உள்ளடக்கத்துக்குச் செல்

பேராக் சுல்தான் அப்துல்லா முகமது சா II

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா அப்துல்லா
Sultan Abdullah Muhammad Shah II
Abdullah Muhammad Shah II of Perak
عبد الله ٢
பேராக் சுல்தான்
26-ஆவது பேராக் சுல்தான்
ஆட்சிக்காலம்20 சனவரி 1874 - 30 மார்ச் 1877
முன்னையவர்இசுமாயில் முகபிடின் ரியாட் சா
பின்னையவர்பேராக் சுல்தான் யூசோப் சரிபுடின் முசபர் சா
பிறப்பு(1842-09-21)21 செப்டம்பர் 1842
பேராக்
இறப்பு22 திசம்பர் 1922(1922-12-22) (அகவை 80)
கோலாகங்சார், பேராக்
துணைவர்ராஜா தீபா சகாபுடின் ரியாட் சா
குழந்தைகளின்
பெயர்கள்
ராஜா நிகா மன்சூர்
ராஜா சூலான்
ராஜா அப்துல் மாலிக்
ராஜா சாயிட்தாவுபி
ராஜா அப்துல் ரகுமான்
ராஜா அப்துல் அமீட்
ராஜா உசேன்
பெயர்கள்
பேராக் சுல்தான் அப்துல்லா முகமது சா II
Sultan Abdullah Muhammad Shah II Ibni Almarhum Sultan Jaafar Safiuddin Muazzam Shah Waliullah
தந்தைசுல்தான் ஜாபார் சைபுடின் முவாட்சாம் சா
தாய்வான் நிகா மாத்திரா
மதம்இசுலாம்

அப்துல்லா முகமது சா II அல்லது பேராக் சுல்தான் அப்துல்லா முகமது சா II; (ஆங்கிலம்: Sultan Abdullah Muhammad Shah II; மலாய்: Sultan Abdullah Muhammad Shah II Ibni Almarhum Sultan Jaafar Safiuddin Muadzam Shah Waliullah); (பிறப்பு: 21 செப்டம்பர் 1842; இறப்பு: 22 டிசம்பர் 1922) என்பவர் பேராக் மாநிலத்தின் 26-ஆவது சுல்தான் ஆவார்.

பேராக் மாநிலப் பாடலான சுல்தானின் காலத்தை இறைவன் நீட்டிக்கட்டும் (மலாய்: Allah Lanjutkan Usia Sultan) எனும் பாடலை உருவாக்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இந்தப் பாடல் தற்போது நெகாராகூ எனும் மலேசிய நாட்டின் தேசியப் பாடலாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆட்சி

[தொகு]

சனவரி 1874-இல்; பேராக் மாநில மலாய்த் தலைவர்களுக்கும், சுல்தான் ராஜா அப்துல்லாவுக்கும் (பேராக் சுல்தான் அப்துல்லா முகமது சா II) இடையில் நிலவி வந்த அரியணை வாரிசு தகராறுகள் தொடர்பாகவும்; பங்கோர் தீவு மற்றும் டிண்டிங்ஸ் ஆகிய பகுதிகளை ஐக்கிய இராச்சியத்திற்கு விட்டுக்கொடுப்பது தொடர்பாகவும்; விவாதிக்க ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கு நீரிணை குடியேற்றங்களின் 9-ஆவது ஆளுநர் ஆண்ட்ரு கிளார்க், ஏற்பாடு செய்தார். அரியணைக்கான கோரிக்கையை ராஜா அப்துல்லா கைவிட்டால் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.[1]

லாருட் போர்களின் (1861-1874) முடிவில், அந்தப் போர்களில் பங்கேற்ற சீனர்கள் அமைதி காக்க ஒப்புக்கொண்டனர்; மற்றும் ஒரு பிரித்தானிய முதல்வரை நடுவராக ஏற்றுக்கொண்டனர். அதே காலக்கட்டத்தில், கீழ் பேராக் மலாய்த் தலைவர்கள் (Lower Perak Chiefs), லாரூட் மலாய் அமைச்சர், நிதியமைச்சர் (Bendahari) மற்றும் தெமாங்காங் ஆகியோர் 1874-ஆம் ஆண்டு பாங்கோர் உடன்படிக்கையில் கையெழுத்திட ஆண்ட்ரு கிளார்க்கினால் வற்புறுத்தப்பட்டனர்.[1]

பேராக் அரியணை

[தொகு]

ராஜா அப்துல்லாவுக்கும் பேராக் மாநிலத்தின் முதல் பிரித்தானிய முதல்வரான ஜேம்ஸ் பர்ச்சிற்கும் இடையே அதிக அளவில் பதற்றங்கள் நிலவி வந்தன.

அப்போது பேராக் அரியணைக்கு வாரிசு போட்டிகள் தீவிரமாக இருந்தன. ராஜா இசுமாயில் (Raja Ismail); ராஜா அப்துல்லா ஆகிய இருவருக்கும் இடையே பலத்த போட்டிகள் நிலவியக் கட்டத்தில், ராஜா இசுமாயில் மட்டுமே சுல்தான் பதவிக்குப் பொருத்தமானவர் என ஜேம்ஸ் பர்ச் தன் மேலதிகாரிகளிடம் தெரிவித்தார். இதுவே ராஜா அப்துல்லாவிற்கும் ஜேம்ஸ் பர்ச்சிற்கும் இடையே தனிப்பட்ட வகையில் பகைமையையும் ஏற்படுத்தின.[2][3]

பங்கோர் உடன்படிக்கை

[தொகு]
பேராக் ஆற்றின் பாத்தாக் ராபிட் கிராமத்தில் சுல்தான் அப்துல்லா; 1874 சூன் மாதம் எடுக்கப்பட்ட படம்.

