உள்ளடக்கத்துக்குச் செல்

சாலமோனின் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலமோனின் கோவில் - குறுக்குவெட்டுப் பார்வை. மேலே: மேற்குப் பார்வை. கீழே: கிழக்குப் பார்வை.

சாலமோனின் கோவில் (Temple of Solomon) என்பது பண்டைய எருசலேம் நகரில், சீயோன் மலை (கோவில் மலை) என்னுமிடத்தில் கட்டியெழுப்பப்பட்டு, கி.மு. 587இல் இரண்டாம் நேபுகாத்னேச்சார் என்னும் மன்னனால் அழிக்கப்படுவதற்கு முன் நிலைத்து நின்ற யூத வழிபாட்டிடம் ஆகும்.[1]யூத சமய வழிபாட்டிற்காக முதன்முதலாகக் கட்டப்பட்ட கோவில் இதுவே என்பதால், இக்கோவிலுக்கு "முதல் கோவில்" (First Temple) என்னும் பெயரும் உண்டு.

பழைய ஏற்பாட்டின்படி, இக்கோவில் இசுரயேலின் மன்னராக ஆட்சிசெய்த சாலமோன் காலத்தில் கட்டப்பட்டது. எனவே, கிமு 10ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.[2]

ஒருவேளை, இசுரயேலர் எருசலேமைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அங்கிருந்த "எபூசியர்" நிறுவியிருந்த திருத்தலத்தின்மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்.[3]

யாவே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்

[தொகு]

ஒருங்கிணைந்த இசுரயேல் அரசு "தெற்கு அரசு" (யூதா) என்றும், "வடக்கு அரசு" (இசுரயேல்) என்றும் கிமு 10ஆம் நூற்றாண்டில் பிரிந்ததைத் தொடர்ந்து அக்கோவில் இசுரயேலரின் கடவுளாகிய "யாவே" கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலின் உள்ளே "உடன்படிக்கைப் பேழை" என்னும் பெட்டகமும் வைக்கப்பட்டது.[4]

அகழாய்வுச் சான்றுகள்

[தொகு]

இன்று கிழக்கு எருசலேமில் அரசியல் நிலவரம் நெகிழ்ச்சியாக உள்ளதாலும், கோவில் மலை என்னும் இடம் இசுலாமியரின் புனித இடமாக உள்ளதாலும் விரிவான அகழாய்வுகள் நடைபெற இயலவில்லை. இதுவரை கிடைத்த அகழாய்வுச் சான்றுகளின்படி, சாலமோனின் கோவில் இருந்ததற்கான அகழாய்வு ஆதாரங்கள் இல்லை. இதற்குக் காரணம் விவிலியத்தில் 'யா' என்னும் கடவுள் குறிப்பிட்ட படியே அதை அழித்ததால் கூட இருக்கலாம்.( 2 குறிப்பேடு 7:19,20 ; 29 : 8 , 2 அரசர்கள் 25 : 8,9 )

விவிலியம் தவிர வேறு சமகால எழுத்துக் குறிப்புகளும் கிடைக்கவில்லை.[5][6]

விவிலிய விளக்கமாக எழுந்த பண்டைய யூத இலக்கியத்தின்படி, சாலமோனின் கோவில் 410 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. அது கிமு 832இல் கட்டப்பட்டு, கிமு 422இல் அழிவுற்றது.

சாலமோன் கோவில் பற்றிய சான்றுகள் அடங்கியுள்ள விவிலிய நூல்கள்

[தொகு]
எருசலேமில் சாலமோன் மன்னர் கோவிலை அர்ப்பணிக்கிறார். ஓவியர்: ஜேம்ஸ் ழாக் ஜோசப் டிஸ்ஸோ அல்லது அவர்தம் மாணவர். காலம்: 1836-1902. பிரான்சு.

சாலமோன் கட்டிய கோவில் பற்றி நாம் அறியும் தகவல்களுக்கு ஆதாரமாக உள்ளவை கீழ்வரும் விவிலிய நூல்கள் ஆகும்:

இசுரயேலின் கடவுளாகிய யாவேயின் உறைவிடமாக முதலில் கருதப்பட்டது "உடன்படிக்கைப் பேழை" ஆகும். அது "திரு உறைவிடத்தின்" உள்ளே சந்திப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டது. இசுரயேலின் பல பிரிவுகளை ஒன்றிணைத்தபின் தாவீது அரசர் உடன்படிக்கைப் பேழையைத் தம் புதிய தலைநகராகிய எருசலேமுக்குக் கொண்டு வந்தார். அங்கு ஒரு கோவில் கட்டியெழுப்புவதும் அக்கோவிலின் உள்ளே உடன்படிக்கைப் பேழையை வைப்பதும் அவருடைய எண்ணமாய் இருந்தது. இவ்வாறு உடன்படிக்கைப் பேழைக்கு நிலையான உறைவிடம் அளிக்க விரும்பிய தாவீது, கோவில் கட்டுவதற்காகப் "போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கினார்" (1 குறிப்பேடு 21:18-24).

