இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்
இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடத்தில் ஒருவருக்குப் பின் ஒருவர் பதவி ஏற்பது தொடர்பான ஒரு கருத்து ஆகும். இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தினை காலியான அரியணை அல்லது வெறுமையான பதவியிடம் எனப் பொருள்படும் இலத்தீன் சொல்லான சேதே வெகாந்தே (Sede vacante) என்று கத்தோலிக்க திருச்சபையின் சட்டத் தொகுப்பு (Canon Law) குறிப்பிடுகின்றது. இது ஆயர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தினையும் குறிக்கும்.
ரோம் மறைமாநிலம் தவிர பிற மறைமாநிலங்களில்
[தொகு]ஒரு மறைமாநில ஆயர் பணி இடமாற்றம் பெற்றாலோ, ஓய்வு பெற்றாலோ அல்லது இயற்கை எய்தினாலோ, மற்றோர் ஆயர் நியமிக்கப்படும் வரை அது காலியான அரியணையின் காலமாகக் கொள்ளப்படும்.
மறைமாவட்ட ஆட்சிப்பீடம் காலியாகும் போது, ஏற்கனவே இணை ஆயர் (coadjutor bishop) நியமிக்கப்பட்டிருந்தால் அவர் உடனே தாம் நியமிக்கப்பட்ட மறைமாவட்டத்தின் ஆயராகிறார்; அதற்கு அவர் சட்டமுறைமைப்படி அதன் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.[1]
ஒரு மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி உள்ளது என்ற அறிவிப்பைப் பெற்றுக்கொண்ட எட்டு நாள்களுக்குள், மறைமாவட்ட ஆலோசகர் குழாமினால் (the college of consultors) ஒரு மறைமாவட்ட நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அவர் மறைமாவட்டத்தை இடைப்பட்ட காலத்தில் ஆள்வார்.[2] மறைமாநில நிர்வாகி 35 அகவையைத் தாண்டிய ஒரு குருவாகவோ, ஆயராகவோ இருத்தல் வேண்டும்.
மறைமாவட்ட நிர்வாகி, ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு, குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் சட்டமுறைமைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அவரின் நியமனம் உயர் மறைமாவட்ட ஆயருக்கு உரியது; உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமே ஆயரின்றி இருந்தால் அல்லது உயர் மறைமாவட்ட ஆட்சிப்பீடமும் சார்புநிலை ஆட்சிப்பீடமும் ஆயரின்றி இருந்தால் மறைமாவட்ட நிர்வாகியின் நியமனம் பதவி உயர்வால் மூத்த சார்புநிலை ஆயருக்கு உரியது.[3]
மறைமாவட்ட ஆட்சிப்பீடம் ஆயரின்றி இருக்கும்போது மறைமாவட்டத்தை மறைமாவட்ட நிர்வாகியின் நியமனத்திற்கு முன் ஆளுகின்ற ஒருவர், ஆயர் பொதுப் பதில்குருவுக்குச் (தலைமை குரு/vicar general) சட்டம் வழங்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். மறைமாவட்ட நிர்வாகி காரியங்களின் இயல்பினால் அல்லது சட்டத்தினாலேயே விலக்கப்பட்டவை நீங்கலாக, ஒரு மறைமாவட்ட ஆயரின் கடமைகளால் பிணைக்கப்பட்டுள்ளார்; அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.[4]
ரோம் மறைமாநிலத்தில்
[தொகு]திருத்தந்தையின் மறைவாலோ, அல்லது பணித்துறப்பாலோ ஆட்சிபீடம் காலியாகும் போது ரோம் மறைமாநிலத்தின் ஆட்சிப் பீடம் காலியானதாக கொள்வர். இந்த காலத்தில் திருச்சபையை கருதினால்மார்கள் ஆள்வர். ஆனால், அவர்கள் தாங்கள் முன்னர் வகித்த பதவிகள் அனைத்தையும் இழப்பர்.
ரோம் நகரில் உள்ள கருதினால்மார்கள், அகில உலகில் உள்ள மற்ற கருதினால்களின் வருகைக்காக 15 நாட்கள் காத்திருப்பர். பின்னர் புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுவர்.
19ஆம் நூற்றாண்டுக்கு பின் நிகழ்ந்த திருப்பீட காலியான அரியணை காலங்கள்
[தொகு]முன்னிருந்த திருத்தந்தை | பின்வந்த திருத்தந்தை | துவக்கம் | முடிவு | கால அளவு |
---|---|---|---|---|
ஆறாம் பயஸ் | ஏழாம் பயஸ் | 29 ஆகஸ்ட் 1799 | 14 மார்ச் 1800 | 207 நாட்கள் |
ஏழாம் பயஸ் | பன்னிரண்டாம் லியோ | 20 ஆகஸ்ட் 1823 | 28 செப்டம்பர் 1823 | 39 நாட்கள் |
பன்னிரண்டாம் லியோ | எட்டாம் பயஸ் | 10 பெப்ரவரி 1829 | 31 மார்ச் 1829 | 49 நாட்கள் |
எட்டாம் பயஸ் | பதினாறாம் கிரகோரி | 30 நவம்பர் 1830 | 2 பெப்ரவரி 1831 | 63 நாட்கள் |
பதினாறாம் கிரகோரி | ஒன்பதாம் பயஸ் | 1 ஜூன் 1846 | 16 ஜூன் 1846 | 15 நாட்கள் |
ஒன்பதாம் பயஸ் | பதின்மூன்றாம் லியோ | 7 பெப்ரவரி 1878 | 20 பெப்ரவரி 1878 | 13 நாட்கள் |
பதின்மூன்றாம் லியோ | பத்தாம் பயஸ் | 20 ஜூலை 1903 | 4 ஆகஸ்ட் 1903 | 15 நாட்கள் |
பத்தாம் பயஸ் | பதினைந்தாம் பெனடிக்ட் | 20 ஆகஸ்ட் 1914 | 3 செப்டம்பர் 1914 | 14 நாட்கள் |
பதினைந்தாம் பெனடிக்ட் | பதினொன்றாம் பயஸ் | 22 ஜனவரி 1922 | 6 பெப்ரவரி 1922 | 15 நாட்கள் |
பதினொன்றாம் பயஸ் | பன்னிரண்டாம் பயஸ் | 10 பெப்ரவரி 1939 | 2 மார்ச் 1939 | 20 நாட்கள் |
பன்னிரண்டாம் பயஸ் | இருபத்திமூன்றாம் யோவான் | 9 அக்டோபர் 1958 | 28 அக்டோபர் 1958 | 19 நாட்கள் |
இருபத்திமூன்றாம் யோவான் | ஆறாம் பவுல் | 3 ஜூன் 1963 | 21 ஜூன் 1963 | 18 நாட்கள் |
ஆறாம் பவுல் | முதலாம் யோவான் பவுல் | 6 ஆகஸ்ட் 1978 | 26 ஆகஸ்ட் 1978 | 20 நாட்கள் |
முதலாம் யோவான் பவுல் | இரண்டாம் யோவான் பவுல் | 28 செப்டம்பர் 1978 | 16 அக்டோபர் 1978 | 18 நாட்கள் |
இரண்டாம் யோவான் பவுல் | பதினாறாம் பெனடிக்ட் | 2 ஏப்ரல் 2005 | 19 ஏப்ரல் 2005 | 17 நாட்கள் |
பதினாறாம் பெனடிக்ட் | பிரான்சிசு | 28 பெப்ரவரி 2013 | 13 மார்ச் 2013 | 13 நாட்கள் |