உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருச்சி தாயுமானவர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):சிரபுரம், மலைக்கோட்டை
அமைவிடம்
ஊர்:திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாத்ருபூதேஸ்வரா்
தாயுமானவர் (தாயுமானேஸ்வரா்)
சந்திரசேகரா்
சுந்தரேஸ்வரா்
உற்சவர்:தாயுமானவர் (தாயுமானேஸ்வரா்).
தாயார்:மட்டுவார்குழலி
சுகந்தகுந்தளாம்பிகை
ஆனந்தவள்ளி
மீனாட்சி
உற்சவர் தாயார்:சுகந்தகுந்தளாம்பிகை.
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
ஆகமம்:காரணம், காமீகம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர்
அப்பர்
சுந்தரா்
அருணகிரிநாதா்
தாயுமானவடிகளாா்
ஆதிசங்கரா்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.

தல வரலாறு

[தொகு]
  • இத்திருத்தலம் தற்போது இப்பகுதி மக்களால் திருச்சிராப்பள்ளி, திருச்சி என்று வழங்கப்படுகிறது.
  • எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.
  • திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) இவ்வூரில் சிவபெருமானை வழிபட்ட இடமாதலின் அந்த அரக்கன் பெயரிலே 'திரிசிரன்பள்ளி' என்று பெயர் ஏற்பட்டது. ஆனால் அது காலப்போக்கிலும் மக்களின் பேச்சு வழக்கத்தில் திருச்சிராப்பள்ளி ஆக மாறியது.
  • உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.
  • வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு.
  • தனகுத்தன் என்ற வணிகன் இவ்வூரில் வசித்தான். கர்ப்பிணியான அவனது மனைவி, உதவிக்கு தாயை அழைத்திருந்தாள். தாயும் அவளது வீட்டிற்குக் கிளம்பி வந்தாள். வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவளால் வீட்டிற்கு வரமுடிய வில்லை. இதனிடையே, அவளுக்குப் பிரசவ வலி உண்டானது. தன்னைக் காக்கும்படி திரிசிராநாதரிடம் வேண்டினாள் ரத்னாவதி. அப்போது, சிவன் அவளது தாயின் வடிவில் சென்று, பிரசவம் பார்த்தார்.
  • காவிரியில் ஒரு வாரம் வரையில் வெள்ளம் ஓடவே, அதுவரையில் சிவன், தாயின் இடத்திலிருந்து அப்பெண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். வெள்ளம் வடிந்தபிறகு, ரத்னாவதியின் தாய் வீட்டிற்கு வந்தாள். அவளது வடிவில் மற்றொருவள் இருந்ததைக் கண்ட, இருவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது சிவன் இருவருக்கும் சுயவடிவில் காட்சி கொடுத்தருளினார். தாயாக இருந்து அருளியதால் இவர், "தாயுமானவர்' என்று பெயர் பெற்றார்.

சிறப்புக்கள்

[தொகு]
  • இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.
  • மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்.
  • வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.
  • மலையின் உச்சியில் "பிள்ளையார்" உச்சிப் பிள்ளையார் கோவில் உள்ளது.
  • தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
  • சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
  • தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்.
  • சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் பிராணம்) பாடியுள்ளார்.
  • கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது. சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது. சிவனுக்கு, பூஜையின்போது சன்னதிக்குப் பின்புறத்தில்தான் (கிழக்கு திசையில்) மேளதாளம் வாசித்து, தேவாரம் பாடுகின்றனர்.

திருத்தலப் பாடல்கள்

[தொகு]

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.



கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே..

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே
அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.

குடமுழுக்கு

[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கினை எதிர்நோக்கி புதிதாக 33 அடி உயர கொடி மரம் அமைக்கப்பட்டது. குடமுழுக்கு 6 டிசம்பர் 2015இல் நடைபெற்றது.[1] [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தாயுமான சுவாமி கோயிலில் குடமுழுக்கு முகூர்த்தக் கால், தினமணி, 23 நவம்பர் 2015
  2. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் குடமுழுக்கு, தினமணி, 7 டிசம்பர் 2015

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]