இரேச்சர்ல நாயக்கர்கள்
இரேச்சர்ல நாயக்கர்கள் (Recherla Nayakas) ஓர் ஆந்திர வம்சமாகும். இவர்கள் முசுனூரி நாயக்கர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்தனர். மேலும்,14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் (ஆட்சி. 1368-1435) தெலங்காணா பகுதியில் ஆதிக்க சக்தியாக மாறினார்கள்.[1] இவர்கள் இந்த காலகட்டத்தில் பாமினி சுல்தானகத்தின் எல்லையான கோல்கொண்டாவின் தென்கிழக்கில் உள்ள இரச்சகொண்டாவை தளமாகக் கொண்டிருந்தனர். மேலும் தேவரகொண்டாவில் இரண்டாவது தளத்தையும் கட்டினார்கள். [2]
வரலாறு
[தொகு]ஆந்திராவின் நவீன வரலாற்றாசிரியர்கள் இவர்களை வெலமாக்களுடன் அடையாளப்படுத்தினாலும், வெலமா சமூகத்தின் உருவாக்கம் பிற்காலத்தில், பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் ஆரம்பமானது என வரலாற்றாளர் சிந்தியா தால்போட் கூறுகிறார். . [3]
போர்கள்
[தொகு]இரேச்சர்ல நாயக்கர்கள் அமங்கலில் தங்கள் முதல் தளத்தை நிறுவியதாக நம்பப்படுகிறது. அவர்களின் தலைவர் சிங்கம நாயக்கன் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டக் காரணத்தால் அவரது மகன் அனபோத நாயக்கன் கொலைக்கு முசுனுரியின் கப்பய நாயக்கனைக் குற்றம் சாட்டி வாரங்கல் மீது படையெடுத்துச் சென்றார். கி.பி.1368 இல் பீமாவரத்தில் நடந்த ஒரு போரில், கப்பய நாயக்கன் கொல்லப்பட்டார் . மேலும் தெலங்காணாவின் கட்டுப்பாட்டை இரேச்சர்லாக்கள் கைப்பற்றினர். [4] அனபோத நாயக்கன் பின்னர், 1369 இல் வெளியிடப்பட்ட ஒரு கல்வெட்டில், தனது தாத்தா தச்சய நாயக்கன் காக்கத்தியர்களின் கீழ் ஒரு தலைவராக பணியாற்றியதாகவும், இரண்டாம் பிரதாபருத்திரன் அவருக்கு பாண்டிய-ராஜ-கஜ-கேசரி (பாண்டிய யானைகளுக்கு எதிரான சிங்கம்) என்ற பட்டத்தை வழங்கியதாகவும் கூறுகிறார்.[5] நல்கொண்டா மாவட்டத்திலுள்ள இரச்சகொண்டா மற்றும் தேவரகொண்டா ஆகிய இடங்களில் இரேச்சர்ல நாயக்கர்கள் இரண்டு கோட்டை நகரங்களைக் கட்டினார்கள். [1]
இரேச்சர்கள் கடலோர ஆந்திரப் பகுதியில் ரெட்டி வம்சத்தை தங்கள் போட்டியாளர்களாகக் கொண்டிருந்தனர். 1364 இல் முசுனுரி நாயக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட அதே ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி அவர்கள் ஆரம்பத்தில் பாமினி சுல்தானகத்துடன் இணைந்தனர். அதே சமயம் ரெட்டிகள் விஜயநகரப் பேரரசுடன் இணைந்தனர். ராஜமன்றி ரெட்டிகள் மற்றும் கொண்டவீடு ரெட்டிகள் ஆகிய இரு ரெட்டி குலத்தினரிடையே பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கொண்டவீடு ரெட்டிகள் பாமினிகளுக்கு தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டனர். இதே சமயம் இரேச்சர்லாக்கள் விஜயநகரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். 1419 இல் பனகல் கோட்டையில் (வனபர்த்திக்கு அருகில்) ஒரு பெரிய போர் நடந்தது. இதில் விஜயநகர, இரேச்சர்கள் மற்றும் ராஜமன்றி ரெட்டிகளின் கூட்டணி வெற்றி பெற்றது. இருப்பினும், இரேச்சர்கள் விசுவாசத்தை மாற்றியதால் 1420களில் பாமினி சுல்தானகத்தின் தாக்குதலுக்கு ஆளாகினர். சுல்தான் 1435 இல் வாரங்கல் மற்றும் இரச்சகொண்டாவைக் கைப்பற்றினார். அதன்பிறகு, இரேச்செர்லர்களின் தலைவர்கள் தெலங்காணா முழுவதும் சிதறி சிறியக் குழுக்களாக மாறினர். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Talbot 2001, ப. 177.
- ↑ Somasekhara Sarma 1946, ப. 23.
- ↑ Talbot 2001, ப. 191.
- ↑ Prasad 1988, ப. 172.
- ↑ Talbot 2001, ப. 179.
- ↑ Talbot 2001, ப. 180-181.
- Sources
- Prasad, G. Durga (1988), History of the Andhras up to 1565 A. D. (PDF), Guntur: P. G. Publishers
- Somasekhara Sarma, Mallampalli (1946), History of the Reddi Kingdoms (Circa. 1325 A.D., to circa. 144B A.D.), Waltair: Andhra University
- Talbot, Cynthia (2001), Pre-colonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19803-123-9