ஆனால், தமக்குக் கோவில் கட்டுவது தாவீது அல்ல, தாவீதின் மகனாகிய சாலமோனே அக்கோவிலைக் கட்டுவார் என்று யாவேக் கடவுள் தாவீதிடம் கூறினார். கீழ்வரும் விவிலியப் பகுதிகள் சாலமோன் கட்டிய கோவில் பற்றிய விவரங்களைத் தருகின்றன:

கோவில் கட்ட ஏற்பாடுகள்

[தொகு]

சாலமோன் மன்னர் தீர் நாட்டு மன்னராகிய ஈராம் என்பவரை அணுகி, கோவில் கட்டத் தேவையான கேதுரு மரங்கள், கட்டடக் கலைஞர்கள் வேண்டுமென்று கேட்டுப் பெற்றார். ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் "கருவறையை" அவர் அமைத்தார் (காண்க: 1 அரசர்கள் 6:19). கடவுள் மக்களுக்குக் கொடுத்த கட்டளைகள் எழுதப்பட்ட இரு கற்பலகைகள் உடன்படிக்கைப் பேழையின் உள் இருந்தன. இவ்வாறு, சாலமோன் "கடவுள் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை அவருக்காகக் கட்டினார்"; அக்கோவிலை அர்ப்பணம் செய்தார் (காண்க: 1 அரசர்கள் 8:14-21).

சாலமோன் கட்டிய கோவில் எங்கே இருந்தது என்பதைத் துல்லியமாக அறிய இயலவில்லை. இன்று "பாறைக் குவிமாடம்" (Dome of the Rock) என்று அழைக்கப்படுகின்ற "கோவில் மலை" (Temple Mount) பகுதியில் அக்கோவில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அம்மலை எங்கே இருந்தது என்பது குறித்து இரு கருத்துகள் உள்ளன. இன்று பொன்முலாம் பூசப்பட்டு விளங்குகின்ற குவிமாடத்தின் கீழே உள்ள பாறை இருக்கும் இடத்தில் சாலமோன் கோவிலின் கற்பீடம் இருந்தது என்பது ஒரு கருத்து. மற்றொரு கருத்துப்படி, சாலமோன் கோவிலின் திருத் தூயகம் மேற்கூறிய பாறையின் மேல் அமைந்திருந்தது.

அண்மையில் இன்னொரு கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாலமோனின் கோவில் பாறைக் குவிமாடத்திற்கும் பொன்முலாம் பூசப்பட்ட குவிமாடத்திற்கும் இடையே இருந்திருக்கலாம்.[7]

2 அரசர்கள் நூல்

[தொகு]

கிமு 9ஆம் நூற்றாண்டில், யூதா அரசர் யோவாசு காலத்தில் சாலமோனின் கோவில் சீரமைக்கப்பட்டது. அதற்காக மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டது (காண்க: 2 அரசர்கள் 12:4-16).

ஆனால், இசுரயேல் அரசன் யோவாசு "ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டார்" (2 அரசர்கள் 14:14). இது நடந்ததது கிமு 8ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆகும்.

யூதா அரசன் ஆகாசு கிமு 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோவில் கருவூலத்தைக் கொள்ளையடித்தார். 2 அரசர்கள் 16:8 கூறுவதுபோல, "ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்."

அசீரிய மன்னனின் விருப்பத்துக்கு இணங்க, ஆகாசு மன்னன் சாலமோனின் கோவிலில் பல மாற்றங்களைப் புகுத்தினார். ஆனால் அவை விவிலிய ஆசிரியருக்கு ஏற்புடையனவாக இல்லை (காண்க: 2 அரசர்கள் 16:10-18).

