உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
கபாலீசுவரர் கோயில், மயிலாப்பூர்
புவியியல் ஆள்கூற்று:13°02′01″N 80°16′12″E / 13.033651°N 80.269895°E / 13.033651; 80.269895
பெயர்
புராண பெயர்(கள்):கபாலீச்சரம், திருமயிலாப்பூர்
பெயர்:மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:மயிலாப்பூர்
மாவட்டம்:சென்னை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கபாலீசுவரர்
தாயார்:கற்பகாம்பாள்
தல விருட்சம்:புன்னை மரம்
தீர்த்தம்:கபாலி தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம்
ஆகமம்:காமீகம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர், சுந்தரர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
தொன்மை:1000–2000 வருடங்களுக்கு முன்

கபாலீசுவரர் கோவில் (Kapaleeshwarar Temple) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

சப்த சிவத்தலங்கள்

[தொகு]

மயிலாப்பூர் பகுதியில் மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோயில், மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில், மயிலாப்பூர் வாலீசுவரர் கோயில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் எனப்படுகின்ற சப்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்பர். இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன. [2] இவற்றைச் சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.[3] இந்த சப்த ஸ்தான சிவாலயங்களின் வரிசையில் எட்டாவது சிவாலயமாக ஏகாம்பரேசுவரர்–வள்ளுவர் கோயில் சிறப்பு பெற்றுள்ளது.[4]

இறைவன், இறைவி

[தொகு]

இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.

அமைப்பு

[தொகு]

இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது[மேற்கோள் தேவை]. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

வரலாறு

[தொகு]

இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை ஆண்ட பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.

இத்தலம் வாயிலார் நாயனார் அவதாரத் தலம்[5]

தொன்னம்பிக்கைகள்

[தொகு]
கோயிலின் இராஜ கோபுரம்.

திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் பழ நம்பிக்கை. இன்றைய கபாலீசுவரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றது.

திருமயிலை கோவில் இலக்கியங்கள்

[தொகு]

திருமயிலை தொடர்பான இலக்கியங்கள் முப்பதுக்கும் மேற்பட்டவைகள் ஆகும். அவை பல ஆய்வறிஞர்களால் விவரித்து எழுதப்பட்டுள்ளன. உலா, கலம்பகம், அந்தாதி, இரட்டை மணி மாலை , குறுங்கழி நெடில் , மல்லிகைப் பா முதலிய பல்வேறு வகை இலக்கியங்கள் திருமயிலைக்கு உள்ளன. டாக்டர் உ.வே.சா அவர்கள் தாண்டவராயக் கவிராயர் இயற்றிய திருமயிலை யமக அந்தாதி என்ற நூலை 1936இல் வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் இவ்வந்தாதியே அன்றி இத்தலம் சம்பந்தமாக வேறு சில தமிழ்ப் பிரபந்தங்களுள் இப்பொழுது தெரிந்தவை என எட்டு நூல்களைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்றாகிய கபாலீஸ்வரர் பஞ்சரத்னம் என்ற நூலை டாக்டர் உ.வே.சா. அவர்களே 1932இல் முன்னமேயே வெளியிட்டார். யமக அந்தாதி முன்னுரையுள் குறிப்பிட்டுள்ள பட்டியலில் கற்பகவல்லி நாயகி மாலை என்ற நூலும் ஒன்றாகும்.

திருமயிலைத் தலபுராணம்

[தொகு]

’திருமயிலைத் தலபுராணம்’ எனும் நூல் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீஅமுர்தலிங்கத் தம்பிரான் இயற்றியது. 120 முன்பு பதிப்பிக்கப்பட்டு பின்னர் மறைந்திருந்த இந்நூலை ’சிவாலயம்’ அமைப்பின் நிர்வாகி ஜி.மோகன் இரண்டாம் பதிப்பாக 2012 ஆம் ஆண்டு கொணர்ந்தார். இந்நூல் பல அரிய தகவல்களை உள்ளடக்கியது.[6]

பங்குனி உத்தர விழா

[தொகு]

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போதும் அறுபத்து மூவர் திருவிழாவின் போது, கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண இலட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.[7]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தீபம் இதழ் - சப்த சிவ தலங்கள் - மே 20 2016 -பக்கம் 32
  3. தீபம் இதழ் மே 20 2016 -பக்கம் 42
  4. Muthukumaran, M. (6 November 2019). "மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது? - ஸ்பாட் விசிட் #Video". Vikatan.com. Vikatan. பார்க்கப்பட்ட நாள் 10 January 2023.
  5. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 12
  6. தினமணி; தமிழ்மணி; திருவள்ளுவரின் திருவுருவ எழில்!; 2. மார்ச் 2014
  7. மயிலை கபாலி கோயில் பங்குனி உத்திரம் விழா வரலாறு
  • கற்பகவல்லி நாயகி மாலை, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், முதற்பதிப்பு 2003

வெளியிணைப்புகள்

[தொகு]