உள்ளடக்கத்துக்குச் செல்

உபர்கோட் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபர்கோட் கோட்டை
Uparkot Fort
பகுதி: குசராத்து
கிர்நார், குசராத்து, இந்தியா
சூடாசாமா வம்சத்தின் மன்னர் கிரகரிப்புவால் மீண்டும் கட்டப்பட்டதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்[1]
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது குசராத்து அரசு
நிலைமை இடிபாடுகள்
இட வரலாறு
கட்டியவர் சூடாசாமா வம்ச கிரகரிப்பு[2]
கட்டிடப்
பொருள்
கருங்கல் (பாறை) மற்றும் சுண்ணாம்புக் கலவை

உபர்கோட் கோட்டை (Uparkot Fort) இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள ஜூனாகத் நகரத்திற்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

மௌரியர்களின் ஆட்சிக் காலத்தில் கிர்நார் மலையின் அடிவாரத்தில் ஒரு கோட்டையும் நகரமும் நிறுவப்பட்டு, குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் மைத்திரகப் பேரரசினால் செளராட்டிர பிராந்தியத்தின் தலைநகரம் சூனாகத்திலிருந்து வல்லபிக்கு மாற்றப்பட்டபோது இக்கோட்டையும் நகரமும் அதன் முக்கியத்துவத்தை இழந்தன. சூடசாமா வம்சத்தினர் சவாடா ஆட்சியாளரிடமிருந்து வாமன்சுதாலியை (வந்தாலி) கையகப்படுத்தி சூனாகத்தைச் சுற்றிலும் குடியேறினர்.[3] என்பது வரலாறாகும்.

சூடாசாமா ஆட்சியாளர் கிரகரிபு (ஆட்சி சுமார் 940-982 கி.பி.) [4] பழைய கோட்டையை காட்டில் இருந்து நீக்கி, கோட்டையின் அடித்தளத்தை இப்போது இருப்பதைப் போல அமைத்தார் என்று ஏமசந்திர ஆச்சாரியாவின் திவ்யசுரயாவில் கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து முடிவு செய்யலாம். புராணக்கதைகள் அதன் மறு கண்டுபிடிப்பைப் பற்றி பேசுகின்றன[3].

கட்டிடக்கலையும் முக்கிய இடங்களும்

[தொகு]

உபர்கோட் கோட்டை பழைய கோட்டைகளில் மிகவும் வித்தியாசமான கோட்டையாகும். இக்கோட்டையின் கிழக்கிலுள்ள உயர்ந்த நிலப்பகுதியில் எழுப்பப்பட்ட கைப்பிடிச் சுவர்கள் குறைந்தது மூன்று மடங்கு அளவுக்கு உயர்த்தி கட்டப்பட்டுள்ளன[5]. தொலைவிலிருந்து தாக்கப்படும் துப்பாக்கி முதலான ஏவுகணை தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற இந்த உயரம் உதவியது.

கோட்டையின் நுழைவாயில் நகரத்திற்கு அப்பால் உள்ள கிழக்குச் சுவரில் ஒன்று மற்றொன்றுக்குள்ளாக அமையும் வகையில் மூன்று நுழைவாயில்களைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டைச் சுவர்கள் 60 முதல் 70 அடி உயரத்திற்கு நிமிர்ந்து பெரிய பெரிய கட்டடங்களை உருவாக்குகிறது. உட்புற நுழைவாயில் இந்தியக் கட்டிடக்கலையின் படைப்பான தோரண அலங்கார வளைவுக்கு ஒரு மாதிரியாக விளங்குகிறது[5].