யூதா அரசர் எசேக்கியா காலத்தில் சாலமோனின் கோவில்

[தொகு]

யூதா அரசர் எசேக்கியா கிமு 715இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவரது ஆட்சியிலும் எருசலேம் கோவில் முக்கிய இடம் பெற்றது. மக்கள் சிலைவழிபாட்டில் ஈடுபடா வண்ணம் எசேக்கியா தடுத்தார்.[8]

எசேக்கியா காலத்தில் அசீரிய மன்னன் சனகெரிபு (Sennacherib) எருசலேமை முற்றுகையிட வந்தபோது எசேக்கியா கோவில் கருவூலத்தைச் சூறையாடி அசீரிய மன்னனுக்குப் பரிசுகள் கொடுக்கவில்லை; மாறாக, அவர் கடவுளின் இல்லமாகிய கோவிலுக்கு சென்று இறைவேண்டல் நிகழ்த்தினார்.(2 அரசர்கள் 18:23; 19:1; 19:1-14).[9]

யூதா அரசன் மனாசே காலத்தில் சாலமோனின் கோவில்

[தொகு]

கடவுள் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்ட எசேக்கியா மன்னரின் மகன் மனாசே தம் தந்தையைப் போல நடக்காமல், எருசலேம் கோவிலில் பிற தெய்வங்களின் சிலைகளை நிறுவினார். "தொழுகை மேடுகளை" கட்டியெழுப்பினார் (2 அரசர்கள் 21:3-7; 4-9). முற்காலத்தில் சாலமோனும் இவ்வாறே யாவேக் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இராமல் தவறு செய்தார் (காண்க: 1 அரசர்கள் 11:7).

தொழுகை மேடுகள் கட்டலாகாது என்னும் தடையை (காண்க: இணைச் சட்டம் 12) மீறிய சாலமோனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை, அவர்தம் அரசு தெற்கு மேற்கு என்று இரண்டாகப் பிளவுபடும் என்பதாகும். மனாசே செய்த தவற்றுக்குத் தண்டனை மக்கள் நாடுகடத்தப்படுவர் என்பதாகும்.[10]

மனாசே அரசரின் பேரன் யோசியா காலத்தில் சாலமோனின் கோவில்

[தொகு]

கிமு சுமார் 621ஆம் ஆண்டில் மனாசே அரசனின் மகன் ஆமோனுக்கு மகனாகப் பிறந்த யோசியா என்பவர் எருசலேம் கோவிலிலிருந்து பிற சமய வழிபாட்டுப் பொருள்களையெல்லாம் அகற்றினார் (2 அரசர்கள் 22:3-19; 23:11-12). எருசலேமில் மட்டுமே வழிபாடு நிகழும் என்னும் சட்டத்தையும் யோசியா கொண்டுவந்தார்.

நெபுகத்னேசர் எருசலேம் கோவிலைச் சூறையாடியது

[தொகு]

கிமு சுமார் 598ஆம் ஆண்டில், யோயாக்கின் அரசரின் குறுகிய ஆட்சியின் போது, பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எருசலேமை முற்றுகையிட்டுத் தாக்கினார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு நெபுகத்னேசர் மீண்டும் எருசலேமை முற்றுகையிட்டார். 30 மாதங்களுக்குப் பிறகு நகரச் சுவர் தகர்க்கப்பட்டதும் கிமு 587இல் எருசலேம் கோவிலும், அதோடு நகரத்தின் பெரும்பகுதியும் தீக்கு இரையாயின (2 அரசர்கள் 25).

ஆம் ! 'யா' கடவுள் கூறியபடியே செய்தார்.( 2 குறிப்பேடு 7:19,20;  புலம்பல் 2 : 17 ; தானியேல் 9 : 12 ) 

சாலமோன் கோவிலின் கட்டட அமைப்பு

[தொகு]
விவிலிய அடிப்படையில் சாலமோனின் கோவில் தோற்ற வரைவு.

மெசபொத்தாமியாவிலும் பண்டைய எகிப்திலும் பெனீசியர் காலத்திலும் இருந்த கோவில்களின் அமைப்பு அகழ்வாய்வுகள் வழியாகத் தெரிகிறது. ஆனால், அவற்றுள் எந்த ஒரு கோவிலையும் அப்படியே தழுவாமல், பலவற்றிலிருந்தும் பல அம்சங்களைத் தெரிந்து, அவற்றை இசைவுறப் பொருத்தி சாலமோன் கோவில் கட்டப்பட்டது.

