேரள அரசு கூறுவது போல, ஒருவேளை முல்லைப் பெரியாறு அணையில் உடைப்பு ஏற்பட்டு விட்டால் கூட, அதனால் பேரழிவு நிகழ்ந்துவிடாது என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, முல்லைப் பெரியாற்றிலிருந்து வெளியேறும் தண்ணீரை இடுக்கி அணை எளிதில் ஏற்க முடியும் என்றும் கூறப்படுகிறது[4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. கடலுக்குச் சென்றது 4 டி.எம்.சி. தண்ணீர்
  2. முல்லைப் பெரியாறு: கேரளாவின் இன்னொரு முகம் - தினகரன், சனவரி 8, 2012, பக். 12 (நாகர்கோவில் பதிப்பு).
  3. காண்க: மேற்குறிப்பு
  4. முல்லைப் பெரியாறு அணை: பாதுகாப்பும் பின்னணியும்

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. இது தொடரக் கூடாது![தொடர்பிழந்த இணைப்பு](தினமணி தலையங்கம்)
  2. இதனால் யாருக்கு லாபம்? பரணிடப்பட்டது 2012-01-05 at the வந்தவழி இயந்திரம்(தினமணி தலையங்கம்)
  3. ஏன் இந்த ஓரவஞ்சனை?[தொடர்பிழந்த இணைப்பு](தினமணி தலையங்கம்)
  4. ஒரு அணை இரு மாநிலங்கள் விளக்கபடம் இந்துநாளிதழ்