ஆல்க்கைன்
ஆல்க்கைன் (Alkyne) என்பது கரிம வேதியியலில் குறைந்தபட்சம் ஒரு கார்பன்-கார்பன் முப்பிணைப்பையாவது கொண்டுள்ள நிறைவுறாத ஐதரோகார்பன்களைக் குறிக்கும் [1]. வேதி வினைக்குழு எதுவும் பிணைக்கப்படாமல் ஒரே ஒரு முப்பிணைப்பை மட்டும் பெற்று. ஒத்தவரிசை சேர்மங்களாக உருவாகும் எளிய வளையமில்லா ஆல்க்கைன்கள் பொதுவாக CnH2n−2 என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். ஐயுபிஏசி முறையில் எத்தீன் என்று அழைக்கப்படும் C2H2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் அசிட்டலீன் என்று ஒரு சேர்மம் காணப்பட்டாலும் பாரம்பரியமாக ஆல்க்கைன்கள் அசிட்டலீன்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன.மற்ற ஐதரோகார்பன்களைப் போலவே, ஆல்கைன்கள் பொதுவாக நீர் விலக்கிகள் ஆகும். ஆனால் அவை மிகவும் தீவிரமாக வினைபுரிகின்றன. முப்பிணைப்புக் கொண்ட கார்பனுடன் இணைக்கப்பட்ட ஐதரசனைக் கொண்டிருப்பதால் அசிட்டிலீன் மற்ரும் பிற ஆல்க்கைன்களில் உள்ள ஐதரசன் அமிலப் பண்பைப் பெற்றுள்ளது. எனவே ஆல்கேன்கள் மற்ரும் ஆல்க்கீன்கள் போல அல்லாமல் இவை அமிலங்கள் போலச் செயல்படுகின்றன.
வேதிப்பண்புகள்
[தொகு]ஆல்க்கீன்களைக் காட்டிலும் ஆல்க்கைன்கள் மிகவும் நிறைவுறா தன்மையைக் கொண்டுள்ளன. எனவே இவற்றுடன் இரண்டு சம அளவு புரோமின் அணுக்கள் சேரமுடியும். ஆல்க்கீன்களுடன் ஒரே ஒரு சம அளவு புரோமின் மட்டுமே சேரும். ஆல்க்கைன்களின் பிற வேதிவினைகள் பின்வருமாறு கொடுக்கப்படுகின்றன. சிலவகை வினைகளில் ஆல்க்கீன்களைக் காட்டிலும் ஆல்க்கைன்கள் குறைந்த அளவு வினைத்திறனையே வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக ஒரு மூலக்கூறில் யீன் மற்றும் ஐன் குழுக்கள் இருந்தால் கூட்டு வினை யீனில் நிகழ்கிறது.[2]. ஆல்கீன்களை விட ஆல்க்கைன்கள் பலபடியாதல் வினைக்கு அதிகமாக ஆளாகின்றன. இதனால் விளையும் பலபடிகள் ஆல்க்கைன்களைக் கொண்டிருப்பதில்லை. இவை குறைக்கடத்தி பண்புகளைப் பெற்றுள்ளன.
ஒரு கார்பன் அணுவின் எலக்ட்ரான் கவர் தன்மை அது அதனை அடுத்த கார்பன் அணுவுடன் எத்தனை பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்ததாகும். σ எலக்ட்ரான்களைக் காட்டிலும் π எலக்ட்ரான்கள் தளர்வாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே π பிணைப்புகளுடன் கூடிய கார்பனைச் சூழ்ந்துள்ள எலக்ட்ரான் செறிவு σ பிணைப்புகளுடன் கூடிய கூடிய கார்பனை விடக் குறைவாகும். σ பிணைப்புகள் மட்டுமே கொண்ட கார்பனைவிட ஒரு π பிணைப்பு கொண்ட கார்பன் சிறிதளவு நேர்மின் சுமை கொண்டதாக உள்ளது. அசிட்டிலீனுள்ள புரோட்டான் எத்திலீன் அல்லது மீத்தேனிலுள்ளதைக் காட்டிலும் சுலபமாக விடுவிக்கப்படுகின்றது. இதனால் அசிட்டிலீன் அமிலத் தன்மை கொண்டதாக உள்ளது. இருப்பினும் அந்த அமிலத்தன்மை குறைவானதாகவே நீரைவிட வலிமை குறைவாக இருக்கும். pKa மதிப்பு 25 ஆகும். அசிட்டைலீனில் உள்ள அமில ஐதரசன் கார உலோகங்களால் பதிலீடு செய்யப்பட்டு பல வழிப்பொருட்கள் உருவாகின்றன. வெள்ளி மற்றும் தாமிரக் கரைசல்களுடன் வினைபட்டு கன உலோக அசிட்டலைடுகள் உருவாகின்றன.