சாலமோன் கோவிலின் பொது கட்டட அமைப்பு எகிப்து திருத்தலங்களின் அமைப்பைப் பெருமளவு ஒத்திருக்கிறது.[11]

சாலமோனின் கோவில் கட்டடத் தோற்றம் பற்றிய ஊகம்

[தொகு]

அக்காலத்தில் எழுப்பப்பட்ட சாலமோனின் கோவில் எவ்வாறு தோற்றமளித்திருக்கும் என்பதை நிர்ணயிக்க நமக்குத் துணையாக இருப்பவை விவிலியத்திலிருந்து அக்கோவில் பற்றிக் கிடைக்கின்ற செய்திகளும், பெனீசிய கோவில்கள் பற்றிய அகழ்வாய்வு ஆதாரங்களிலிருந்து மறுவமைப்பு செய்யக்கூடுமான ஊகங்களும் ஆகும். விவிலிய ஆசிரியர்கள் கட்டடக் கலை அல்லது பொறியியல் வல்லுநர்கள் அல்ல என்பதால் விவிலியத்திலிருந்து கட்டட நுணுக்கம் பற்றிய தகவல்கள் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், அவர்கள் சாலமோனின் கோவில் பற்றிக் குறித்துள்ள திட்டம் மற்றும் அளவைகளை அடிப்படையாகக் கொண்டு, பண்டைய கோவிலைப் போல பிற்காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

சாலமோனின் கோவில் கட்டடத் தோற்றம் வெவ்வேறு முறைகளில் மறுபதிவு (reconstruction) செய்யப்பட்டுள்ளது. கீழே தரப்படும் மறுபதிவு Easton's Bible Dictionary, மற்றும் Jewish Encyclopedia என்னும் நூல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

சாலமோனின் கோவில் "கருவறை"

[தொகு]

Kodesh Hakodashim (Holy of Holies) என்பது கோவிலின் மிகத் தூய்மையான பகுதியைக் குறிக்கும். அது "கருவறை" என்னும் பெயருடையது (1 அரசர்கள் 6:19). "உட்பகுதி" (Inner House) என்னும் பெயராலும் அது அழைக்கப்படும் (1 அரசர்கள் 6:27). "திருத் தூயகம்" என்பதும் அதன் பெயர் (1 அரசர்கள் 8:6).

கருவறை மற்றும் கோவிலின் பிற பகுதிகளின் அளவைகள் cubit அலகு அடிப்படையில் கணக்கிடப்பட்டன. ஒரு cubit என்பது அரசர் காலத்தில் 52.5 செ.மீ.க்கு இணை. இதைத் தமிழ் விவிலியம் "முழம்" என்று பெயர்க்கிறது.

சாலமோனின் கோவில் கருவறையின் அளவைகள்: நீளம் = 20 முழம்; அகலம் = 20 முழம்; உயரம் = 20 முழம் (காண்க: 1 அரசர்கள் 6:20). அது பத்து முழம் உயரமான ஒரு மேடையில் நிறுவப்பட்டது. கருவறையின் கீழ்த்தளமும் அதன் சுற்றுச்சுவர் மச்சு வரையான பகுதியும் லெபனான் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விலையுயர்ந்த கேதுரு மரத்தால் ஆனவை. கருவறையின் அடிப்பகுதியும் உட்பகுதியும் பசும்பொன் தகடுகளால் மூடப்பட்டிருந்தன (1 அரசர்கள் 6:21,30).

கருவறையில் ஒலிவ மரத்தால் ஆன, பத்து முழ உயரமான இரு கெருபுகள் (வானதூதர் போன்ற சிலை) வைக்கப்பட்டன. ஒவ்வொரு கெருபின் இறக்கை நீளம் ஐந்து முழம். அவை அருகருகே நின்றதால் அவற்றின் இறகுகள் கருவறையின் சுவர்களை இருபுறமும் தொட்டும், நடுவில் தொட்டும் இருக்குமாறு அமைந்தன (1 அரசர்கள் 6:23-28).

கருவறையின் நுழைவாயிலுக்கு இரட்டைக் கதவும் ஐங்கோண வடிவத்தில் கதவு நிலையும் நிறுத்தப்பட்டன. அவையும் தங்கத் தகடுகளால் மூடப்பட்டன (2 குறிப்பேடு 4:22). நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மெல்லிய சணல் ஆகிய நூல்களினால் நெய்யப்பட்ட ஒரு திரை தொங்கவிடப்பட்டது (2 குறிப்பேடு 3:14). கருவறைக்கு சாளரங்கள் இல்லை (காண்க: 1 அரசர்கள் 8:12). அது "கடவுள் தங்கி வாழும்" இடம் என்ற வணக்கத்துக்குரிய தலம் ஆனது.

கருவறையில் தொங்கிய திரைச்சீலையின் நிறங்களும் பொருளுடைத்தன. நீலம் வானத்தைக் குறிக்கவும், கருஞ்சிவப்பு பூமியைக் குறிக்கவும், அவ்விரு நிறங்களின் கலப்பாகிய ஊதா விண்ணகமும் மண்ணகமும் சந்திப்பதைக் குறிக்கவும் அடையாளமாயின.

