மால்சிக்
மால்சிக் | |
---|---|
2019-ஆம் ஆண்டு உருசிய தபால் தலையில் "Сочувствие" (இரக்கம்) நினைவுச்சின்னம் | |
இனம் | நாய் |
வகை | கலப்பினம் |
பால் | ஆண் |
பிறப்பு | சு. 1996 மாஸ்கோ, உருசியா |
இறப்பு | திசம்பர் 2001 மாஸ்கோ, உருசியா |
நாடு | உருசியா |
Occupation | இரயில் நிலைய வாசி |
செயற்பட்ட ஆண்டுகள் | 1996–2001 |
அறியப்படுவதற்கான காரணம் | மெண்டலீவ்ஸ்காயா இரயில் நிலையத்தில் வசித்து வந்த நன்கறியப்பட்ட நாய்; ஒரு பயணியால் குத்திக் கொல்லப்பட்டது |
Appearance | கறுப்பு |
மால்சிக் (ஆங்கில மொழி: Malchik; உருசியம்: Ма́льчик, மால்ச்சிக், பொருள்: 'குட்டிப் பையன்'; அண். 1996 – திசம்பர் 2001) உருசியாவின் மாஸ்கோவில் வசித்த ஒரு கறுப்பு நிறக் கலப்பு வகைத் தெரு நாய். சுமார் மூன்று ஆண்டுகளாக மாஸ்கோ மெட்ரோ தடத்தில் மெண்டலீவ்ஸ்காயா நிலையத்தில் மால்சிக் வசித்து வந்தது. 2001 ஆம் ஆண்டு யூலியானா உரோமானோவா என்ற 22 வயதுப் பெண் தான் எடுத்துவந்த சமையலறைக் கத்தி ஒன்றால் குத்தியதில் மால்சிக் கொல்லப்பட்டது.[1] இந்த சம்பவம் பொதுமக்களின் சீற்றத்தை பெருமளவில் தூண்டி மனிதர்கள் விலங்குகளை நடத்தும் விதம் தொடர்பான கேள்விகளை முன்னெழுப்பியது. இதன் தொடர்ச்சியாக 2007 ஆம் ஆண்டு மெண்டலீவ்ஸ்காயா நிலையத்தில் மல்சிக்கின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.[2]
மெண்டலீவ்ஸ்காயா இரயில் நிலையத்தில் வாழ்க்கை
[தொகு]மால்சிக் மாஸ்கோ நகரில் வாழ்ந்த ஒரு கறுப்பு நிறத்தைய தெருநாய். இது மெண்டலீவ்ஸ்காயா இரயில் நிலையத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் வசித்து வந்தது.[3] இரயில்வே பணியாளர்கள் மத்தியிலும் பயணிகள் மத்தியிலும் ஒரு பிரபலமான நிலைய வாசியாக ஆனது.[1][4] போகையிலும் வருகையிலும் அவர்களனைவரும் மால்சிக்குக்கு உணவிடுவது வழக்கம். குடிகாரர்களிடமிருந்தும் பிற நாய்களிடமிருந்தும் தனது இருப்பிடத்தை பாதுகாப்பதை மால்சிக் என்றும் செய்யத் தவறியதில்லை.[1]
இறப்பு
[தொகு]டிசம்பர் 2001 இல் ஒரு குளிர்கால மாலையில்[5] 22 வயதான யூலியானா உரோமானோவா (வோல்கோவா) என்ற உருசிய ஒய்யாரத் துறையைச் சார்ந்த பெண்மணி தனது செல்லப் பிராணியான நாயுடன் மெண்டலீவ்ஸ்காயா நிலையத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.[6] அவர் ஒரு பாதசாரி சுரங்கப்பாதையைக் கடக்கையில் மால்சிக்கை எதிர்கொண்டார். மால்சிக் அவர்கள் இருவரையும் பார்த்து குரைத்ததாக சிலர் கூறுகின்றனர்.[1][7] மால்சிக் அச்சமயம் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் ஒரு தரப்பினரால் கூறப்படுகிறது.[6][8] உரோமானோவா தனது செல்ல நாயை தூங்கிக் கொண்டிருந்த மால்ச்சிக் மீது ஏவியதாக சில தகவல்கள் கூறுகின்றன.[6][8] அதன் பின்னர் உரோமானோவா தான் வைத்திருந்த கைப்பையிலிருந்து ஒரு சமையலறைக் கத்தியை எடுத்து மல்சிக்கை முதுகிலும் மார்பிலும் வயிற்றில் மாறிமாறி ஆறு முறை குத்தினார்.[8] பல நிமிடங்கள் துடிதுடித்துவிட்டு மால்சிக் இறந்தது.[1]
அருகிலுள்ள கடையில் இருந்த ஒரு கடைக்காரர் அத்தாக்குதலைத் தடுக்க முயன்றார். ஆனால் காவல்துறையினரும் அவசர மருத்துவ ஊர்த்தியும் வருவதற்குள் மால்சிக் இறந்துவிட்டது.[9] அதற்குள் உரோமானோவா அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடிவிட்டதாகவும் ஆரம்பகட்டத்தில் முறையான விசாரணை ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.[9] எனினும் இஸ்வெட்டியா என்ற பிரபல செய்தித்தாளின் புலனாய்வு நிருபரான ஐரினா ஓஸ்யோமயா இந்நிகழ்வு குறித்து செய்திக் கட்டுரைகள் எழுதி வெளியிடத் துவங்கினார்.