கட்டமைப்பு
[தொகு]அசிட்டிலைனில் H–C≡C பிணைப்பின் பிணைப்புக் கோணம் 180° ஆகும். இப்பிணைப்பு ஒழுங்கின் காரணமாக ஆல்க்கைன்கள் குச்சி வடிவத்தைக் கொண்டுள்ளன. பென்சைன் நிலைப்புத்தன்மை அற்றதாகும். ஆல்க்கைனிலுள்ள C≡C பிணைப்பு இடைவெளி 121 பைக்கோ மீட்டர் ஆல்க்கீனிலுள்ள பிணைப்பிலுள்ள 134 பைக்கோமீட்டர் C=C பிணைப்பை விட குறைவாகும். ஆல்கேன்களில் உள்ள C–C பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 153 பைக்கோ மீட்டர் ஆகும்.
முப்பிணைப்பு மிகவும் வலிமை உடையதாகும். அதனுடைய பிணைப்பு வலிமை 839 கிலோ யூல்/மோல் ஆகும். முதல் பை பிணைப்பு 268 கிலோ யூல்/மோல் வலிமையையும் இரண்டாவது பை பிணைப்பு 202 கிலோ யூல்/மோல் வலிமையையும் வழங்குகின்றன. எசு மற்றும் பி ஆர்பிட்டல்களின் மேற்பொருந்தலால் முப்பிணைப்பு தோன்றுகிறது என மூலக்கூறு ஆர்பிட்டல் கொள்கை பிணைப்பைக் குறித்து விளக்கமளிக்கிறது. ஆல்க்கைனில் உள்ள கார்பன் அணுக்கள் எசுபி இனக்கலப்பு அடைகின்றன என இணைதிறன் பிணைப்புக் கொள்கை இதை விவரிக்கிறது. அவை ஒவ்வொன்றும் இரண்டு இனக்கலப்பில்லாத பி ஆர்பிட்டல்களையும் இரண்டு எசுபி இனக்கலப்பு ஆர்பிட்டல்களையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு அணுவிலிருந்தும் மேற்பொருந்திய ஒரு எசுபி ஆர்பிட்டல்கள், எசுபி-எசுபி சிக்மா பிணைப்பாக உருவாகின்றன. பி ஆர்பிட்டல்கள் இவ்வாறு ஒன்றின் மேலொன்றாக மேற்பொருந்தி இரண்டு பை பிணைப்புகள் உருவாகின்றன. ஆக மொத்தமாக முப்பிணைப்புகள் இவ்வாறு தோன்றுகின்றன. எஞ்சியிருக்கும் ஒவ்வொரு கார்பன் அணுவிலும் உள்ள எசுபி ஆர்பிட்டல்கள் சிக்மா பினைப்பாக உருவாகி பிற அணுக்களுடன் இணைகின்றன. உதாரணமாக மூல அசிட்டைலீனில் உள்ள ஐதரசன் அணுக்கள். கார்பன் அணுவின் எதிர் எதிர் திசையில் இரண்டு எசுபி ஆர்பிட்டல்களும் முன்னோக்கியுள்ளன.
உள் மற்றும் விளிம்பு நிலை ஆல்க்கைன்கள்
[தொகு]உட்புற ஆல்க்கைன்கள் ஒவ்வொரு அசிட்டைலீனிக் கார்பனுடன் இணைந்து கார்பன் மாற்றீடுகளுடன் தோன்றுகின்றன. டைபீனைல் அசிட்டைலீன் மற்றும் 3-எக்சைன் இதற்கு உதாரணங்களாகும். விளிம்பு நிலை ஆல்க்கைன்கள் RC2H என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. மெத்தில் அசிட்டைலீன் இதற்கு உதாரணமாகும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alkyne. Encyclopædia Britannica
- ↑ Rosser; Williams (1977). Modern Organic Chemistry for A-level. Great Britain: Collins. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0003277402.
{{cite book}}
: Unknown parameter|last-author-amp=
ignored (help)