சாலமோனின் கோவிலில் அமைந்த "தூயகம்"

[தொகு]

கோவிலின் இப்பகுதி "ஹெக்கால்" (Hekhal) என்று அழைக்கப்பட்டது. அது "திருவிடம்" அல்லது "தூயகம்" என்னும் பொருள்தரும். இப்பகுதிக்கு "மையப்பகுதி" அல்லது "கோவில்" அல்லது "அரண்மனை" என்றும் பொருள் உண்டு. அதன் அகலமும் உயரமும் கருவறையின் அளவுக்கு ஒத்திருந்தன. நீளம் மட்டும் 40 முழமாக இருந்தது (காண்க: 1 அரசர்கள் 6:17).

கோவிலின் தூயகம் விலையுயர்ந்த தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது. அப்பலகைகளும் பொன்னால் பொதியப்பட்டன. தூயகத்தின் மேல், பேரீச்சை,மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன (காண்க: 2 குறிப்பேடு 3:5). அவற்றின் மீதும் பொன்முலாம் பூசப்பட்டது. பொற்சங்கிலிகள் தூயகத்தைக் கருவறையிலிருந்து பிரித்தன.

தூயகத்தின் சுவர்களின்.உட்புறம் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுருப் பலகைகளால் மூடப்பட்டன. தூயகத்தின் கீழ்த்தளம் நூக்கு மரப்பலகைகளால் பாவப்பட்டது. தூயகத்தின் உட்புறமெங்கும் மூடியிருந்த கேதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும், விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை (காண்க: 1 அரசர்கள் 6:15-18).

சாலமோன் கோவிலின் "முன் மண்டபம்"

[தொகு]

இப்பகுதி "உலாம்" (Ulahm) என்று அழைக்கப்பட்டது. இது கோவிலின் நுழைவாயிலுக்கு முன்னால், கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது (காண்க: 1 அரசர்கள் 6:3; 2 குறிப்பேடு 3:4; 9:7). இப்பகுதியின் அளவைகள்: நீளம் = 20 முழம் (கோவிலின் அகலத்தைப் போல்); அகலம் = 10 முழம் (கோவிலுக்கு முன்னால்) (காண்க: 1 அரசர்கள் 6:3).

2 குறிப்பேடு 3:4 ஓர் எதிர்பாராத அளவைக் குறிப்பிடுகிறது. அதாவது, முன் மண்டபத்தின் உயரம் 120 முழம் என்று அங்கே உள்ளது. இவ்வளவு உயரம் இருந்தால் அது ஒரு "கோபுரமாக" மாறிவிடும். எனவே இந்த 120 முழம் என்னும் அளவை ஒருவேளை விவிலிய பாடச் சிதைவின் காரணமாகத் தோன்றியிருக்கலாம் என்று சில அறிஞர் கருதுகின்றனர்.

கோவிலின் முன் மண்டபத்தை அதற்கு அடுத்திருந்த அறையிலிருந்து பிரிக்க ஒரு சுவர் இருந்ததா என்று குறிப்பு இல்லை.

கோவிலின் முன் மண்டபத்தின் முன்னிலையில் இரு தூண்கள் நிறுத்தப்பட்டன. "யாக்கின்" என்றும் "போவாசு" என்றும் பெயர்கொண்ட அவ்விரு தூண்கள் ஒவ்வொன்றின் உயரமும் 18 முழம் (காண்க: 1 அரசர்கள் 7:21; 2 அரசர்கள் 11:3; 23:3).

சாலமோன் கோவிலின் தூண்கள்

[தொகு]

கோவில் முன்மண்டபத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்ட இரு தூண்களுள் ஒன்றாகிய "போவாசு" இடது புறமும் (வடக்கு), "யாக்கின்" என்னும் தூண் வலது புறமும் (தெற்கு) எழுப்பப்பட்டன (காண்க: 1 அரசர்கள் 7:15; 7:21; 2 அரசர்கள் 11:14; 23:3). அவற்றின் அளவைகளை எரேமியா குறிப்பிடுகிறார்: "தூண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. உள்ளே கூடாய் இருந்தது" (எரேமியா 52:21).

மேலும், "தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன" (எரேமியா 52:22).

இத்தூண்கள் பற்றிய விரிவான விவரிப்பு 1 அரசர்கள் 7:15-22இல் உள்ளது:

இங்கே சாலமோன் கோவில் தூண்கள் "வெண்கலத்தால்" ஆனவை என்றுளது. ஆனால் ஈயம் என்னும் உலோகம் அக்கால எபிரேயருக்குத் தெரியாததாலும், அதைக் கலந்தே தாமிரம் அல்லது துத்தநாகம் வெண்கலமாகும் என்பதாலும், இங்கே பயன்படுத்தப்படும் "nehosheth" என்னும் எபிரேயச் சொல் தாமிரம் அல்லது துத்தநாகத்தைக் குறிக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.