[9] இதன் வாயிலாக இளம் வடிவழகியான உரோமானோவா அடையாளம் காட்டப்பட, அவரே கொலையாளி என்ற முழுவிபரம் முதன்முறையாக வெளிச்சத்துக்கு வந்தது.[9] பத்திரிக்கை நிருபர்கள் உரோமானோவாவைத் தொடர்பு கொண்டபோது அவர் தன் குற்றத்தை அலட்சியமாக மறுத்ததாகக் கூறப்படுகிறது.[9] ஏற்கனவே உரோமானோவா நீண்ட காலமாக விலங்குகள் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்ததும் சிலகாலம் மனநல சிகிச்சைகளுக்கு ஆட்பட்டிருந்ததும் பின்னர் தெரியவந்தது.[10] விலங்குரிமை ஆர்வலர்களின் ஒரு வருட பிரச்சார முயற்சிகளுக்குப் பின்னரே உரோமானோவா கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.[1] தண்டனைக்காலம் முடிந்ததும் ஓராண்டு காலம் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.[1] மால்சிக்கின் கொடிய மரணம் பற்றிய தகவல்கள் உருசிய ஊடகங்களால் பரவலாக வெளியிடப்பட்டன.[4]
நினைவுச்சின்னம்
[தொகு]பிப்ரவரி 2007-இல் மெண்டலீவ்ஸ்காயா சுரங்க இரயில் நிலையத்தில் "இரக்கம்" என்று பொருள்படும்[2] "Сочувствие" என்ற பெயரில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது.[4] ஸர்பன்டைன் என்ற வகைக் கல்லால் ஆன ஒற்றைக்கல் பீடத்தில் மால்சிக்கின் வெண்கலச் சிற்பத்துடன் கூடியதாக இந்நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.[2] பொதுமக்களிடம் நன்கொடை திரட்டப்பட்டு அமைக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம்[4][11] 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 15/16 அன்று இரவு நிறுவப்பட்டது.[2] பிப்ரவரி 17 அன்று இது அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[2] இந்த நினைவுச்சின்னத்தைச் செதுக்கிய கலைஞர்களில் சிற்பி அலெக்சாண்டர் சிகல், ஓவியர் செர்ஜி சிகல், கட்டிடக் கலைஞர் ஆண்ட்ரே நாலிச், வடிவமைப்பாளர் பீட்டர் நலிச் ஆகியோர் அடங்குவர்.[2] திறப்பு விழாவில் ஆண்ட்ரி மகரேவிச், மிகேயில் சிர்விண்ட், வெனியமின் ஸ்மேகோவ், ஒலெக் அனோஃப்ரீவ், லுட்மிலா கசட்கினா, செர்ஜி யுர்ஸ்கி உட்பட குறிப்பிடத்தக்க பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.[2] இவர்களில் பலர் இந்த நினைவுச்சின்னத்தின் நிறுவலுக்கு நன்கொடை அளித்தவர்களாவர்.[2] நினைவுச்சின்னத்தில் உள்ள உருசிய மொழியிலான கல்வெட்டில் "நினைவுச்சின்னமானது இருப்பிடமற்ற விலங்குகளிடம் காட்டப்படும் மனிதாபிமான உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது" என்று பொறிக்கப்பட்டுள்ளது.[12] மால்சிக்கின் நினைவுச்சின்னம் மாஸ்கோவின் மிகவும் அசாதாரண சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது.[13] மாஸ்கோ மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள மற்ற நினைவுச்சின்னங்களிடம் செயவது போலவே[14] மால்சிக் சிலையின் மூக்கை நற்பேறுக்காக தேய்க்கும் வழக்கம் மாஸ்கோ மக்களிடம் காணப்படுகிறது.[7]
மரபுத் தாக்கம்
[தொகு]மால்சிக்கின் கதை "வளர்ப்பு விலங்குகள், குறிப்பாக நாய்கள், மீதான நமது அணுகுமுறையில் இருக்கும் கொடூரமும் பாசமும் கலந்த விசித்திரமான கலவையைக் குறிக்கிறது" என்று ஜோனா பெட்னரெக் குறிப்பிடுகிறார்.[11] 2019 ஆம் ஆண்டு மால்சிக்கின் நினைவாக உருசிய அஞ்சல் துறை "கம்பாஷன்" நினைவுச்சின்னத்தின் உருவத்தைத் தாங்கிய தபால்தலையை வெளியிட்டது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Susanne Sternthal (2010-01-16). "Moscow's stray dogs". பைனான்சியல் டைம்ஸ். http://www.ft.com/cms/s/2/628a8500-ff1c-11de-a677-00144feab49a.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "The unveiling of "Compassion" monument to stray pets". Moscow Metro Official Site. Archived from the original on 4 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-04-22.
