உள்ளடக்கத்துக்குச் செல்

பௌத்த வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடும் செம்மஞ்சள் நிறத்தில் புத்தநெறியின் தாயகமும், செமஞ்சள் நிறத்தில் புத்தநெறி பரந்த நிலமும் காட்டப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் வரலாற்றுக்கால பௌத்த தாயகங்களும், செந்நிறத்தில் மகாயானப்பரவலும் பச்சையில் தேரவாதப்பரவலும், நீலத்தில் வச்சிரயானப் பரவலும் காட்டப்படுகின்றன. =

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உதித்த  புத்த நெறியின் வரலாறானது, கி.மு 5ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. பண்டைய மகத நாட்டில் (இப்போது பீகார், இந்தியா), புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பௌத்தம் உதித்தது. வரலாற்றுக்காலத்தில், பௌத்தம் ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அரசமதமாக நிலவி இருக்கின்றது. மத்திய, கிழக்கு, தென்கிழக்கு ஆசியா முழுவதும் இன்றும் தேரவாத, மகாயான மற்றும் வச்சிரயான பௌத்த மரபுகளைக் காணமுடியும்.

புத்தரின் காலம்

[தொகு]
பொ.மு 563 முதல் 483 வரை வாழ்ந்த புத்தரின் காலத்தில் பதினாறு மகாஜனபதங்கள் இருந்தன. 

சித்தார்த்த கௌதமரே பௌத்தத்தைத் தோற்றுவித்தவர். இவர் இன்றைய நேபாளத்திலுள்ள  கோசல அரசின்  சாக்கியக் (பாலி: சாக்க) குடியரசில் தோன்றினார்.[1] மிகப்பழைய நூல்களில் புத்தரின் வாழ்க்கை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனினும், பொ.மு 200ஆம் ஆண்டுக்குப் பிந்தைய நூல்களில் பல்வேறு மீமாந்தச் சித்தரிப்புகளுடன் புத்தரின் வாழ்க்கை பற்றிய தொன்மங்கள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.[2] 

புத்தர் தன் வாழ்வின் நாற்பத்தைந்து ஆண்டுகளை, மத்திய இந்தியாவின் கங்கை சமவெளி , பகுதியிலேயே கழித்திருக்கிறார். பல்வேறு குலத்தைச் சேர்ந்தோர் அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது சீடர்கள் ஆனார்கள்.  தன் போதனைகளை உள்ளூர் மொழிகளில் அல்லது வட்டார வழக்குகளிலேயே கற்பிக்கவேண்டும் என்று புத்தர் வலியுறுத்தினார்.[3]  சிராவஸ்தி, ராஜகிரகம் மற்றும் வைசாலி நகர்களின் அருகே போதனைகளைத் தொடர்ந்த புத்தர்,[4]   80 வயதில் மரிக்கும் போது, ஆயிரக்கணக்கான பின்பற்றுநர்கள் அவருக்கு இருந்தார்கள்.

புத்தரின் மறைவை அடுத்த 400 ஆண்டுகளில்: பல்வேறு உட்பிரிவுகள் பௌத்தத்தில் தோன்றலாயின. அவற்றுள் நிகாய பௌத்தங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று  தேராவத எனும் நிகாய பௌத்தம் மாத்திரமே எஞ்சியுள்ளது. அடுத்து வந்த காலங்களில்,  மகாயான மற்றும் வஜ்ரயான, பிரிவுகள் உருவாகின. புத்தரைப் பின்பற்றுபவர்கள், ஆரம்பத்தில் தம்மை சாக்கியன், சாக்கியபிக்கு என்ற பெயர்களில் அழைத்துக்கொண்டனர்.[5][6] பிற்காலத்தில் பௌத்தர் என்ற பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டனர்.[7] 

ஆரம்பகால பௌத்தம்

[தொகு]

புத்தரின் மறைவை அடுத்து,  மகாகாசியபரின் தலைமையில், இராசக்கிருகத்தில்(இன்றைய ராஜ்கிர்) அஜாதசத்துருவின் ஆதரவில் நிகழ்ந்த புத்த பிக்குகளின் முதலாவது மகாசங்க ஒன்றுகூடல், புத்தரின் வாய்மொழிப் போதனைகள் தொடர்ச்சியாக சங்கத்தினரால் தலைமுறை தலைமுறையாகப் பரிமாறப்பட்டமை பற்றி, ஆரம்பகால பௌத்த நூல்கள் சொல்கின்றன. இவற்றின் வரலாற்று நம்பகம் இன்றும் கேள்விக்குட்பட்டவையாகவே இருக்கின்றன.[8]

