பதிவுத் திருமணம்
பதிவுத் திருமணம் என்பது அரசின் பதில் ஆளாக, அரசு ஊழியர் ஒருவர் திருமணத்தை நடத்தவோ, பதிவு செய்யவோ, அல்லது ஏற்கவோ செய்யும் நிகழ்வினைக்குறிக்கும். திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.
எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது. மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது. இந்தியாவில் இந்து, கிறித்துவ, இசுலாமிய சமயங்கள் என ஒவ்வொரு சமயத்துக்கும் தனித்தனியான திருமணப் பதிவுச் சட்டங்கள் உள்ளன.
தமிழகத்தில் திருமணப்பதிவு
[தொகு]தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009ன்படி பல மதங்களைச் சார்ந்த இந்திய குடிமக்களின், 24.11.2009 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். சிறப்புத் திருமணச் சட்டம், 1954, இந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872 , முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.
பதியும் முறை
[தொகு]இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் அவர்கள் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகு திருமணப் பதிவிற்கான குறிப்பாணை படிவம் ‘ஒ’ மற்றும் இதனுடன் இணைக்கப்படவேண்டிய விண்ணப்பபடிவம் ஆகியவை இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.கட்டாய திருமணப்பதிவிற்கான விவரங்கள் மற்றும் படிவங்கள் துறையின் இணையதளத்தில் www.tnreginet.net வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்தும் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப்பதிவிற்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100/ கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின், ரூ.150/ ) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப் பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட அல்லது அஞ்சல் வழி அனுப்பப்பட வேண்டும். மேலும், திருமணத்திற்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறியும் அடையாள சான்று நகல்கள் இணைக்கவேண்டும். இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- கழுத்தைக் கட்டி அழும் மணப்பெண் - குறுந்தகவல்கள் பரணிடப்பட்டது 2009-02-01 at the வந்தவழி இயந்திரம்