ராஜா அப்துல்லா 20 ஜனவரி 1874-இல் பாங்கோர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். பங்கோர் உடன்படிக்கைக்குப் பிறகு, அவர் ஒரு பிரித்தானிய ஆளுநரை ஏற்றுக் கொள்வதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ராஜா அப்துல்லா பிரித்தானியர்களால் 26-ஆவது பேராக் சுல்தானாக நியமிக்கப்பட்டார். உடன்படிக்கைக்குப் பிறகு, அவர் சுல்தான் அப்துல்லா முகமது சா II என்று அழைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் பேராக் பாதாக் ராபிட் எனும் ஆற்றங்கரைக் கிராமத்தில் தங்கினார். [1]

இருப்பினும் மலாய்த் தலைவர்களிடம் ஓர் அச்சம் நிலவியது. முதலில் பங்கோர் தீவு; மற்றும் டிண்டிங்ஸ் பகுதிகளை எடுத்துக் கொண்ட பிரித்தானியர்கள், காலப் போக்கில் பேராக் மாநிலத்தையும் கைப்பற்றிக் கொள்வார்கள் என்று அஞ்சிய மலாய்த் தலைவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில் ஜேம்ஸ் பர்ச், பேராக் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநராகப் பொறுப்பு வகித்தார்.

மகாராஜா லேலா

[தொகு]

21 சூலை 1875 அன்று, வட்டாரத் தலைவர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தின் போது பிரித்தானிய ஆளுநர் ஜேம்ஸ் பர்ச்சிற்கு விசம் கொடுப்பது என செய்யமுடிவு செய்யப்பட்டது. ஆனால் வட்டாரத் தலைவர்களில் ஒருவரான மகாராஜா லேலா என்பவர் ஜேம்ஸ் பர்ச்சைக் குத்திக் கொலை செய்ய முன்வந்தார். மகாராஜா லேலாவின் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[4]

1875-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி மகாராஜா லேலாவின் சீடர்களால் ஜேம்ஸ் பர்ச் கொல்லப்பட்டார். மகாராஜா லேலாவின் சீடர்களில் ஒருவரான செபுண்டம் (Sepuntum) என்பவர் ஜேம்ஸ் பர்ச்சை ஈட்டியால் குத்திக் கொன்றார். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்பட்ட சுல்தான் ராஜா அப்துல்லா, பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சீசெல்சு (Seychelles) நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார்.

பேராக் மாநிலத்தின் நாட்டுப் பண்

[தொகு]

பேராக் சுல்தான் அப்துல்லா முகமது சா II (Sultan Abdullah Muhammad Shah). இவர்தான் மலேசிய நாட்டுப்பண்ணான நெகாராகூ தோன்றுவதற்கு மூல காரணமாக அமைந்தவர். லா ரோசாலி (La Rosalie) எனும் பாடல் சீசெல்சு நாட்டின் மாஹே தீவில் புகழ்பெற்று விளங்கியது. இந்தத் தீவில் தான் பேராக் சுல்தான் அப்துல்லா, நாடு கடத்தப்பட்டு வாழ்ந்து வந்தார்.

சுல்தான் அப்துல்லா முகமட் சா, சீசெல்சு தீவில் வாழ்ந்த போது லா ரொசாலி பாடலின் இனிமையில் ஈர்க்கப் பட்டார். அவரும் ஓர் இசைப் பிரியர். அந்தப் பாடல் அவர் மனத்தில் இடம் பிடித்துக் கொண்டது. 1883-ஆம் ஆண்டு சுல்தான் அப்துல்லா முகமட் சா விடுதலையானார். மலாயாவிற்கு வந்ததும் அதே அந்தப் பாடலை இறைவன் சுல்தானின் ஆயுளை நீட்டிப்பாராக (Allah Lanjutkan Usia Sultan) எனும் தலைப்பில் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்தார். அதையே பேராக் மாநிலப் பண்ணாகவும் மாற்றி அமைத்தார்.[5][6]

பேராக் மாநிலப் பாடலின் இனிமையான மென்மை பலரையும் ஈர்க்கவே, 1957 ஆகஸ்டு 5-ஆம் தேதி, அந்தப் பாடலை மலேசிய நாட்டுப்பண்ணாக மாற்றி அமைத்தார்கள்.

இறப்பு

[தொகு]

சுல்தான் அப்துல்லா சிறிது காலம் சிங்கப்பூரிலும் பின்னர் பினாங்கிலும் வாழ்ந்தார். 1883-ஆம் ஆண்டில் அவர் விடுதலை பெற்றாலும் 1922-ஆம் ஆண்டு வரையில் பேராக் மாநிலத்திற்குத் திரும்பிச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. 1922-ஆம் ஆண்டு இறுதியில், அவர் பினாங்கில் இருந்து கோலாகங்சார் அரச நகருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். சுல்தான் அப்துல்லா 22 டிசம்பர் 1922-இல் காலமானார்.

மேற்கோள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Singapore: Marican and sons. pp. 223–224.{{cite book}}: CS1 maint: date and year (link)
  2. Andaya, Barbara Watson (1982). A History of Malaysia (in ஆங்கிலம்). New York: St. Martin's Press. pp. 162–163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-38120-2.
  3. Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Singapore: Maricon and sons. p. 226.
  4. Winstedt, Richard Olof (1962). A History of Malaya (in ஆங்கிலம்). Marican. p. 225.
  5. The National Anthem of Malaysia - Negaraku
  6. "7.3.3 Lagu Kebangsaan" from Kurikulum Bersepadu Sekolah Menengah Sejarah Tingkatan 5 (Buku Teks) Dewan Bahasa & Pustaka 2003

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]