முன் மண்டபத்தில் நிறுத்தப்பட்ட "யாக்கின்" மற்றும் "போவாசு" என்னும் இரு தூண்களும் தனித்து நின்றன என்று தெரிகிறது.

சாலமோன் கோவிலின் அறைகள்

[தொகு]

கோவிலின் சுவரைச் சுற்றி, அதாவது கருவறையையும் தூயகத்தையும் சுற்றியிருந்த சுவரை ஒட்டி, தெற்கு மேற்கு வடக்கு என்று முப்புறமும் மேடை எழுப்பப்பட்டது. அந்த மேடையின் மேல் அடுக்கடுக்காகச் சிற்றறைகள் கட்டப்பட்டன.

அவற்றுள் கீழிருந்த அறைகள் ஐந்து முழ அகலமும், நடுவிலிருந்த அறைகள் ஆறு முழ அகலமும், மேலிருந்த அறைகள் ஏழு முழ அகலமும் கொண்டிருந்தன (காண்க: 1 அரசர்கள் 6:5-10). முதலில் ஒரு மட்டம் இருந்தது என்றும், பின்னர். இரண்டாம், மூன்றாம் மாடி அறைகள் கட்டப்பட்டன என்றும் சில அறிஞர் கூறுகின்றனர். இந்த அறைகள் பொருள்களைப் பாதுகாக்கும் கிடங்குகளாகப் பயன்பட்டிருக்கலாம்.

சாலமோன் கோவிலின் இரு முற்றங்கள்

[தொகு]

சாலமோன் கோவிலைச் சுற்றி, "உள் முற்றம்" என்றும் "பெரிய முற்றம்" என்றும் இரு முற்றங்கள் இருந்தன.

உள் முற்றம்

இது "குருக்களின் முற்றம்" என்றும் அழைக்கப்பட்டது. இந்த உள் முற்றத்தின் சுவர்கள் மூன்று வரிசை செதுக்கிய கற்களாலும், ஒரு வரிசக் கேதுரு கட்டைகளாலும் அமைக்கப்பட்டது (காண்க: 1 அரசர்கள் 6:36).

இம்முற்றத்தில் அமைந்திருந்த பொருள்கள்:

  • எரிபலி ஒப்புக்கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட பீடம் (2 குறிப்பேடு 15:8).
  • மூவாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும் அளவுடைய பிரமாண்டமான வெண்கலத் தொட்டி ("வார்ப்புக் கடல்")
  • வேறு பத்து வெண்கலத் தொட்டிகள்
  • இருபது முழ நீளம், இருபது முழ அகலம், பத்து முழ உயரம் கொண்ட வெண்கலப் பலிபீடம்
பெரிய முற்றம்

பெரிய முற்றம் என்னும் பகுதி கோவில் முழுவதையும் சுற்றி அமைந்தது (2 குறிப்பேடு 4:9). இங்குதான் மக்கள் வழிபாட்டுக்காக வந்து கூடினார்கள். எரேமியா இறைவாக்கினர் இங்கு நின்றுகொண்டுதான் மக்களை நோக்கி, எருசலேமுக்கு அழிவு வரும் என்று இறைவாக்கு உரைத்தார் (காண்க: எரேமியா 19:14; 26:2).

சாலமோன் கோவிலில் இருந்த "வார்ப்புக் கடல்"

[தொகு]

ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை 10 முழம் விட்டமும், 5 முழம் ஆழமும், 30 முழம் விளிம்புச் சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான தொட்டி "வார்ப்புக் கடல்" (brazen sea) அல்லது "வெண்கலக் கடல்" என்று அழைக்கப்பட்டது. வார்ப்புக் கடலை 1 அரசர்கள் 7:23-26 கீழ்வருமாறு விவரிக்கிறது:

1 அரசர்கள் நூல்படி, "வார்ப்புக் கடலின்" கொள்ளளவு 90 கன முழம் (2000 குடம்). ஆனால், 2 குறிப்பேடு நூல் "வார்ப்புக் கடல் மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்" என்று கூறுவது (2 குறிப்பேடு 4:5-6) மிகைக்கூற்றாக இருக்கலாம். "குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் 'கடல்' பயன்படுத்தப்பட்டது" என்றும் அங்கே கூறப்பட்டுள்ளது.