- ↑ Robyn Dixon (journalist) (20 August 2020). "In Moscow, a woman devotes her life to saving dogs" (in en). தி வாசிங்டன் போஸ்ட் (Moscow). https://www.washingtonpost.com/world/2020/08/20/moscow-dog-rescue/.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Buckle, Jackie (2019). Monumental Tales: The fascinating stories behind the world's pet statues and memorials. Cambridge, UK: The Lutterworth Press. pp. 102–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7188-9545-7.
- ↑ "Man brutally kills pregnant dog for no particular reasons". Pravda.ru. 2008-11-19 இம் மூலத்தில் இருந்து 23 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100423150249/http://english.pravda.ru/society/stories/19-11-2008/106719-man_kills_dog-0.
- ↑ 6.0 6.1 6.2 "Russian top model brutally stabs mongrel dog in Moscow". 9 November 2005. Archived from the original on 26 March 2010. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ 7.0 7.1 Marquardt, Alex (19 March 2010). "Stray Dogs Master Complex Moscow Subway System". ABC News (Moscow). https://abcnews.go.com/International/Technology/stray-dogs-master-complex-moscow-subway-system/story?id=10145833.
- ↑ 8.0 8.1 8.2 "A group of Russian artists shocked with the young girl's brutality initiated the making of a monument to the killed dog". Pravda.ru. 2005-11-09 இம் மூலத்தில் இருந்து 26 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100326044534/http://english.pravda.ru/main/18/90/361/16437_dog.html.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 "'Compassion', Moscow, Russia: A monument to Malchik, a stray dog who lived in a Moscow metro station until his tragic death". Atlas Obscura. AtlasObscura.com. n.d. பார்க்கப்பட்ட நாள் 30 June 2020.
- ↑ Contrary to many news reports, Romanova was not a professional model: she made only one occasional shot with a Russian modeling agency "Art-Site"; see "Ну, подумаешь, собачку ножом пырнула" பரணிடப்பட்டது 11 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 11.0 11.1 Bednarek, Joanna (2017). "The Oedipal animal? Companion species and becoming". In Gardner, Colin; MacCormack, Patricia (eds.). Deleuze and the Animal. Edinburgh, UK: Edinburgh University Press. pp. 71–72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4744-2273-4.
- ↑ Caldwell, Melissa L. (2017). Living Faithfully in an Unjust World: Compassionate Care in Russia. Oakland, California: University of California Press. pp. 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-28584-2.
- ↑ Satenstein, Liana (2016-05-09). "Hidden Caves, Cosmonauts Alley, and More: Moscow's Unexpected Attractions". Vogue (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
- ↑ Vedyashkin, Sergei (26 November 2020). "Stop Touching Metro Sculptures for Luck, Moscow Metro Urges Riders". Moscow Times (Moscow). https://www.themoscowtimes.com/2020/11/26/stop-touching-metro-sculptures-for-luck-moscow-metro-urges-riders-a72150.