உள்ளடக்கத்துக்குச் செல்

நாவலந்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவு, இந்து, பௌத்தம் மற்றும் சமண சமய அண்டவியல் கோட்பாடுகளில் மனிதர்களும், மற்ற சீவராசிகளும் வாழும் உலகத்தைக் குறிக்கிறது.[1] மேலும் இச்சொல்லானது பிரித்தானியர் இந்திய துணைக்கண்டத்தைக் கைப்பற்றி அதற்கு இந்தியா என்ற பெயரை வைத்து அது பயன்பாட்டுக்கு வரும் வரை உள்ளூர் மக்களாலும் அருகில் உள்ள இலங்கை போன்ற தீவு மக்களாலும் தீபகற்ப இந்தியாவைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட ஒரு பெயராகும்.

சமஸ்கிருத மொழியில் ஜம்பு என்பதற்கு நாவல் மரம் ஆகும். எனவே தமிழில் ஜம்புத் தீவினை நாவலந் தீவு என தமிழ் இலக்கியங்களில் குறிப்பர்.

சூரிய சித்தாந்த சோதிடச் சாத்திரங்கள், வட துருவத்தை ஜம்புத் தீவு என்றும்; தென் துருவத்தை பாதாளம் அல்லது பாதள உலகம் என்றும் குறிப்பர். கடலடியில் உள்ள பாதாள உலகில் நாகர்கள் வாழ்வதாக இந்து, சமணச் சாத்திரங்கள் கூறுகிறது.[2]

வேத அண்டவியல் படி புராணக் கருத்துகள்

[தொகு]
ஜம்பு தீவின் வரைபடம்

சமணம் மற்றும் இந்து சமய புராண அண்டவியல் வரைபடங்களின் படி, அண்டம் ஏழு பெருங்கடல்களால் சூழப்பட்ட கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; ஜம்புத் தீவு, இலட்சத் தீவு, சல்மாலி தீவு, குசத் தீவு, கிரவுஞ்சத் தீவு, சகத் தீவு மற்றும் புஷ்கரத் தீவு ஆகும். இந்த ஏழு தீவுக்கண்டங்களிடையே உள்ள பெருங்கடல்கள் உப்பு நீர், கரும்புச் சாறு, திராட்சை ரசம், நெய், தயிர், பால் மற்றும் நன்னீர் ஆகியவைகளால் நிரம்பியுள்ளன.[3][4]

இந்த ஏழு கண்டங்களில் சுதர்சணத்தீவு என்றும் அழைக்கப்படும் ஜம்புத் தீவு முழுவதும் ஜம்பு ஆறு நிறைந்து பாய்கிறது. ஜம்புத் தீவு ஒன்பது மண்டலங்களும், எட்டு பெரு மலைகளும் கொண்டுள்ளது.

மார்கண்டய புராணத்தில் ஜம்புத் தீவின் வட துருவம் மற்றும் தென் துருவங்கள் குறுகலாகவும், நடுப்பகுதி அகலமாகவும் உள்ளது என சித்தரித்துள்ளது.

ஜம்புத் தீவின் மிக உயர்ந்த மேட்டுப் பகுதிகளை மலைகள் என்றும், அதன் மையப் பகுதியை, மலைகளின் அதிபதியான மேரு என்றும் குறித்துள்ளது.

மேரு மலையின் ஒரு கொடுமுடியில் பிரம்மாவின் பிரம்ம லோகமும்; அதனைச் சுற்றி இந்திரன் முதலான தேவர்கள் வாழும் எட்டு நகரங்களும் கொண்டுள்ளது.

பிரம்மாண்ட புராணம் மற்றும் மார்க்கண்டேய புராணம் ஆகியவற்றில் தாமரைப் பூ போன்ற ஜம்பு தீவை நான்கு பெரும் மண்டலங்களாகப் பிரித்துள்ளது. இதன் நடுவில் மேரு மலை அமைந்துள்ளது. விஷ்ணுவின் காலடியிலிருந்து புறப்படும் ஆகாய கங்கை ஆறு, சந்திர மண்டலத்தின் வழியாகப் பாய்ந்து, பிரம்மபுரியைச் சுற்றிக் கொண்டு, மேரு மலை வழியாக பாய்கையில் நான்கு கிளைகளாக ஜம்புத் தீவில் பாய்ந்து வளம் சேர்க்கிறது.[5]

சமணத்தில்

[தொகு]
சமண அண்டவியல் கோட்பாட்டின் படி ஜம்புத் தீவின் வரைபடம்
ஜம்புத் தீவின் வரைபடம், ராணக்பூர் சமணர் கோயில்கள்

சமண அண்டவியல் கோட்பாடுகளின் படி, மத்திய லோகம் அல்லது அண்டத்தின் நடுவில் உள்ள பகுதியான ஜம்புத் தீவில் மனிதர்களும், பிற ஜீவராசிகளும் வாழும் இடமாக கூறுகிறது. பல கண்டத் தீவுகளையும், பல பெருங்கடல்களையும் மத்திய லோகம் கொண்டுள்ளது. மத்திய லோகத்தின் முதல் எட்டு பெருங்கடல்கள் பெயர்கள்:

கண்டம் / தீவு பெருங்கடல்
ஜம்புத்தீவு உப்பு - பெருங்கடல்
கட்கி கண்ட் கருங் கடல்
புஷ்கரத் தீவு தாமரை பெருங்கடல்
வருணத் தீவு வருணப் பெருங்கடல்
ஷீர்வத் தீவு பாற்கடல்
நெய்த் தீவு நெய் பெருங்கடல்
இட்சுவாகுத்தீவு கரும்புச் சாறு பெருங்கடல்
நந்தீஸ்வரத்தீவு நந்தீஷ்வர பெருங்கடல்

அண்டத்தின் நடுவில் 100,000 யோசனை விட்டம் கொண்ட மேரு மலை ஜம்புத் தீவினை சுற்றி அமைந்துள்ளது.[6]

ஜம்புத் தீவு 6 பெரும் மலைகளால் சூழப்பட்டு, ஒன்பது சேத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்;

  1. பாரத சேத்திரம்
  2. மகாவிதேக சேத்திரம்
  3. ஐராவதம் சேத்திரம்
  4. ரம்மியகம்
  5. ஹரிவாசம்
  6. ஹிரன்யயவாத சேத்திரம்
  7. ஹைமாவதி சேத்திரம்
  8. தேவ குரு சேத்திரம்
  9. உத்தரகுரு சேத்திரம்

வரலாற்றில்

[தொகு]

பழங்கால இலங்கை வரலாற்று நூலான சூல வம்சத்தில் தீபகற்ப இந்தியாவைக் குறிப்பிட ஜம்புத் தீவு என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. [7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jambudwipa: The Seeds Of Political Unity In The Indian Subcontinent".
  2. பாதாள உலகில் கடவுளர்கள்
  3. Agni Purana 108.1-2.
  4. Matsya Purana 121-122.
  5. Geographical Data in the Early Puranas. A Critical Study, Dr M. R. Singh: University of Rajasthan/Jaipur. Punthi Pustak, Calcutta. 1972. p. 5
  6. Schubring, Walther (1995)Pp. 204-246
  7. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் பக்கம், 43 ஆசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமி, விடியல் பதிப்பகம், கோவை- 15, பதிப்பு ஆண்டு 2000 திசம்பர்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவலந்தீவு&oldid=4059794" இலிருந்து மீள்விக்கப்பட்டது