பெரிய அளவில் அமைந்த "வார்ப்புக் கடல்" தவிர, வேறு பத்து "வெண்கலத் தொட்டிகளும்" கோவிலின் உள் முற்றத்தில் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தொட்டியும் வெண்கலத்தால் ஆன ஒரு தள்ளுவண்டியின் மேல் வைக்கப்பட்டது.

அத்தள்ளுவண்டி எவ்வாறு இருந்தது என்பதை 1 அரசர்கள் நூல் (7:27-37) மிக விரிவாகவும் துல்லியமாகவும் விவரிக்கிறது. அதன் சுருக்கம் இதோ:

ஒவ்வொரு வண்டியும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமும் கொண்டது. அவற்றுக்குக் குறுக்குக் கம்பிகள் இருந்தன. அவை சட்டங்களின் மேல் இணைக்கப்பட்டிருந்தன. சட்டங்களில் இணைக்கப் பெற்றிருந்த கம்பிகளின்மேல் சிங்கங்கள், காளைகள், கெருபுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் மேலும் கீழும், சட்டங்களின் மேல் கைவினைத் தோரணங்கள் இருந்தன.

ஒவ்வொரு வண்டிக்கும் நான்கு வெண்கலச் சக்கரங்களும், வெண்கல அச்சுகளும், அதன் நான்கு மூலைகளிலும் தொட்டியைத் தாங்க நான்கு முட்டுகளும் இருந்தன. அந்த முட்டுகள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் தோரணங்கள் பதிக்கப் பெற்றிருந்தன. அதன் வாய்ப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. சக்கரங்களின் உயரம் ஒன்றரை முழம். சக்கரங்கள் தேர்ச்சக்கரங்கள் போல் செய்யப்பட்டிருந்தன. வண்டியின் பிடிகள், குறுக்குக் கம்பிகள் ஆகியவற்றின் மேல் கெருபுகள், சிங்கங்கள், ஈச்ச மரங்கள் ஆகியவை அவற்றுக்குரிய இடத்தில் சுற்றுத் தோரணங்களோடு செதுக்கப்பட்டன.

இவ்வாறு செய்யப்பட்ட பத்து வண்டிகளின் மீதும் பத்து வெண்கலத் தொட்டிகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு தொட்டியும் நாற்பது குடம் கொள்ளும். ஒவ்வொன்றின் அகலமும் நான்கு முழம். ஐந்து வண்டிகள் கோவிலின் தென்புறத்திலும் ஐந்து வண்டிகள் கோவிலின் வடபுறத்திலும் நிறுத்தப்பட்டன. வார்ப்புக் கடல் தென்கிழக்கு மூலையில் வைக்கப்பட்டது.

சாலமோன் கோவிலின் புகழ்

[தொகு]
சர் ஐசக் நியூட்டன் உருவாக்கிய சாலமோன் கோவிலின் வரைவு. ஆண்டு: 1728.
  • கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித தூர் நகர் கிரகோரி (St. Gregory of Tours) என்பவர் தொகுத்த "உலகத்தின் ஏழு அதிசயங்கள்" என்னும் பட்டியலில் அலெக்சாந்திரியா நகர் கலங்கரை விளக்கம், நோவாவின் பேழை ஆகியவற்றோடு சாலமோனின் கோவிலும் ஓர் உலக அதிசயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[12]
  • சிறந்த அறிவியலாரும், கணித மேதையும். இறையியலாருமாகிய சர் ஐசக் நியூட்டன் (1642-1727) என்பவர் தாம் எழுதிய The Chronology of Ancient Kingdoms என்னும் நூலில் சாலமோனின் கோவில் பற்றி விவரிக்க ஒரு முழு அதிகாரத்தையும் ஒதுக்கியிருக்கிறார். அக்கோவிலின் அளவைகள் அதிசயமானவை என்றும், அவற்றை நிர்ணயித்துச் செயல்பட சாலமோன் தனிப்பட்ட அறிவுக்கூர்மையும் இறையருளும் பெற்றிருந்தார் என்றும் அந்நூலில் குறிப்பிடுகிறார்.

சாலமோன் கோவிலுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்பு?

