பந்தியன், ரோம்
பந்தியன் | |
---|---|
Pantheon | |
Location | பகுதி IX பிளமினியசு வட்டம் |
Built in | கிபி 113–125 (தற்போதைய கட்டிடம்) |
Built by/for | டிராஜான், ஆர்டியன் |
Type of structure | உரோமக் கோயில் |
பந்தியன் என்பது, இத்தாலியின் ரோம்நகரில் உள்ள முன்னைய ரோமக் கோயிலும் தற்போதைய கிறித்தவத் தேவாலயமும் ஆகும். இது, அகசுத்தசின் ஆட்சிக் காலத்தில் (கிமு 27 – கிபி 14) மார்க்கசு அக்ரிப்பாவினால் கட்டுவிக்கப்பட்ட கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. தற்போதைய கட்டிடத்தை கிபி 126 ஆண்டை அண்டி பேரரசன் ஆட்ரியன் (Hadrian) கட்டிமுடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆட்ரியன் புதிய கட்டிடத்தைக் கட்டியபோது அக்ரிப்பாவின் முன்னைய கல்வெட்டை அப்படியே விட்டுவைத்ததால், பழைய கட்டிடம் தீயால் அழிந்த பின்னர் புதிய கட்டிடத்தைக் கட்டிய காலம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டதுடன், புதிய கட்டிடத்தின் காலம் எது என்பதையும் துல்லியமாக அறிய முடியவில்லை.[1]
பந்தியன் வட்டமான தள வடிவம் கொண்டது. முகப்பில், கூரையின் முக்கோணத் தலைக்கட்டுப் பகுதியைத் தாங்கி நிற்கும் கருங்கல்லாலான பெரிய கொறிந்தியத் தூண்களைக் கொண்ட முக மண்டபம் காணப்படுகின்றது. செவ்வக வடிவான இடைகழி ஒன்று முக மண்டபத்தையும் வட்ட மண்டபத்தையும் இணைக்கின்றது. வட்ட மண்டபம் ஒரு குவிமாடக் கூரையைக் கொண்டுள்ளது. இக்குவிமாடக் கூரையின் நடுவில் ஒரு வட்ட வடிவமான துளை உள்ளது. இதனால், இப்பகுதியில் வட்ட மண்டபம் ஆகாயத்துக்குத் திறந்துள்ளது. இக்கட்டிடம் கட்டி ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிய போதும், இன்றும் இதன் குவிமாடமே உலகின் மிகப்பெரிய வலுவூட்டப்படாத காங்கிறீட்டுக் குவிமாடம் ஆகும்.[2] மேற்குறிப்பிட்ட துளையின் உயரமும், கட்டிடத்தின் உள்விட்டமும் சமமானவை (142 அடி (43 மீட்டர்)).[3]
இதன் வரலாற்றுக் காலம் முழுவதும் இது பயன்பாட்டில் இருந்ததால், பண்டைய உரோமக் காலத்தைச் சேர்ந்த சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ள கட்டிடங்களுள் இதுவும் ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் இருந்து பந்தியன், புனித மேரிக்கும் வேத சாட்சிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயமாக இருந்து வருவதுடன், "சாந்த மரியா ரொட்டொண்டா" என அழைக்கப்பட்டும் வருகிறது.[4] இதன் முன்னால் உள்ள சதுக்கம் "பியாசா டெல்லா ரொட்டொன்டா" என அழைக்கப்படுகின்றது. பந்தியன் அரசாங்கச் சொத்து ஆகும். இது இத்தாலியின் பண்பாட்டு மரபுரிமை, சுற்றுலாத்துறை அமைச்சின் மேலாண்மையில், "போலோ மியூசியேல் டெல் லாசியோ" வினூடாகப் பேணப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டில் இதைப் பார்க்க ஆறு மில்லியன் மக்கள் வந்துள்ளனர்.
முன்னால், வழமையான கோயில்களின் முக மண்டபத்தைக் கொண்ட பந்தியனின் குவிமாடத்தோடு கூடிய வட்டமான பெரிய உள்ளறை உரோமக் கட்டிடக்கலையில் தனித்துவமானது. செந்நெறிக்காலப் பாணிகள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது இது ஒரு முன்மாதிரி ஆனதுடன், இதைப் பிற்காலக் கட்டிடக் கலைஞர்கள் பல தடவைகள் தமது கட்டிடங்களில் பிரதிபண்ணினர்.[5]
அமைப்பு
[தொகு]கட்டிடத்துக்குள் செல்வதற்குத் தொடக்கத்தில் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் முகமண்டபத்துக்கு அருகில் உள்ள நிலம் உயர்த்தப்பட்டுப் படிகள் இல்லாமல் ஆக்கப்பட்டன.[4] கூரையின் முக்கோணத் தலைக்கட்டு சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இச்சிற்பங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டுத் தங்க முலாம் பூசப்பட்டிருக்கக்கூடும். சிற்பங்களைக் கட்டிடத்துடன் பிணைப்பதற்கான பொருத்திகளுக்கான துளைகள், சிற்பம் ஒரு வளையத்துள் அமைக்கப்பட்ட ஒரு கழுகின் உருவமாகவும், வளையத்தில் இருந்து முக்கோணத் தலைக்கட்டின் மூலைகளை இணைக்கும் நாடாக்களைக் கொண்டதாகவும் இருக்கலாம் எனக் காட்டுகின்றன.[6]
ஒரு காலத்தில் தங்க முலாம் பூசப்பட்டிருந்த உள்ளறைக்குச் செல்லும் வெண்கலக் கதவு பந்தியனின் தொடக்ககாலக் கதவு அல்ல. நிலைகளைவிட மிகச் சிறிதாக உள்ள தற்போதுள்ள கதவு 15 ஆம் நூற்றாண்டில் இருந்து அங்கே உள்ளது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ MacDonald 1976, ப. 12–13
- ↑ Moore, David (1999). "The Pantheon". romanconcrete.com. பார்க்கப்பட்ட நாள் September 26, 2011.
- ↑ Rasch 1985, ப. 119
- ↑ 4.0 4.1 MacDonald 1976, ப. 18
- ↑ Summerson (1980), 38–39, 38 quoted
- ↑ MacDonald 1976, ப. 63, 141–2; Claridge 1998, ப. 203
- ↑ Claridge 1998, ப. 204