பர்குனா மாவட்டம்
பர்குனா மாவட்டம் (Barguna) (வங்காள மொழி: বরগুনা தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் பரிசால் கோட்டத்தில் உள்ளது. நாட்டின் தெற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பர்குனா நகரம் ஆகும். [1]
மாவட்ட எல்லைகள்
[தொகு]1831.31 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டட்தின் வடக்கில் ஜல்கத்தி மாவட்டம், பரிசால் மாவட்டம், பிரோஜ்பூர் மாவட்டம் மற்றும் பதுவாகாளி மாவட்டங்களும், தெற்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் பிரோஜ்பூர் மாவட்டம் மற்றும் பேகர்ஹத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய ஆறுகள் பைரா ஆறு, பிஷ்காளி ஆறு, பலேஷ்வர் ஆறுகளாகும்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]பர்குனா மாவட்டம் ஆறு துணை மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்: அம்தாலி, பாம்னா, பர்குனா சதர், பேடாகி, பதர்கட்டா மற்றும் தல்தாலி ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்து உள்ளது. இங்கு நெல், பருப்பு வகைகள், சணல், கரும்பு, வாழை, வெற்றிலை, பாக்கு பயிரிடப்படுகிறது. இம்மாவட்டம் வங்காள விரிகுடா கடற்கரை கொண்டிருப்பதால் மீன் பிடித்தொழில் நன்கு உள்ளது. மூங்கில் கூடை முடைதல், நெசவு, நகைகள் செய்தல், இரும்புச் சாமான்கள் செய்தல், தையல் வேலை, தச்சு வேலை போன்றவைகள் குடிசைத் தொழிலாக உள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]1831.31 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 8,92,781 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 4,37,413 ஆகவும், பெண்கள் 4,55,368 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 96 ஆண்ககளுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 488 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 57.6 % ஆக உள்ளது.[2]
சமயங்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் 3485 மசூதிகளும், 43 இந்துக் கோயில்களும், ஐந்து கிறித்தவ தேவாலாயங்களும், ஒரு பௌத்த விகாரமும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Md Monir Hossain Kamal (2012). "Barguna District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Community Report Barguna Zila June 2012