[தொகு]

சாலமோன் மன்னர் கட்டிய கோவில் மிக அழகாக அணிசெய்யப்பட்டிருந்தது. கோவிலின் சில பகுதிகள் பொன்னாலும் வெள்ளியாலும் வேயப்பட்டிருந்தன. அப்பொன்னும் வெள்ளியும் எங்கிருந்து வந்தன என்பதைக் கூறும்போது விவிலிய நூல்கள் "ஓபிர்" (Ophir) என்னும் நகரத்தைக் குறிப்பிடுகின்றன. ஓபிர் நாட்டுத் தங்கம் என்பது மிக உயர்வாகக் கருதப்பட்டதற்கு விவிலியத்தில் பல ஆதாரங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக,

  • அரசர்கள் 10 : 11: "ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டுவந்தன."
  • 2 குறிப்பேடு 9 : 10: "ஓபீரிலிருந்து பொன்னைக் கொண்டு வந்திருந்த ஈராமின் பணியாளரும் சாலமேனின் பணியாளரும் நறுமண மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தனர்."
  • 1 குறிப்பேடு 29 : 4: "கோவிற்சுவர்களில் பொதிவதற்காக மூவாயிரம் தாலந்து ஓபீரின் பொன்னும் ஏழாயிரம் தாலந்து தூய வெள்ளியும் கொடுக்கிறேன்."
  • திருப்பாடல்கள் 45 : 9: "அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!"
  • எசாயா 13 : 12 மானிடரைப் பசும் பொன்னைவிடவும் மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும் அரிதாக்குவேன்.
  • 1 அரசர்கள் 22 : 48: "யோசபாத்து தங்கம் கொண்டு வருவதற்காக ஓபீருக்குச் செல்லும் தர்சீசுக் கப்பல்களைக் கட்டினான்."
  • 2 குறிப்பேடு 8 : 18: "ஈராம் கப்பல்களையும் கடல் வல்லாரையும் தம் பணியாளர் பொறுப்பில் சாலமோனிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் அரசர் சாலமோனின் பணியாளர்களுடன் ஓபீருக்குச் சென்று, அங்கிருந்து பதினெட்டாயிரம் கிலோ கிராம் பொன் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர்."

மேற்குறிப்பிட்ட விவிலிய ஆதாரங்கள் தவிர, யோபு 22:24; 28:16 மற்றும் தோபித்து 13:17 ஆகிய இடங்களையும் காட்டலாம்.

விவிலியம் குறிப்பிடுகின்ற "ஓபிர்" இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலோ, இலங்கையின் கடற்கரையிலோ அமைந்த நகராக இருக்கலாம் என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர்.[13][14]

குறிப்புகள்

[தொகு]
  1. சாலமோனின் கோவில்.
  2. Stevens, Marty E. Temples, tithes, and taxes: the temple and the economic life of ancient Israel, pg. 3. Hendrickson Publishers 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1565639340
  3. Peake's commentary on the Bible
  4. Achtemeier, Paul J. and Roger S. Boraas. The HarperCollins Bible Dictionary. San Francisco, CA: HarperSanFrancisco, 1996. p. 1096.
  5. Langmead, Donald; Garnaut, Christine (2001). Encyclopedia of Architectural and Engineering Feats (3rd, illustrated ed.). ABC-CLIO. p. 314. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-112-0. solomon's temple.
  6. Handy, Lowell (1997). The Age of Solomon: Scholarship at the Turn of the Millennium. Brill. pp. 493–494. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-10476-1.
  7. "New Proposed Location for Solomon's Temple". Archived from the original on 2010-02-01. பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
  8. Peter J. Leithart, 1&2 Kings, Brazos Theological Commentary on the Bible p. 254 (2006).
  9. Peter J. Leithart, 1&2 Kings, Brazos Theological Commentary on the Bible p. 258 (2006).
  10. Peter J. Leithart, 1&2 Kings, Brazos Theological Commentary on the Bible p. 263 (2006).
  11. The Bible Unearthed என்னும் நூலை எழுதிய Finkelstein என்பவர் கருத்துப்படி, சாலமோனின் கோவிலின் அமைப்பு அக்காலத்து பெனீசிய கோவில்களைப் பெரிதும் ஒத்துள்ளது. பெனீசியர் வரைந்த வரைவைக் கொண்டு சாலமோனின் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று அகழ்வாய்வுச் சான்றுகள் உள்ளன.
  12. Clayton, Peter and Price, Martin: The Seven Wonders of the Ancient World (Routledge, 1988), pp. 162-63.
  13. "ஓபிர்" இந்திய நகரமா?
  14. "ஓபிர்" இலங்கை நகரமா?

மூலங்கள்

[தொகு]

மேல் ஆய்வுக்கு

[தொகு]
21ஆம் நூற்றாண்டு ஆதாரங்கள்
1945க்குப் பிற்பட்ட ஆதாரங்கள்
1945க்கு முற்பட்ட ஆதாரங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலமோனின்_கோவில்&oldid=4120597" இலிருந்து மீள்விக்கப்பட்டது