ஓரளவு நம்பகம் வாய்ந்த புத்த மகாசங்கமும், சங்கம் இரண்டாகப் பிளவுறக் காரணமாக அமைந்த முதல் சங்கக்கூட்டமுமான இரண்டாவது புத்த மகாசபைக் கூட்டத்தை பல ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஸ்தாவிரர் (மூத்தோர்), மகாசங்கிகர் (பெருஞ்சங்கத்தார்) என்ற இருபெரும் குழுக்களாக, பௌத்த பிக்குகள் இதில் பிளவடைந்தனர். இந்தப்பிளவானது, விநயக்கொள்கையில் (துறவொழுக்கம்) ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் உருவானதாகும்.[9] காலப்போக்கில், இந்த இரண்டு பிரிவுகளும் இன்னும் பல புத்தப் பிரிவுகளை உண்டாக்கின.   ஸ்தாவிரத்திலிருந்து பிரிந்த பிரிவுகளாக,   சர்வாஸ்திவாதம், புத்கலவாதம், தர்மகுப்தகம், விபஜ்யவாதம் (இதிலிருந்தே தேரவாதிகள் தோன்றினார்கள்) என்பனவற்றை முக்கியமாகச் சொல்லலாம். மகாசங்கிகர்களிலிருந்து லோகோத்தரவாதம், ஏகவியவகாரிகம்  ஆகிய பிரிவுகள் தோன்றின.[10] இந்தப்பிரிவே பிற்காலத்தில் மகாயானப் பிரிவுக்கு அடிப்படையான சில கருத்துக்களைக் கொண்டதாகக் கருதப்படுகின்றது.  [11]

மௌரிய அரசில் பௌத்தம்

[தொகு]
 மெளரிய பேரரசின் கீழ் பேரரசர் அசோகர் உருவாக்கிய உலகின் முதல் பெரிய புத்த அரசு.
அசோகரின் 6ஆவது தூண் அசோகக் கல்வெட்டு  (238 கி. மு.), பிராமி எழுத்துமுறையிலமைந்தது.

மவுரியப் பேரரசர் அசோகர் (273–232 BCE), காலத்தில் பௌத்தம் அரச ஆதரவைப் பெற்று இந்தியத் துணைக்கண்டமெங்கும் பரவத் தொடங்கியது .[12] கலிங்கப்போரின் பின் மனம் வெறுத்தே அசோகர் பௌத்தத்தைத் தழுவியதாகச் சொல்லப்படுகின்றது. அவர், கீணறுகள், இலவச வைத்தியசாலைகள், தங்குமடங்கள் என்பவற்றைக் கட்டுவித்தார். மேலும், மரண தண்டனை, வேட்டையாடல், தண்டனைகள் என்பவற்றையும் தவிர்த்திருந்தார். [13]

மௌரியப் பௌத்தத்தின் காலத்திலேயே ஸ்தூபிகளை அமைப்பதும், புத்த தாதுவை வழிபடுவதும் வழக்கத்தில் வந்தது.  .[14] .[15] அசோகரின் முயற்சியில் கிரேக்க அரசுகள் உட்பட, பல்வேறு அண்டை நாடுகளுக்கு பௌத்தத்தைப் பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அலெக்சாந்தர் உட்பட பல கிரேக்க அரசுகளும் பௌத்தத்தை ஏற்றுப்போற்றி இருக்கின்றன.E).[16]

இலங்கையில் பௌத்தம்

[தொகு]