வாயிலுக்கு மேலே உள்ள பாதுகாப்பு அரணில் 1450 ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் மண்டலிகாவின் கல்வெட்டு ஒன்று உள்ளது. சுமார் 150 முழம் தொலைவு இடதுபுறத்தில் சீத்தாப்பழ தோப்பையும் 17 அடி நீளம் மற்றும் 4 அடி 8 அங்குல சுற்றளவு கொண்ட பெரிய 10 அங்குல துளையுள்ள உலோக பீரங்கி ஆகியவற்றையும் அங்கு காணலாம். இந்த பீரங்கித் துப்பாக்கி தியூவிலிருந்து கொண்டு வரப்பட்டது, உதுமானியப் பேரரசின் துருக்கியர்கள் 1538 ஆம் ஆண்டு மேற்கொண்ட தியூ முற்றுகையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இப்பீரங்கியை அங்கு விட்டுச் சென்றனர். கோட்டை முகப்பில் ஒரு அரபு கல்வெட்டு உள்ளது, சலீம் கானின் மகனும் அரேபியா மற்றும் பெர்சியாவின் சுல்தானுமான சுல்தான் சுலைமான் உத்தரவுக்கு இணங்க எல்லாம்வல்ல கடவுளின் சேவைக்குப் பயன்படுத்தவே இங்குள்ள பீரங்கி உருவாக்கப்பட்டது என்று அக்கல்வெட்டில் உள்ளதை மொழிபெயர்க்கலாம். 1531 இல் தலைநகரம் எகிப்தின் எதிரிகளையும் உண்மைக்கு புறம்பானவர்களையும் விரட்டியடித்து ஈட்டிய வெற்றியால் சுல்தான் புகழ் பெற்றார் என்பதை பறைசாற்ற துப்பாக்கியின் பின்பகுதியில் அம்சாவின் மகன் முகம்மனின் வெற்றி என பொறிக்கப்பட்டுள்ளது. கோட்டையின் தெற்குப் பகுதியில் தியூவிலிருந்து கொண்டுவரப்பட்ட 13 அடி நீளமும், 4 அடி விட்டம் கொண்ட சூடனல் என்று அழைக்கப்படும் மற்றொரு பெரிய பீரங்கி வைக்கப்பட்டுள்ளது[5] இந்த பீரங்கிகள் நீலம் மற்றும் மானேக் என்ற பெயர்களால் அறியப்படுகின்றன.

இதற்கு அருகில் மகமூத் பெகடாவால் கட்டப்பட்ட இந்து கோவிலின் பொருட்களிலிருந்து உருவான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. பள்ளிவாசல் மிகவும் பாழடைந்து காணப்பட்டாலும் அங்கு ஒரு மெலிதான வெற்றுக் கம்பம் நிற்கிறது. வெளியே அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மூலம் மாடியின் கூரைக்கு ஏறலாம்.[5]

பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள நூரி சாவின் கல்லறை மிகவும் விசித்திரமாக குழிவான விதானங்களால் அலங்கரிக்கப்பட்டும் கதவின் மேல் அழகிய வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உபர்கோட்டில் ஆதி சாடி அல்லது ஆதி காடி வாவ் என்றழைக்கப்படும் இரண்டு கிணறுகள் உள்ளன.[5]. இவை பண்டைய காலத்தில் ஆட்சியாளர்களின் அடிமைப் பெண்களால் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உபர்கோட் குகைகள் 2 முதல் 3 ஆம் நூற்றாண்டு புத்த குகைகளாகும். இது பண்டைய காலங்களில் புத்த பிக்குகள் பயன்படுத்திய இரட்டைக் கதை குகை வளாகமாகும்.

நவாபி ஏரி என்பது உபர்கோட்டில் அமைந்துள்ள ஒரு சதுரவடிவ செயற்கை ஏரியாகும்.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Soundara Rajan, K. V. (1985). "Junagadh".
  2. Soundara Rajan, K. V. (1985). "Junagadh".
  3. 3.0 3.1 Harold Wilberforce-Bell (1916). The History of Kathiawad from the Earliest Times. London: William Heinemann. pp. 54–83. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  4. Shastri, Hariprasadji (1976). Gujaratlo Rajkiya Ane Sanskritik Itihas Granth Part-iii Itihasni Gujaratlo Rajkiya Ane Sanskritik Itihas Granth Part-iv Solanki. pp. 163–165.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 A handbook for travellers in India, Burma, and Ceylon . London : J. Murray ; Calcutta : Thacker, Spink, & Co. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=உபர்கோட்_கோட்டை&oldid=3814392" இலிருந்து மீள்விக்கப்பட்டது