தாய்லாந்து கால்வாய்
தாய்லாந்து கால்வாய் (மலாய்: Terusan Kra; ஆங்கிலம்: Thai Canal; Kra Canal; Kra Isthmus Canal); என்பது தெற்கு தாய்லாந்தில் உள்ள கிரா பூசந்தியின் குறுக்கே, தாய்லாந்து வளைகுடாவையும்; அந்தமான் கடலையும் இணைக்க முன்மொழியப்பட்ட ஒரு கால்வாய்த் திட்டமாகும்.
2015-ஆம் ஆண்டில் கிரா பூசந்தியில் தாய்லாந்து கால்வாய் (Thai Canal) அமைப்பதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பட்டது. அத்தகைய கால்வாய், தென் கிழக்கு ஆசியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பாதைகளின் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
பொது
[தொகு]இந்தக் கால்வாய் மலாக்கா நீரிணை வழியாகச் செல்வதற்கு ஒரு மாற்றுப் போக்குவரத்தாக அமையும். தவிர ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கான போக்குவரத்தை 1,200 கி.மீ. தொலைவிற்கு குறைக்கும்.[1]
இந்தக் கால்வாய்த் திட்டத்தை 21-ஆம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுப் பாதையின் (21st century maritime Silk Road) ஒரு பகுதி என சீனா குறிப்பிடுகிறது. தாய்லாந்து வளைகுடாவை அந்தமான் கடலுடன் இணைக்கும் இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.[2][3]
தாய்லாந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு
[தொகு]இந்தக் கால்வாயின் நீளம் 102 கிலோமீட்டர். அகலம் 400 மீட்டர். ஆழம் 25 மீட்டர். கால்வாய்க்கான திட்டங்கள் குறித்து பல்வேறு காலக் கட்டங்களில் ஆலோசிக்கப்பட்டு ஆராயப் பட்டன.[4]
தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான் ஓ சா (Prayut Chan-o-cha), பிப்ரவரி 2018-இல், கால்வாய் அமைக்கும் திட்டம் அரசாங்க முன்னுரிமைத் திட்டம் அல்ல என்று அறிவித்தார்.[5] இருப்பினும், 16 2020 ஜனவரி 16-ஆம் தேதி, தாய்லாந்து கால்வாய் திட்டத்தை ஆய்வு செய்ய 120 நாட்களுக்குள் ஒரு குழுவை அமைப்பதற்கு தாய்லாந்து நாடளுமன்றக் குழு ஒப்புக் கொண்டது.[4]
வரலாறு
[தொகு]ஆசியாவைச் சுற்றி வரும் கப்பல் நேரத்தைக் குறைப்பதற்கு, கிரா பூசந்தியில் ஒரு கால்வாய் அமைப்பதற்கு 1677-ஆம் ஆண்டிலேயே பரிந்துரைகள் செய்யப்பட்டன. அந்தத் திட்டம் 1793-ஆம் ஆண்டில், மீண்டும் முன் வைக்கப்பட்டது.
தாயலாந்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியை இராணுவக் கப்பல்கள் மூலமாகப் பாதுகாப்பதை எளிதாக்கும் என்று தாய்லாந்து மன்னர் சக்ரியின் (ராம I) (King Chakri (Rama I), இளைய சகோதரரான மகா சூரா சிங்கநாத் (Maha Sura Singhanat) என்பவர் பரிந்துரை செய்தார்.
சூயஸ் கால்வாய் பெர்டினாண்ட் டி லெசெப்ஸ்
[தொகு]19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி (British East India Company) கால்வாய் அமைப்பதில் ஆர்வம் காட்டியது. 1882-ஆம் ஆண்டில், சூயஸ் கால்வாயை உருவாக்கிய பெர்டினாண்ட் டி லெசெப்ஸ் (Ferdinand de Lesseps), கிரா பூசந்தி பகுதிக்குப் பயணம் செய்தார்.
ஆனாலும், விரிவாக ஆய்வு செய்வதற்குத் தாய்லாந்து மன்னர் அவரை அனுமதிக்கவில்லை.
1897-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் துறைமுகத்தின் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க அந்தக் கால்வாயை வெட்ட வேண்டாம் என்று தாய்லாந்து மற்றும் மலாயா பிரித்தானிய அரசாங்கங்கள் முடிவு செய்தன.
ஆங்கிலோ - தாய்லாந்து அமைதி ஒப்பந்தம்
[தொகு]1946-ஆம் ஆண்டில், தாய்லாந்தும் ஐக்கிய இராச்சியமும் ஆங்கிலோ - தாய் அமைதி ஒப்பந்தத்தில் (Anglo-Thai Peace Treaty) கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் இரண்டாம் உலகப் போரின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட பல சலுகைகளில் ஒரு சலுகை இவ்வாறு கூறுகிறது: பிரித்தானிய அரசாங்க அனுமதி இல்லாமல் கிரா பூசந்தியின் குறுக்கே கால்வாய் தோண்டுவது தடுக்கப் படுகிறது.[6][7]
கால்வாய் வெட்டுவதில் தடை ஏற்பட்டதால், 1993-இல் கிரா பூசந்தியின் குறுக்கே ஒரு சரக்குச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. எனினும் சில தொழில்நுட்பக் காரணங்களினால் அந்த முயற்சியும் கைவிடப் பட்டது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Noorul Shaiful Fitri Abdul Rahman; Nurul Haqimin Mohd Salleh; Ahmad Fayas Ahmad Najib; Lun, Venus Y (21 November 2016). "A descriptive method for analysing the Kra Canal decision on maritime business patterns in Malaysia". Journal of Shipping and Trade 61 (13). doi:10.1186/s41072-016-0016-0.
- ↑ Griffith University (23 March 2010). "Thai Canal Project: Over 300 years of conceptualising and still counting". Asian Correspondent. Hybrid News. Archived from the original on 26 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
- ↑ Loftus, Alfred John (1883). Notes of a journey across the Isthmus of Krà.
- ↑ 4.0 4.1 "Time to revisit canal project" (Opinion). Bangkok Post. 20 January 2020. https://www.bangkokpost.com/opinion/opinion/1839359/time-to-revisit-canal-project. பார்த்த நாள்: 20 January 2020.
- ↑ "Proposed Kra Canal not priority project for Thai govt". The Straits Times. 13 February 2018. http://www.straitstimes.com/asia/se-asia/proposed-kra-canal-not-priority-project-for-thai-govt. பார்த்த நாள்: 13 February 2018.
- ↑ Fine, Herbert A. (1965). "The Liquidation of World War II in Thailand". Pacific Historical Review 34 (1): 65–82. doi:10.2307/3636740. https://archive.org/details/sim_pacific-historical-review_1965-02_34_1/page/65.
- ↑ Nicholas Tarling (1978). "Rice and Reconciliation: The Anglo-Thai Peace Negotiations of 1945". Journal of the Siam Society 66 (2): 59–112. http://www.siamese-heritage.org/jsspdf/1971/JSS_066_2c_Tarling_RiceAndReconciliationAngloThaiPeaceNegotiations1945.pdf.