இலங்கைக் குறிப்புகளின் படி,  அசோகரின் மகனான மகிந்தன் பொ.மு 2ஆம் நூற்றாண்டில்  அந்நாட்டுக்கு பௌத்தத்தைக் கொணர்ந்திருக்கிறார். அசோகரின் மகள்,  சங்கமித்தை பிக்குணி மடமொன்றை ஆரம்பித்து வைத்ததுடன்,புனித போதி மரத்தையும் இலங்கைக்குக் கொணர்ந்தார்.  எனினும் புத்த சிற்பங்களின் மிகப்பழைமையான சான்றுகள், வசப மன்னனின் ஆட்சிக்காலத்திலேயே(65-109 பொ.மு) இலங்கையில் கிடைக்க ஆரம்பிக்கின்றன.[17] வரலாற்றுக்காலத்தில் இலங்கையில் மகாயானப் பிரிவு பெரும் எழுச்சி கண்டு வந்தாலும், முதலாம் பராக்கிரமபாகுவின் முயற்சியில் (1153 - 1186) அது இல்லாதொழிக்கபப்ட்டு, இலங்கை இன்றுள்ளது போல் பௌத்த நாடானது.

மகாயான பௌத்தம்

[தொகு]

மகாசங்கிக மற்றும் சர்வாஸ்திவாதப் பிரிவுகளிலிருந்து, மகாயான பௌத்தம், பொ.மு 150 - பொ.பி 100 இற்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கின்றது.[18] மகாயான பௌத்தத்தின் மிகப்பழைமையான கல்வெட்டு ஒன்று,  பொ.பி 180ஐச் சேர்ந்ததாக, மதுராவில் கிடைத்திருக்கின்றது.[19] மகாயானம், புத்தருக்கு மேம்பட்ட போதிசத்துவர் பாதையைத் தெரிந்தெடுத்ததுடன், காலத்தால் பிற்பட்ட மகாயான சூத்திரங்களின் அடிப்படையில் தன்னை அமைத்துக்கொண்டது.[20] சமாந்தர உலகங்கள் பல உள்ளன. அவற்றில் தர்மத்தைப் போதிக்கும் பல்வேறு புத்தர்கள் இருக்கிறார்கள் என்பது மகாயானத்தின் கொள்கை.[21]

மகாயானம், இந்தியாவில் ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்கபப்டவில்லை எனினும்,   சுவான்சாங் (பொ.பி 7 ஆம் நூற்றாண்டு) காலத்தில், இந்தியாவின் அரைவாசி பௌத்தர்கள் மகாயானிகளாக இருந்திருக்கிறார்கள்.  .[22]  மத்தியமிகம், யோகசாரம், மற்றும் ததாகதகர்ப்பம் ஆகிய பிரிவுகள் மகாயான சிந்தனையை வளர்த்தெடுத்தவை ஆகும். இன்று திபெத்திலும் கிழக்காசியாவிலும் மகாயானமே முக்கியமான பௌத்தப்பிரிவாக விளங்குகின்றது. 

குறிப்புகள்

[தொகு]
  1. Harvey, 2012, p. 14.
  2. Harvey, 2012, p. 14-15.
  3. Harvey, 2012, p. 25.
  4. Harvey, 2012, p. 24.
  5. Beyond Enlightenment: Buddhism, Religion, Modernity by Richard Cohen. Routledge 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415544440. pg 33.
  6. Sakya or Buddhist Origins by Caroline Rhys Davids (London: Kegan Paul, Trench, Trubner, 1931) pg 1.
  7. Curators of the Buddha By Donald S. Lopez. University of Chicago Press. pg 7
  8. Prebish, Charles S. Buddhism: A Modern Perspective, p. 23
  9. Harvey, Peter (2013). An Introduction to Buddhism: Teachings, History and Practices (2nd ed.). Cambridge, UK: Cambridge University Press. pg. 88-90.
  10. Harvey, 2012, p. 98.
  11. Harvey, 2012, p. 98.
  12. Harvey, 2012, p. 100.
  13. Harvey, 2012, p. 101.
  14. Harvey, 2012, p. 103.
  15. Harvey, 2012, p. 103.
  16. Harvey, 2012, p. 103.
  17. Bandaranayake, S.D. Sinhalese Monastic Architecture: The Viháras of Anurádhapura, page 22
  18. Harvey, 2012, p. 108, 110
  19. Neelis, Jason. Early Buddhist Transmission and Trade Networks.2010. p. 141
  20. Harvey, 2012, p. 108.
  21. Snellgrove, David L. Indo-Tibetan Buddhism: Indian Buddhists and Their Tibetan Successors, 2004, p. 56.
  22. Harvey, 2012, p. 109.

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌத்த_வரலாறு&oldid=2977534" இலிருந்து மீள்விக்கப்பட்டது